ஸ்ரீமன் நிகமாந்த மகாதேசிகன், வேதாந்த தேசிகன். இவர் காஞ்சிபுரம் அருகில் தூப்புல் கிராமத்தில், புரட்டாசி மாதம் திருவோணத்தில் அவதரித்தவர். தந்தையார் அனந்த சூரி. தாயார் தோத்தாரம்மாள். இவர் தனது ஆச்சாரியர் அப்புள்ளாரிடமிருந்து எல்லாவித கிரந்தங்களையும் தெரிந்து கொண்டார். கருட மந்திர உபதேசமும் பெற்றார். ஹயக்ரீவ அருளும் பெற்றவர்.
ஒருமுறை காஞ்சிபுரத்திலே ஒரு பாம்பாட்டி இவர் முன் வந்து பாம்புகளை ஓடவிட்ட போது, இவர் தரையிலே சில கோடுகளைக் கீறினார். பாம்புகளினால் அந்தக் கோட்டைத் தாண்ட முடியவில்லை.
தேசிகர் கருட மந்திரத்தை உச்சரித்தார். வானத்திலிருந்து கருடர் வந்து எல்லாப் பாம்புகளையும் எடுத்துச் சென்றுவிட்டது. பாம்பாட்டி வருந்தினான். உடனே தேசிகர் மனமிரங்கி, கருட தண்டகத்தைப் பாடினார். கருடன் பாம்புகளை எல்லாம் கீழே கொண்டுவந்து போட்டுவிட்டது.
திருக்கோவிலூரிலே ஒரு கடலை வியாபாரி வீட்டிலே அவர் தங்கியிருந்த போது, ஹயக்ரீவரினுடைய நைவேத்தியத்தினைச் செய்து உபவாசம் இருந்தார். வியாபாரி ஓடிவந்து ஒரு வெள்ளைக்குதிரை தன் வீட்டில் உள்ள கிடங்கிலே புகுந்து கடலையை மேய்வதாகச் சொன்னார்.
ஹயக்ரீவரே அவ்வாறு வந்ததாக எண்ணிய தேசிகர், ஒரு குடத்திலே பாலைக் கொண்டுவரச் சொல்லி ஹயக்ரீவருக்கு அமுது செய்த உடன், குதிரையும் மறைந்தது.
ஒரு சமயம் இவருக்கும் ஒரு மகா வித்வானுக்கும் போட்டி நடந்தது. திருவரங்கனுக்கு முன்பாக ஆயிரம் ஸ்லோகம் ஒரே இரவு முடிவதற்குள் பாடவேண்டும் என்பது. பாடினால் கவிதார்க்கிக சிம்மம் என்ற பட்டம் வழங்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அந்த இன்னொரு கவியால் 1000 பாடல்கள் பாடமுடியவில்லை. 300 பாட்டுகளே அவரால் எழுத முடிந்தது.
ஆனால் திருவரங்கனுடைய பாதுகையைப் பற்றி, பாதுகா சகஸ்ரம் என்ற தலைப்பிலே விடிவதற்குள்ளே 1000 ஸ்லோகங்களைத் தேசிகன் பாடிவிட்டார். திருவரங்கனுடைய சன்னிதியிலே பாடினார். அதன்மூலம் கவிதார்க்கிக சிம்மம் என்ற பட்டமும் இவருக்குக் கிடைத்தது.
அமிர்த ரஞ்சனி, அதிகார சங்க்ரகம், அமிர்தாசுவாதினி, பரமபதசோபானம், பரமபத பங்கம், மெய்விரத மான்யம் என்ற பிரபந்தங்களை அருளியுள்ளார்.
அதே போல் அர்த்த பஞ்சகம், அடைக்கலப் பத்து, ஸ்ரீ வைஷ்ணவ தினசரி, திருச்சின்னமாலை, பன்னிருநாமம், திருமந்திராச் சுருக்கு, த்வயச்சுருக்கு, சரமஸ்லோகம், கீதார்த்த சங்க்ரகம், மும்மணிக்கோவை, நவமணி மாலை, பிரபந்த சாரம், ஆகார நியமம் முதலியவற்றையும் அருளியவர். ஸ்ரீ தேசிகன் அவர்கள் 101 ஆண்டுகள் இந்த உலகிலே எழுந்தருளியிருந்தார்.
ஓம் நமோ நாராயணாய.