முருகா சரணம். கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரம், பெரிய கார்த்திகை என்று கொண்டாடப் படுகிறது. இந்த நல்ல நாளிலே இந்தத் தொடரை ஆரம்பிக்கிறோம்.
வாரணத்தானை அயனை விண்ணோரை மலர்க்கரத்து
வாரணத்தானை மகத்து வென்றோன் மைந்தனை; துவச
வாரணத்தானைத் துணை நயந்தானை; வயல் அருணை
வாரணத்தானைத் திறைகொண்ட யானையை வாழ்த்துவனே
கந்த சஷ்டி என்றால் நம் நினைவுக்கு வருவது, திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில் நாதன் நடத்தும் சூர சம்ஹாரம். முருகப்பெருமானைப் பற்றி விவரிக்கும் சில நூல்கள் ஸ்காந்தம் எனப்படும் ஸ்கந்த புராணம், அதனைத் தமிழில் தெரிவிக்கும் கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்த புராணம், நக்கீரரின் திருமுருகாற்றுப்படை முதலிவை. இவற்றைப் போல், முருக பக்தர்களால் பெரிதும் போற்றப்படுவது, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் முதலான நவமணி நூல்கள். திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி, கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, திருவகுப்பு ஆகியவை நவமணி நூல்களாகும்.
பூர்வ, பச்சிம, தக்ஷிண, உத்தர திக்குள பக்தர்கள், “அற்புதம்” என ஓதும் சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழில், கந்த புராண நிகழ்வுகளை அருணகிரிநாதர் எப்படியெல்லாம் அனுபவித்திருக்கிறார் என்பதை இங்கு காண்போம்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் உண்டாகி, இருவரில் ஒருவர் வெல்வதும், தோல்வியுற்றவர் இறைவனை நோக்கித் தவம் செய்து, வரங்களைப் பெறுவதும், மீண்டும் போர் தொடுத்துப் பழி தீர்த்துக்கொள்வதும் சுழற்சியாக நடந்தேறும் ஒரு நிகழ்வு.
ஒரு சமயம், அதிதி புத்திரர்களான தேவர்களுக்கும், திதி புத்திரர்களான அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. அந்தப் போரில், தேவர்கள் வென்றனர். படுதோல்வி அடைந்த அசுரக் கூட்டத் தலைவன் மிகுந்த கவலையோடு இருந்தான். அப்போது, “மாயா” எனும் அசுரக் குலப்பெண், “மீண்டும் அசுரர்களைப் பலமுடையவர்களாக மாற்றிக் காட்டுகிறேன்” என்று சபதம் செய்து, ஒரு காட்டிற்குச் சென்றாள்.
அங்கு, தவம் செய்துகொண்டிருந்த காஷ்யப முனிவர் முன், ஓர் அழகிய வடிவம் கொண்டு நின்றாள். அவரை மணந்து கொண்டு, பணிவிடை செய்ய ஆயத்தமாய் இருப்பதாகத் தெரிவித்தாள். அவளுடைய விருப்பத்திற்குச் செவிசாய்த்தார் காஷ்யபர். இருவரும் மணந்துகொண்டு வாழ்ந்து வந்தனர். காஷ்யபர் – மாயா இருவருக்கும் ஓர் அழகிய ஆண் மகன் பிறந்தான்.
சூரன் – பத்மன் என்னும் இரு அசுரர்கள் ஒரே வடிவாகி, காஷ்யபர் – மாயாவின் மூத்த மகனாய்ப் பிறந்தனர். சூரபத்மன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தாள் மாயா.
“ஆதி முதனாளில்” எனத் தொடங்கும் கோடைநகர்த் திருப்புகழில்,
“கூடி வரு சூரர் தங்கள் மார்பை இரு கூறு கண்ட
கோடைநகர் வாழ வந்த பெருமாளே”
என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.
திருமுருகாற்றுப்படையில் நக்கீரரும்,
“இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை” என்று சூரபத்மனைக் குறிக்கிறார்.
ஸ்காந்தம் எனப்படும் ஸ்கந்த புராணத்தில், உபதேச காண்டத்தில், இது பற்றிய குறிப்பு வருகிறது.
ஒரு சமயம் நடந்த யுத்தத்தில், பூத கணங்களுக்குப் பேருதவியாய் இருந்த பூதங்கள், பூதத் தலைவனால் ஆசீர்வதிக்கப்பெற்று, அசுரத் தன்மை அடைந்தன. அது முதல், தேவர்களுக்கு அவை துன்பம் கொடுக்கத் தொடங்கின. தேவர்களின் காவலனான ஷண்முகக் கடவுள், வெகுண்டு, மிகவும் துன்பம் விளைவித்த ஒரு நான்கு பூதங்களைப் பார்த்து, “நீங்கள் மிக பயங்கரமான அசுர ஜன்மத்தை அடைவீர்கள்” என்று சபித்தார். பின்னர், நான்கு பூதங்களும் கொடூரமான அசுரத்தன்மையை அடைந்தன. கொடியவைகளான சூரன், பத்மன் ஆகிய இரண்டு பூதங்களும், மிகக் கொடிய உருவத்தோடு, சூரபத்மன் என்ற ஒரு மகா அசுரனாகிவிட்டன. இவனே காஷ்யபர் – மாயாவின் மூத்த மகனாகப் பிறந்தான்.
இவனைத் தொடர்ந்து, சிங்கமுகன், தாரகன் என்ற மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். நால்வரும் வளர்ந்தனர்.
தொடரும்....