திருநணா, பவானி. மூலவர் சங்கமேஸ்வரர், அளகேசன், சங்கமநாதர், மருத்து லிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்ரேஸ்வரர், நட்டாற்றீஸ்வரர், திருநண்ணாவுடையார், சங்கமுகநாதேஸ்வரர். அம்மனுடைய பெயர் வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பன்னார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவநாயகி, வக்ரேஸ்வரி. ஸ்தல விருட்சம் இலந்தை. தீர்த்தம் காவிரி, பவானி, அமிர்த நதி, சூர்ய தீர்த்தம், சக்ர தீர்த்தம், தேவ தீர்த்தம்.
திருநணா என்று அழைக்கப்படுகிறது. இப்போது ஊரினுடைய பெயர் பவானி. ஈரோடு மாவட்டத்திலே அமைந்துள்ளது. திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற கொங்குநாட்டுத் தலமாகும். ஆடி 18 – ம் பெருக்கு அன்று இங்கு நடைபெறுகின்ற விஷேசமான கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள். இறைவன் சுயம்புமூர்த்தி.
மாசி மாதம் ரதசப்தமிக்கு மூன்றாம் நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் மீது விழுகின்றது.
PINCODE -638301.
இத்தலத்திற்கு பத்மகிரி என்ற பெயரும் உண்டு. இதைச் சுற்றிலும் நாககிரி, வேதகிரி, மங்கல கிரி, சங்க கிரி ஆகியவை உள்ளன. வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை மற்றும் சரஸ்வதி சங்கமிப்பது திரிவேணி சங்கமமாகும். அந்த இடத்திலே சரஸ்வதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதைப் போலவே தென்னாட்டிலே காவிரியுடன் பவானி கண்ணுக்குத் தெரியாத அமுதநதி ஆகியவை சங்கமிக்கும் இடம்தான் இந்த பவானி ஆகும். இதைத் தென் திரிவேணி சங்கமம் என்று கூறுவார்கள். இங்கு பெருமாள் ஆதிகேசவ பெருமாள் என்ற திருநாமத்துடன் தாயார் சவுந்தர வள்ளியுடன் அருள் பாலிக்கிறார். இந்தத் தலம் மிகச் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாக இருக்கின்றது.
நதியினுடைய பெயரே பார்வதியினுடைய பெயராகும். இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு எந்தவொரு தீங்கும் நண்ணாது, அதாவது நெருங்காது என்பதனால் திருநண்ணா என்பது திருநணா என்று ஆகிவிட்டது.
வேதநாயகி அம்மனுக்கு எதிரில் உள்ள சுவரிலே 3 துவாரங்கள் உண்டு. முன் காலத்தில் பவானியினுடைய கலெக்டராக இருந்த வில்லியம் கரோ என்பவர் அம்மனைத் தரிசிக்க விரும்பினார். அவரை வெளிநாட்டவர் என்பதால் உள்ளே அனுமதிக்கவில்லை. அவர் இந்த 3 துவாரங்கள் வழியாகவே தரிசித்து வந்தார். திடீரென்று ஒருநாள் அவர் வீட்டிலே தூங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு பெண் வந்து, உடனே வீட்டை விட்டு வெளியே போ என்று சொன்னாள். அவரும் வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த வீட்டினுடைய மாடிப்பகுதி இடிந்து வீட்டிற்கு மிகுந்த சேதம் ஏற்பட்டது. அம்மனே தன்னுடைய உயிரைக் காப்பாற்றியதாக எண்ணி, கலெக்டர் தங்கக்கட்டிகளை காணிக்கையாக வழங்கினார்.
இந்த கோவிலிலே தென்மேற்கு மூலைமீது உள்ள மேடை மேலே உள்ள தலவிருட்சம் இலந்தை. இங்குதான் குபேரனுக்குச் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாகத் தரிசனம் தந்துள்ளார். 4 வேதங்களும் இங்கு தீர்த்தங்களாக அமைந்துள்ளதாக ஐதீகம். திருமாலுக்கும், தாயாருக்கும் நடுவே யோகநரசிம்மர் லட்க்ஷ்மியுடன் சாந்தமாக அருளுகிறார். சைவம், வைணவம் இரண்டிற்கும் சேர்ந்து ஒரே இராஜகோபுரம்.
சிவன் சன்னிதிக்குப் பின்னாலே பஞ்சபூத லிங்கங்கள் உள்ளன. விசுவாமித்திரர் இந்த நதியினுடைய கரையிலே, தனியாக லிங்கம் அமைத்து காயத்ரி மந்திரம் சொல்லியதால் இது காயத்ரி லிங்கம் என்று அழைக்கப்படுகின்றது. வேணுகோபாலர் சன்னதிக்கு பின்புறத்திலே பசு ஒன்று உள்ளது. இந்தப் பசுவினுடைய முன்பகுதியிலே தலை இருப்பதோடு, பின் உடம்பு பகுதியில் இன்னொரு தலையும் உள்ளது.
குபேரன் பூலோகத்திலே புண்ணியத் தலங்களைத் தரிசிக்க விரும்பியபோது இந்தத் தலத்திற்கு வந்தான். இங்கே ஞானிகளும், முனிவர்களும் தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டான். மான், பசு, புலி, சிங்கம் இவையெல்லாம் ஒற்றுமையோடு சண்டையின்றி ஒன்றாக நீர் அருந்திக் கொண்டிருந்தன. இந்த இடத்திலே அவனும் தவம் செய்தான். சிவபெருமான் காட்சி அளித்தார்.
சிவ சிவ.