கண்டியூர். அருள்மிகு பிரம்மசிர கண்டீஸ்வரர் கோவில். வீரட்டேஸ்வரர், பிரம்மநாதர், ஆதி வில்வவன நாதர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்மன் பெயர் மங்களாம்பிகை. தலவிருட்சம் வில்வம். நந்தி தீர்த்தம், குடமுருட்டி, தக்ஷ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம். புராண பெயர் திருகண்டியூர், ஆதி வில்வாரண்யம், வீரட்டம். இது தஞ்சாவூர் மாவட்டத்திலே அமைந்துள்ளது.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளார்கள். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். சூரியன் வழிபட்ட தலம் ஆதலால் மாசி மாதம் 13, 14, 15 ஆம் தேதிகளில் மாலை நேரத்தில் சூரியஒளி சுவாமி மீது படுகின்றது. இந்தத் தலம் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாகும். PINCODE - 613202.
இங்கு தண்டபானி சன்னதி தனிக்கோவிலாக மண்டபத்துடன் உள்ளது. ஸப்த ஸ்தான திருவிழாவில் (ஏழூர் திருவிழாவில்) சுவாமி இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழக்கமாக உள்ளது. சிவன் கோவில்களில் துவார பாலகர்களாக இருக்கும் சண்டி, முண்டி இங்கு இல்லை. இவர்களுக்குப் பதிலாக முருகப் பெருமானே இங்கு ஞானகுரு, ஸ்கந்த குருவாக இருக்கிறார். தந்தைக்கு மகனே இங்கு காவலாக இருப்பதாக ஐதீகம். அம்பாள் தனி மண்டபத்திலே இருக்கிறார்.
வள்ளி, தெய்வானையுடன் உள்ள முருகனுக்கு இங்கு மயில் வாகனம் இல்லை. ஒரே சன்னிதியிலே அடுத்தடுத்து 7 விநாயகர்கள் உள்ளனர். கோஷ்டத்திலே உள்ள துர்க்கை பிரயோக சக்கரம் வைத்திருக்கிறாள்.
பிரம்மாவினுடைய சிரத்தைக் கொய்ததால், பிரம்ம சிர கண்டீஸ்வரர் என்ற பெயர் சுவாமிக்கு. பிரம்மா தவறை உணர்ந்து மன்னிப்புக் கிடைக்க, சிவனை வேண்டித் தவமிருந்தார். சிவன் அவரை மன்னித்து அருளினார். 5 தலைகளிலே இருந்த அழகும், 4 தலைகளிலே வருமாறும் சிவன் பிரம்மாவிற்கு அருள் புரிந்தார்.
இங்கு தங்கிருந்த ஒரு மகரிஷி ஒவ்வொரு பிரதோஷ நாளிலும் எத்தனை வேலை இருந்தாலும், காளஹஸ்தி சென்று கொண்டிருந்தார். ஏதேனும் ஒரு பிரதோஷம் விட்டுப்போனால் உயிரை விட்டுவிடுவதாகச் சபதம் கொண்டிருந்தார். அவரைச் சோதிப்பதற்காக, ஒரு பிரதோஷத்தன்று, பெரிய மழையை சிவன் உண்டாக்கினார். இதனால் வருந்திய மகரிஷி கோவிலினுள்ளே அக்னி வளர்த்து ,அதில் குதிக்கச் சென்றபோது, சிவன் காட்சி தந்து, எங்கும் நானே இருக்கிறேன் என்று உணர்த்தினார்.
திருச்சிற்றம்பலம்.