ஆக்கூர் தான்தோன்றியப்பர் திருக்கோவில்,. உற்சவர் ஆயிரத்தில் ஒருவர். அம்மன் பெயர் வாள்நெடுங்கண்ணி, கடகநேத்ரி. தலவிருட்சம் கொன்றை, பாக்கு, வில்வம். தீர்த்தம் குமுத தீர்த்தம். காரண ஆகமப்படி பூஜை நடக்கிறது. இயற்பெயர் “யாருக்கு ஊர்” என்பது மருவி ஆக்கூர் என்றாகியது. நாகப்பட்டினம் மாவட்டத்திலே உள்ளது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர் ஆகியோர் பாடியுள்ளார்கள். காவிரியினுடைய தென்கரைத் தலமாகும். இறைவன் சுயம்பு மூர்த்தி. PINCODE - 609301.
இந்தக் கோவிலைக் கோச்செங்கட் சோழன் கட்டினான். கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக்கோவிலிலே இதுவும் ஒன்று. இதற்கு ஆக்கூர் தான்தோன்றிமாடம் என்று பெயர். சிறப்புலி நாயன்மார் பிறந்து வாழ்ந்து முக்தி பெற்ற தலமாகும். இந்தத் தலத்திலே 60-ம் கல்யாணம் செய்வதும் சிறப்பாக இருக்கின்றது. அகத்தியருக்குச் சிவன் திருமணக் கோலத்தைக் காட்டிய தலங்களிலே இதுவும் ஒன்று.
கோச்செங்கட் சோழனுக்கு வயிற்றிலே குன்மநோய் அதாவது அல்சர் நோய் வந்துவிடுகிறது. என்ன செய்யவேண்டும் என்று பார்த்தபோது 3 தலவிருட்சங்கள் எங்கு இருக்கிறதோ அங்கு கோவில் கட்ட வேண்டுமென்று அசரீரி வருகிறது.
ஆக்கூர் வந்தபோது கொன்றை, பாக்கு, வில்வம் என்று மூன்று தலவிருட்சங்கள் இருந்ததால், கோவில் கட்ட தீர்மானம் செய்கிறான். கோவில் கட்டுகிறான். ஆனால் கட்டிய சுவர் மறுநாள் கீழே விழுந்துவிடுகிறது. எதனால் என்று கேட்டபோது சிவன் 1000 அந்தணர்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும். 48 நாள் செய்யவேண்டும். குறைவே இருக்கக்கூடாது என்கிறார். இப்படி நடந்துக்கொண்டே இருக்கும்போது ஒருநாள் ஒருவர் குறைவாக இருக்கிறது.
அப்போது ஒருவர் வந்து இலையில் உட்கார்ந்து விட்டார். அந்த ஆயிரத்தில் ஒருவராக ஒருவர் வந்து உட்கார்ந்து ஒரு வயதான அந்தணர் சென்றபோது, யார் என்று தெரியாமல், ஊழியர்கள், “ஐயா தங்களுக்கு எந்த ஊர்?” என்று கேட்கின்றனர். அந்த அந்தணர் “யாருக்கு ஊர்?” என்று கேட்கிறார். அரசனுடைய வேலையாட்கள் அவரை, எதிர்க் கேள்வி கேட்டதால் அடிக்கச் செல்கின்றார்கள். வயதானவர் அங்கிருந்துச் சென்று ஓரு புற்றுக்குள் சென்று மறைந்து விடுகிறார்.
புற்றைக் கடப்பாரையால் உடைத்துப் பார்த்தபோது, உள்ளேயிருந்து சுயம்பு மூர்த்தியாகத், தான்தோன்றீஸ்வரர் தோன்றுகிறார். கடப்பாரை குத்தியபோது லிங்கத்தின் மீது பட்டதால் இன்று கூட அந்த லிங்கத்திலே தலைப்பகுதியிலே பிளவு இருக்கின்றது. ஆருக்கு ஊர் என்று அவர் கேட்டதால், ஆக்கூர் என்றாகிறது. ஆயிரத்தில் ஒருவராக வயதானவராக வந்ததால், ஆயிரத்தில் ஒருவர் என்பவர் உற்சவ மூர்த்தியாக வழிபடப் படுகிறார். மேலும் இந்த இடத்திலே அம்பாள் சுயம்வரத்திற்காக ஜபம் செய்த இடம் என்பது ஸ்தல புராணம் ஆகும்.
இந்த இடத்திலே புலஸ்தியர், விஸ்ரவஸ், அகஸ்தியர், நிதாகர், அத்ரி மகரிஷி ஆகியோர் வழிபாடு செய்திருக்கிறார்கள். ஒருமுறை சிவனும் பார்வதியும் பூலோகத்திற்கு வருகிறார்கள். அங்கே, இந்த இடத்திலே அழகிய மாளிகை அமைத்திருந்தார்கள். இதில் வாசம் செய்யவேண்டாமென்று சிவன் கூறுகிறார். ஆனால் அம்பாள் இங்கு வசிப்போம் என்று சொல்கிறார். அப்போது புலஸ்திய முனிவருடைய தலைமையிலே பல ரிஷிகள் வந்தார்கள். உங்களுக்கு என்னவேண்டும் என்று சிவன் கேட்டபோது புலஸ்திய முனிவர் உங்களது அருள் மட்டும் போதும் என்கிறார்.
ஆனால் புலஸ்தியருடைய மனைவி இந்த மாளிகை வேண்டுமென்று கேட்டுவிடுகிறாள். பார்வதி தேவிக்கு கோபம் வந்துவிடுகிறது. இந்த இடம் ரணகளமாகட்டும் என்று சாபம் தந்து விடைபெற்றுப் போகிறாள். பிறகு பார்வதி சிவனைப் பிரிந்து அத்ரிமகரிஷியினுடைய மகளாக, கட்கநேத்ரியாக பூலோகத்திலே பிறந்து வளர்ந்து வருகிறாள். அது இந்த இடம்தான்.
அம்பிகை தன்னை சேரும் நாள் விரைவில் வரப்போகிறது என்பதனால், அம்பிகைக்குத் திருமணத்திற்கான மந்திரத்தை ஜபம் செய்யவைக்க அகஸ்தியர் வருகிறார். அது சுயம்வர மந்திரம் என்று உபதேசம் செய்யப்படுகிறது. அம்பிகை இந்த இடத்திலே சுயம்வர மந்திரத்தை ஜபம் செய்து சிவனுடன் ஒன்று சேர்கிறார். அப்பேற்பட்ட புனிதமான தலமாகும்.