ஓசைமுனி என்று போற்றப்படும் அருணகிரிநாதர், போர்க்களக் காட்சிகளை அழகிய சந்தங்களில் பல பாடல்களில் பாடியுள்ளார். “அகரமுதலென” எனத் தொடங்கும் ஒரு பொதுத் திருப்புகழில், இடக்கை, உடுக்கை மற்றும் பல வாத்தியங்கள் முழங்க, பயிரவர் ஆட, பேய்கள், கழுகுகள், காக்கைகள், கருடன் ஆகியவை மாண்டவர் உடலைத் தின்று பசியாற, தலையற்ற வெற்றுடல்கள் ஆட, வெற்றி முரசதிர, நிசிசரரை வென்று, இந்திரனுக்கு அரசளித்தான் முருகன் என்று ஓசை நயத்தோடு பாடுகிறார்.
“தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகுதீதோ
தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
தரரரர ரிரிரிரிரி என்றென்று இடக்கையும் உடுக்கையுமியாவும்
மொகுமொகென அதிர முதிர் அண்டம் பிளக்க நிமிர்
அலகை கரணமிட உலகெங்கும் ப்ரமிக்க
(நட)முடுகு பயிரவர்ப வுரி கொண்டின்புறப் படுகளத்தில் ஒரு கோடி
முதுகழுகு கொடி கருடன் அங்கம் பொரக் குருதி
நதி பெருக வெகுமுக கவந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்று இந்திரற்கு அரசளித்த பெருமாளே”
என்று முருகனைப் பெருமிதத்தோடு பாடி மகிழ்கிறார்.
வானவர் கோனாக மீண்டும் அரசுபெற்ற இந்திரனின் மனம் எப்படி மகிழ்ந்திருக்கும்! தனக்கும் தம் கூட்டத்தாருக்கும் வாழ்வளித்த முருகப்பெருமானுக்குத் தகுந்த பரிசளிக்க எண்ணினான். கொடிபோன்ற தன் மகளான தெய்வயானையை முருகனுக்கு மணம் செய்து வைக்கத் தீர்மானித்தான். தேவேந்த்ர லோகத்தைப் பிழைக்கச் செய்தவனும் தன் மாங்கல்யத்தைக் காத்தவனும் அமரசிகாமணியுமான முருகனுக்குத் தன் மகளை மணமுடித்துக் கொடுப்பதே சரி என்று கூறி மகிழ்ந்தாள் இந்திராணி.
இந்திரனின் யானை ஐராவதம். அந்த யானையால் வளர்க்கப்பட்ட பெண் ஆதலால், தெய்வயானை, தேவகுஞ்சரி, தந்தியின் கொம்பு, கோட்டு வால் இபமங்கை, இபதோகை என்றெல்லாம் அவளை அழைத்து மகிழ்கிறார் அருணகிரிநாதர்.
முற்பிறவியில் திருமாலின் இரு கண்களிலிருந்து வந்த ஆனந்த கண்ணீரிலிருந்து இரு பெண்கள் உதித்தனர். இடக்கண்ணிலிருந்து வந்தவள் அமுதவல்லி. வலக்கண்ணிலிருந்து வந்தவள் சுந்தர வல்லி. இருவரும் தங்கள் அத்தை மகனான முருகனையே கணவனாய் அடையத் தவம் செய்தனர். மூத்தவளான அமுதவல்லி, இந்திரனின் மகளாகப் பிறந்து, ஐராவதத்தால் வளர்க்கப்பட்டு முருகனை மணம் செய்துகொள்ளக் காத்திருக்கும் தெய்வயானை.
முருகப்பெருமானின் பெற்றோர்களான பார்வதி – பரமேஸ்வரரின் சம்மதத்தைப் பெற்று, ஒரு நன்னாளைக் குறித்தான் இந்திரன். வேதியர்கள் மந்திரம் ஓத,
“இடியும் முனைமலி குலிசமும் இலகிடு
கவள தவள விகட தட கன கட
இபமும் இரணிய தரணியும் உடையதொர் தனியானை”
ஆகிய தன் மகள் தெய்வயானையை முருகனுக்கு மணமுடித்து வைத்து மகிழ்ந்தான் இந்திரன்.
வான்மேகத்தின் இடி, குலிசம் ஆகிய ஆயுதங்களையும், கவளமாக ஊணவை உண்பதும், வெண்ணிறமுடையதும், அழகுடையதும், பரந்ததும், மிகுந்த மத நீர் பொழியும் சுவடுடையதுமான ஐராவதம் என்கிற யானையையும், பொன்னுலகையும் தன் ஒப்பற்ற பெண்ணான தெய்வயானைக்குச் சீராக இந்திரன் அளித்தான் என்பதானால், இவற்றை உடைய தெய்வயானை என்று பாடிகிறார் போலும்!
“செப்பச் சொர்கத்துச் செப்போற் தத்தைக்குச்
செச்சைக் கொத்து ஒப்பித்து அணிவோனே”
என்று பாடுகிறார், “பொக்குப்பை” எனத் தொடங்கும் காஞ்சிபுரத் திருப்புகழில்.
செம்மையான விண்ணுலகில் உள்ள செம்பொன் கிளி போன்றவளான தெய்வயானையை, வெட்சி மலர்க் கொத்தால் அலங்கரித்து மாலை சூட்டினான் சொக்கவைக்கும் அழகுடைய சுப்பிரமணியன்.
முத்தைத்தரு பத்தித் திரு நகை அத்திக்கு இறை எனத் தன் முதல் பாடலிலேயே தெய்வயானை நாயகனாக முருகனை அனுபவிக்கிறார் அருணகிரிநாதர்.
சூரனைக் கடிந்தமைக்குப் பரிசாக கிடைத்தாள் அமுதவல்லியான தெய்வயானை.
சுந்தரவல்லியின் நிலை யாது?
தொடரும்…