தேவர் படைக்குத் தலைமை ஏற்று, முருகன் வேலை ஏந்திக் கொண்டு, வீரபாகு முதலிய நவ வீரர்களோடு, சூரபத்மனின் வீரமகேந்திரபுரியை நோக்கிச் சென்றான்.
கிரௌஞ்ச மலையாய் ஓர் அசுரன் முருகனை வழிமறித்தான். வேலை, அம் மலைமேல் முருகன் எறிய, அடுத்த கணத்தில் கிரௌஞ்ச மலை பொடியானது. முருகனின் படை தொடர்ந்து முன்னேறியது. கிரௌஞ்ச மலை பொடியானதை அறிந்த தாரகாசுரன், போர்க்களத்திற்கு வந்தான். பல ஆயுதங்களை முருகன் மேல் செலுத்தினான். எந்த ஆயுதமும் முருகனைத் தாக்கவில்லை. சிரித்துக்கொண்டே, தன் வேலை, முருகன் ஏவ, தாரகாசுரன் மண்ணில் வீழ்ந்து மடிந்தான்.
“தாரகாசுரன் சரிந்து வீழ, வேருடன் பறிந்து
சாதி பூதரம் குலுங்க, முதுமீனச்
சாகரோதையம் குழம்பி நீடு தீ கொளுந்த அன்று
தாரை வேல் தொடும் கடம்ப….”
என்று தேவனூர்த் திருப்புகழில், இந்தத் தாரகாசுர வதத்தைப் பாடுகிறார்.
இதற்குப் பின், முருகன், வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பினான். “தேவர்களை விடுவிக்க வேண்டும். இல்லையேல், தாரகனுக்கு ஏற்பட்ட நிலையே சூரனுக்கும்” என்று சொல்லிவிட்டு வர, வீரபாகு புறப்பட்டான். சூரனைப் பார்ப்பதற்கு முன், ஜெயந்தனைச் சந்தித்துப் பேச முடிவெடுத்த வீரபாகு, ஒரு வண்டு வடிவில் சிறைக்குள் சென்றான். ஜெயந்தனைச் சந்தித்து, “முருகப் பெருமானால் தேவர்களின் துயர் விரைவில் தீர்க்கப்படும்” என்று சொல்லிவிட்டு, சூரனைச் சந்திக்க, தன் சுயவடிவில் சென்றான். தகவலைத் தெரிவித்துவிட்டு, அவ்விடத்திலிருந்து மறைந்தான் வீரபாகு.
இதைக் கண்ட சிங்கமுகன், “வந்திருக்கும் முருகன் ஒரு சாதாரணப்பட்டவன் அல்லன். தேவர்களை விடுவித்துவிடலாம்” என்று நல்லுரை கூறினான். அதைக் கேட்டு வெகுண்டெழுந்த சூரபத்மன், தன் மகனான பானுகோபனைப் போருக்கு அனுப்பினான். கடும் போர் நடந்தது. எனினும், பானுகோபனை, வீரபாகு போரில் வீழ்த்தினான்.
சூரன் செய்வதறியாது கலங்கினான். சிங்கமுகன் போருக்குச் சென்றான். பல அத்திரங்களை முருகனின் படைகள் மீது செலுத்தினான். முருகப் பெருமான், தன் ஆற்றலால் அவற்றை நிர்மூலமாக்கி, இந்திரன் அளித்த குலிசாயுதத்தால் சிங்கமுகனை வீழ்த்தினான்.
உற்றார் உறவினைரை இழந்து, தனியாக இருக்கும் சூரபத்மன் போர்க்களத்திற்குச் சென்றான்.
முருகனை எதிர்த்துப் போரிட, ஒரு பெரிய மாயப் பறவையாக மாறி, வானில் பறந்தான். இந்திரனே மயிலாக மாறி, முருகனைத் தாங்கிப் பறந்தான். தன் மீது ஏற்றிக்கொண்டு வானில் பறந்தான். சூரனைத் தாக்க முருகன் முற்பட்ட போது, சூரன், கடலுக்குள் சென்று, மா மரமாக மாறி, தலைகீழாக நின்றான்.
முருகனின் வேல், கடல் நீரைக் குடித்து வற்றச் செய்தது.
“திரைக்கடலை உடைத்து, நிறை புனல் கடிது குடித்து, உடையும் உடைப்பு அடைய அடைத்து, உதிர நிறைத்து விளையாடும் வேல்” என்று வேல் வகுப்பில், வேலானது கடல் நீரைக் குடித்து, வெற்றிடத்தை நிரப்ப, அசுரர்களின் உதிரத்தை அதில் நிறைத்து விளையாடியதைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.
இப்போது, தலைகீழாய் நிற்கும் மா மரம் வெளிபட்டது. முருகன் எறிந்த வேலானது, அம் மரத்தை இரு பிளவாகப் பிளந்தது. ஒரு பாதி மயிலாகவும், மற்றொரு பாதி சேவலாகவும் மாறின. சூரபத்மன், மனம் திருந்தி மன்னிப்பு வேண்ட, மயிலைத் தன் வாகனமாகவும், சேவலைத் தன் கொடியாகவும் ஏற்றுக்கொண்டு அருளினான் முருகன்.
“அலை சூரன் வெற்பும் அரிமுகன் ஆனைவத்திரனொடு அசுரார் இறக்கவிடும் அயில் வேலா” என்று, வலிவாதபித்தம் எனத் தொடங்கும் திருவருணைத் திருப்புகழில் பாடுகிறார் அருணகிரிநாதர்.
சூரபத்மன் முதலான அசுரர்களுக்கும், முருகனைப் படைத்தலைவராய்க் கொண்ட தேவர்களுக்கும் நடந்த போரின் முடிவில் அசுரர்கள் தோல்வியுற்றனர். தேவர்கள் வெற்றிபெற்று, இந்திரனுக்கு இழந்த பதவி மீண்டும் கிட்டியது. சிறையில் அடைக்கப்பட்ட ஜெயந்தன், மற்ற தேவர்கள் விடுவிக்கப் பட்டனர். சசிதேவியின் மாங்கல்யம் காக்கப்பட்டது. “குலிசாயுதத்து இந்த்ராணி மாங்கல்ய தந்து ரக்ஷாபரண” என்று மயில் விருத்தத்திலும், “சசி தேவி மங்கல்ய தந்து ரக்ஷாபரண” என்று கந்தர் அலங்காரத்திலும் முருகனைப் போற்றுகிறார் அருணகிரிநாதர்.
“குலிச பார்த்திபன் உலகு காத்தருள் கோவே” என்கிறார் மற்றொரு திருப்புகழில்.
சிவபெருமான் இட்ட கட்டளையை முடித்துவிட்டு, முருகன் மீண்டும் சிவபெருமானிடம் சென்றதை, ‘நிருதரார்க்கொரு’ பாடலிலேயே பாடி நிறைவுசெய்கிறார்.
“…வேல்கொடு நீறாயே பட விழ மோது” என்(று)
அருள ஏற்று, அமரோடே போய், அவர்
உறையும் மாக்கிரியோடே தானையும்
அழிய வீழ்த்து, எதிர் சூரோடே அமர் அடலாகி,
அமரில் வீட்டியும், வானோர் தானுறு
சிறையை மீட்டு, அரனார் பால் மேவிய
அதிபராக்ரம வீரா! வானவர் பெருமாளே”
என்பவை அவ்வரிகள்.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போரில், சூரன், பத்மன் என்னும் இருவுருவை ஒரு உடலில் கொண்ட அசுரத் தலைவன் சூரபத்மன், முருகன் கை வேலால் இரு கூறாகப் பிளக்கப்பட்டு, சூரன் மயிலாகவும் பத்மன் சேவலாகவும் மாறினான் என்னும் கருத்தை, “அச்சாய் இறுக்காணி” எனத் தொடங்கும் தச்சூர்த் திருப்புகழில், ஒரு மாமரத்தைப் பிளந்து அதன் கூறுகளை மயிலாகவும் சேவலாகவும் வடித்த தச்சனே என்று பாடுகிறார்.
“வலுப்பான போர்க்குள் தொடங்கி, எக்காலும் மக்காத சூர்க்கொத்து அரிந்த சினவேலா! தச்சா! மயில் சேவலாக்கிப் பிளந்தா சித்தா!” என்கிறார்.
தொடரும்....