முருகன், தேவர் துயரைத் தீர்த்து, தெய்வயானையைக் கரம் பிடித்து, சினம் தணிந்து, கல்லார கிரி எனப்படும் திருத்தணியில் வந்தமர்ந்தான். புகழ் மிக்க நாரத மாமுனி அங்கு வந்தார். முருகனிடம், “அருகில் உள்ள மலையில், தினைப் பயிர்களைக் காவல் செய்துகொண்டு ஒரு குறமாது, உன் வருகைக்காகக் காத்துக்கொண்டிருக்கிறாள்” என்று கூறினார்.
“சீலம் உலாவிய நாரதர் வந்துற்று ஈது அவள் வாழ் புனமாம்” என்று இதனைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.
அவள் எப்படி இருப்பாள் என்று முருகன் கேட்க, முனிவர் கூறலானார். அவற்றைக் கேட்டு, அந்த இடத்திற்குச் சென்றான் முருகன்.
“நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார் புகல் குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக”
என்று ஏவினை நேர்விழி எனத் தொடங்கும் திருச்செந்தூர்த் திருப்புகழில் பாடுகிறார்.
கன்வ மகரிஷியின் சாபத்தால், திருமால் சிவமுனியாகவும், திருமகள் மானாகவும் பூவுலகை அடைந்தனர். வள்ளிக்கிழங்குகள் விளையும் ஒரு காட்டில் சுற்றித் திரிந்த சிவமுனி, புதர்களுக்கிடையே இருந்த ஒரு பெண் மானை நோக்க, அந்த மான், ஒரு பெண் மகவை ஈன்றது. திருமாலின் வலக்கண்ணிலிருந்து முற்பிறப்பில் தோன்றிய சுந்தரவல்லியே இந்தப் பெண் குழந்தை. குழந்தையை ஈன்றதும், அந்த மான், அவ்விடத்திலேயே அதனை விட்டுவிட்டு, அகன்றது. சிவமுனியும் அங்கிருந்து மறைந்தார்.
அங்கு வந்த வேடர் தலைவன் நம்பிராஜன், ஆண் வாரிசுகள் மட்டுமே இருக்கும் தனக்கு, இந்தப் பெண் குழந்தையை இறைவனே அருளினார் என்று எண்ணி மகிழ்ந்து, வள்ளிக்கிழங்கைக் கல்லி எடுத்த குழியில் கிடைத்த குழந்தைக்கு “வள்ளி” என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். மான் இடத்தில் தோன்றிய இந்த மானிடப் பெண்ணான வள்ளியை, “செம்மான் மகள்” என்று குறிக்கிறார் அருணகிரிநாதர்.
குறவர் குலமரபுப் படி, ஓரளவுக்கு வளர்ந்ததும், பயிர்களைக் காக்கும் பணியில் அமர்த்தப்பட்டாள். “மேவிய புனத்து இதணில் ஓவியம் எனத் திகழ்ந்தாள் வள்ளி.
கையில் கவண் என்னும் கல்லெறியும் கருவியையும் சில கற்களையும் வைத்துக்கொண்டு, வள்ளிமலைச் சாரலில் உள்ள தினைப்புனத்தில் ஒரு உயரமான இடத்தில் அமர்ந்துகொண்டு, பயிர்களைப் பறவைகள் கொத்தா வண்ணம் காவல் புரிந்து வந்த வள்ளியை, “தினை ஏத்தி” என்கிறார் அருணகிரிநாதர்.
இந்த வேடுவர் புனத்துக்கு உருமாறி, வியாகுல மனத்துடன் வந்து சேர்ந்தான் முருகன். வேடனாக வந்து, வள்ளியைச் சந்தித்தான். அவளோடு பலவாறாகப் பேசினான். சல்லாபன் என்று கந்தர் அநுபூதியில் முருகனைப் பாடுகிறார்.
“என் ஊருக்கும் இந்தத் தினைப்புனத்துக்கும் 2½ காதம் தான் தூரம். இடையில் ஒரே ஒரு வயல் தான் உள்ளது. நீ வா என்னோடு” என்று பேசிய வேட உருவில் இருந்த முருகனை, வள்ளி கடிந்துகொண்டாள்.
“வதன சரோருக நயன சிலீமுக வள்ளி புனத்தில் நின்று,
‘வாராய், பதி காதம் காதரை ஒன்றும் ஊரும்,
வயலும் ஒரே இடை’ என ஒரு கான் இடை
வல்லபமற்றழிந்து மாலாய் மடல் ஏறும் காமுக”
என்று பாடுகிறார்.
அவளை எப்படியாவது மணந்து கொள்ள வேண்டும் என்று மடலெழுதினான் முருகன்.
கொந்துவார் குரவடி எனத் தொடங்கும் தணிகைத் திருப்புகழில்,
“செண்பகாடவியினும் இதணினும், உயர் சந்தனாடவியினும் உறை குறமகள்
செம்பொன் நூபுர கமலமும், வளையணி புது வேயும்
இந்து வாண்முக வனஜமும் ம்ருகமத குங்குமாசல யுகளமும் மதுரித
இந்தளாம்ருத வசனமும் முறுவலும், அபிராம
இந்த்ரகோபமும் மரகத வடிவமும், இந்த்ரசாபமும் இருகுழையொடு பொரும்
இந்த்ர நீலமும் மடலிடை எழுதிய பெருமாளே”
என்று, முருகன் வள்ளியின் அழகை ரசித்து, ஓவியமாக வரைந்ததைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.
சற்றே மனம் இளகினாள் வள்ளி. அவள் தந்தையும் மற்றவர்களும் அவ்விடத்துக்கு வருவதைக் கண்ணுற்றுக் கலங்கினாள். புதிதாக வந்தவரை அவர்கள் கண்டால், அவ்வளவுதான் என்று பயந்துகொண்டே அருகில் பார்த்தாள். வேடன், வேங்கை மரம் ஆனான்.
“தினைச் செங்கானக வேடுவரானவர் திகைத்து “அந்தோ” எனவே கணியாகிய திறல் கந்தா” என்று பாடுகிறார். [கணி – வேங்கை மரம்]
“இது ஏது புதிய மரம்” என வந்தவர்கள் கேட்க, திடுக்கிட்டாள் வள்ளி. அதைப் பார்த்த நம்பிராஜன், “இருந்துவிட்டுப் போகட்டும்; வள்ளிக்கு நிழலாய் இருக்குமே” என்று கூறி, அவ்விடத்திலிருந்து நகர்ந்தான்.
மீண்டும் அவ் வேடனைத் தேடினாள். எங்கும் தென்படவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு வயோதிகர் வந்தார். வள்ளியிடம் தனக்குப் பசிக்கிறது என்று கூறினார். தன்னிடம் இருந்த உணவைக் கொடுத்தாள். பின்னர் தண்ணீர் வேண்டும் என்று கேட்க, “அருகில் தான் சுனை உள்ளது; அங்கு சென்று பருகலாம்” என்றாள். வயதான நிலையில் தன்னால் தனியாகச் செல்ல முடியாது என்றும், கூட வள்ளி வரவேண்டும் என்றும் அந்தப் பெரியவர் சொல்ல, வள்ளி அவரை அழைத்துக்கொண்டு அங்கு சென்றாள். தண்ணீர் அருந்தியதும், அந்த பெரியவர், வள்ளியிடம் தன்னை மணந்து கொள்ளும்படி வேண்ட, கோபம் கொண்ட வள்ளி, அம் முதியவரைக் கடுஞ்சொற்கள் கூறி வசை பாடினாள். அதுவும் அவருக்கு இசையாகவே இருந்தது.
அந்த இடத்தைவிட்டு அகல வள்ளி முயற்சித்த போது, எங்கிருந்தோ ஒரு காட்டு யானை வந்தது. அதைக் கண்டு நடுங்கிய வள்ளி, இந்தக் கிழவர் மீது வந்து விழுந்தாள். அப்போது, கிழவர் உருவில் இருப்பவர் குறிஞ்சிக் கிழவனான முருகப்பெருமான் என்று அறிந்தாள். வந்த யானையும், ‘தம்பி தனக்காக வனத்தணை’ந்த அண்ணன் விநாயகப் பெருமான் என்று புரிந்துகொண்டாள்.
“அத்துயர் அதுகொடு சுப்பிர மணிபடும் அப்புனம் அதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே”
என்று கைத்தல நிறைகனி பாடலில் விநாயகரைத் துதிக்கிறார் அருணகிரிநாதர்.
வள்ளியும் முருகனும் ஒருவரை ஒருவர் தினைப்புனத்தில் தினமும் சந்தித்து வந்தனர். வேடன் உருவிலேயே முருகன் நாளும் சந்தித்து வந்தான். ஒரு நாள், பயிர்களை அறுவடை செய்யும் காலம் வந்தது. அதன்பின், வேடர்கள் பெண்களை பயிர் காவல் செய்ய அனுப்பமாட்டார்கள். தினைப்புனத்துக்கு வந்த முருகன், வள்ளியைக் காணாமல் தவித்தான். “சுனையோடு அருவித் துறையோடு, பசுந்தினையோடு இதணோடு” தேடித் திரிந்தான்.
தொடரும்....