வள்ளியும், தன் வீட்டில் இருந்தபடியே தவித்துக்கொண்டிருந்தாள். ஒரு நாள், நள்ளிரவில், வள்ளியின் வீட்டிற்கே வந்துவிட்டான் முருகன். வள்ளியைத் தன்னோடு அழைத்துக்கொண்டு சென்றான்.
‘அருக்கார் நலத்தை’ எனத் தொடங்கும் திருவருணைத் திருப்புகழில்,
“உரத்தோளிடத்தில் குறத்தேனை வைத்திட்டு ஒளித்தோடும் வெற்றிக் குமரேசா” என்று, முருகன் வள்ளியைத் தன் பலமிகுந்த தோளில் தூக்கி வைத்துக்கொண்டு ஓடினான் எனப் பாடுகிறார்.
வள்ளியைக் காணாது திகைத்த வேடர்கள், அவளைத் தேடக் கிளம்பினர். வேடனையும் வள்ளியையும் பார்த்தனர். வேடனாய் வந்த முருகன் மேல் அம்புகளை எய்தனர். முருகனின் கொடியில் இருக்கும் சேவல் கொக்கரித்தது. அதன் சத்தத்திலேயே வேடர்கள் மாண்டனர். வழியில் முருகனும் வள்ளியும் நாரதரைச் சந்தித்தனர். நாரதர் முருகனிடம், “வள்ளியின் பெற்றோர் சம்மதத்தைப் பெற்று அவளை மணப்பதே சரி” என்றார். முருகன் வள்ளியை மீண்டும் அவளிடத்திற்கே அனுப்பினான். முறையாக வந்து பெண் கேட்பதாகத் தெரிவித்தான்.
மேலும், இறந்த வேடர்களை மீண்டும் உயிர்பெறச் செய்தான். தன் சுய உருவில் வள்ளிமலைக்குச் சென்றான்.
இப்போது, நம்பிராஜன் மிகவும் மகிழ்ந்தான். தன் குல தெய்வமான முருகன், பணியா? எனத் தன் மகளிடம் பணிந்த எளிவந்த தன்மையை எண்ணி எண்ணி மெச்சினான்.
ஊதுகொம்பு, புல்லாங்குழல் போன்ற சின்னங்கள் ஒலிக்க, குறிஞ்சி நிலத்துக்குரிய வேடர்களின் இடமான குறிச்சி எனப்படும் வள்ளிமலையில் சென்று திருமணம் செய்துகொண்டான் முருகன் என்று கந்தர் அலங்காரத்தில் பாடுகிறார்.
“கோடு குழல் சின்னம் குறிக்க, குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னம் குறிச்சியில் சென்று கல்யாணம் முயன்றவனே” என்கிறார்.
முருகன் வள்ளி திருமணத்தில், வள்ளி நாயகி மூலம் கிடைத்த சீர்வரிசை எவை என்று கந்தர் அந்தாதியில் பாடுகிறார்.
“சீ தனம் கோடு புயம் கை கொண்டார் திரு மருக!
சீதன் அம் கோடு முடியாளர் சேய் தனக்கு ஏது உளதோ?
சீ தனம் கோள் துனி தரும் என்பார் தொழும் தேவி பெறும்
சீதனம் கோடு, கொடி, வேல், மயூரம் சிலை அரசே”
[மால் மருகனும், ஈசன் மகனுமான முருகனுக்கு, வள்ளியை மணந்ததால் கிடைத்த சீர் வரிசை – ஊதுகொம்பு, சேவல் கொடி, வேல், மயில், மலைகளை ஆளும் உரிமை ஆகியவை]
வள்ளியாய் அவதரித்து முருகனை மணந்த சுந்தரவல்லியை, “சுந்தர ஞான மென் குற மாது” என்று பாடி மகிழ்கிறார் அருணகிரிநாதர்.
வள்ளியின் மனத்தை, அவள் அறியாமலேயே கவர்ந்து மணந்த முருகனை, “செம்மான் மகளைத் திருடும் திருடன்” என்று பாடுகிறார்.
வள்ளி தெய்வயானை இருவரையும் மணந்து, இன்பம் விளைய அன்பின் அணையும் என்றும் இளைய பெருமாளான முருகக் கடவுளை யாவரும் வணங்கி மகிழ்ந்தனர்.
நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடிகொண்டிருப்பவை – ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலம். சூரபத்மன் – ஆணவம்; சிங்கமுகன் – கன்மம்; தாரகன் – மாயை; இந்த மும்மலங்களும் உண்மைப்பொருளான தெய்வத்தைக் காணவிடாமல் தடுக்கின்றன. ஞானம் என்னும் ஒளிபொருந்திய வேலை இறைவன் நம் மீது எறிந்தால், அந்த அருளொளி, இருளாகிய மலங்களை அழித்துவிடும். இதுவே சூர சம்ஹாரம் உணர்த்தும் உண்மை.
ஜீவாத்மாக்களாகிய நாம், காமம் முதலிய ஆறு மலங்களால் கட்டுண்டு கிடக்கிறோம். நம் உள்ளமே தினைப்பயிர். அறுமலங்களே அப்பயிரைக் கொத்திக் கெடுக்கும் பறவைகள். இறைவனின் நாமம் எனும் கல்லை, நாக்கு என்ற கவணில் வைத்துத் தொடர்ந்து பிரயோகித்து வர, பறவைகள் பயிராகிய நம்மைக் கொத்தாமல் இருக்கும். ஒரு நிலையில், பயிராகிய நம் உள்ளம் பக்குவும் அடையும் போது, அந்தப் பரம்பொருள் நம்மைத் தேடி வந்து ஆட்கொள்ளும்.
முருகனையே எண்ணி உருகும் ஒவ்வொரு ஜீவனும் வள்ளியே. வேளை பார்த்து வந்து ஆட்கொள்வான் முருகவேள். இதனை உணர்த்துவதே வள்ளி திருமணம்.
வேளை பார்த்து நம்மை ஆட்கொள்ளும் முருகவேளை “திருவேளைக்காரன்” என்று பாடுகிறார்.
“செவிக்கு உன் தவாரண நல்கு இசை பூட்ட, வன் சிந்தை அம்பு
செ வி குன்ற, வாரணம் அஞ்சல் என்று ஆண்டது; நீண்ட கன்ம
செ இக் குன்று அவா ரண வேலாயுதம் செற்றது; உற்றன கட்
செவிக்குன்ற வாரண வள்ளி பொற்றாள்; மற்றென் தேடுவதே?”
நாகாசல வேலவனே! உன் திருப்புகழை நான் செவிமடுத்த உன் சேவல் கொடி, என் ஆன்மாவை அஞ்சேல் என்றது. உன் வேலானது, பிறவிப்பிணிக்கு வித்தான ஆசையைத் தகர்த்தது. உன் தேவிமார்களின் திருவடி தீக்ஷையும் கிடைத்தது, இனி, நான் தேட வேண்டியது எதுவும் இல்லை.
“ஆடும் பரி, வேல், அணி சேவல் எனப்
பாடும் பணியே பணியாய் அருள”
எல்லாம் வல்ல முருகப்பெருமானையே வேண்டி நலமுறுவோம்.
வேலும் மயிலும் சேவலும் துணை.
வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா!
முருகேசனே வரவேணுமே – நிறைவுற்றது.
முருகா சரணம்.