வைகல் மாடக்கோவில். மூலவர் வைகல்நாதர், செண்பகாரண்யேஸ்வரர். அம்மன் பெயர் கொம்பியல் கோதை. தலவிருட்சம் செண்பகமரம். தீர்த்தம் செண்பக தீர்த்தம். நாகப்பட்டினம் மாவட்டம். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல்பெற்ற ஸ்தலம் ஆகும். அழகிய சிறிய கிராமம். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். PINCODE - 612101.
இந்தக் கோவில் தற்போது சிதிலமடைந்து இருக்கின்றது. பொலிவும் குறைந்து காணப்படுகிறது. அன்பர்களினுடைய உதவி தேவை. கோச்செங்கண்ணன் கட்டிய மாடக்கோவிலில் இதுவும் ஒன்றாகும். அதனால் இது வைகல் மாடக்கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஊரிலே சிவனது மூன்று கண்களாக மூன்று கோவில்கள் உள்ளன. வலது கண்ணாக விசாலாக்ஷி ஸமேத விஸ்வநாதர் கோவில். இடது கண்ணாக பெரியநாயகி ஸமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில். நெற்றிக்கண்ணாக கொம்பியல் கோதையுடனாகிய வைகல்நாதர்.
இந்த மூன்று திருக்கோவிலுமே பிரம்மா, விஷ்ணு, லக்ஷ்மி, அகஸ்த்தியர் ஆகியோர் வழிபட்ட ஸ்தலமாகும்.
தன்னுடைய குட்டியைத் தேடி வருந்திய யானை ஒன்று தனது தந்தத்தினாலே இங்கிருந்த ஈசல் புற்றைக் காலால் மிதித்துச் சேதப்படுத்தியது. புற்றினை அழித்த யானையை ஈசல்கள் கடித்துக் கொன்றன. தவறை உணர்ந்த யானையும், ஈசலும் இந்த ஸ்தலத்தினுடைய இறைவனை வழிபட்டு அருள் பெற்றன என்று புராணம் கூறுகின்றது.
ஒருகாலத்திலே பூமாதேவி தன்னை மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்டினாள். திருமாலும் மணம் செய்து கொண்டார். அதனால் மஹாலக்ஷ்மிக்குக் கோபம் ஏற்பட்டது. லக்ஷ்மிதேவி செண்பக வனம் என்ற இந்தத் தலத்திலிருந்து தவம் செய்தாள். பிறகு ஈசனுடைய அருளினாலே, பெருமாளும், லக்ஷ்மிதேவியும் ஒன்றாக சேர்ந்தார்கள்.
திருச்சிற்றம்பலம்.