தன் யாத்திரையைத் தொடர தீர்மாணித்த காஷ்யபர், மனைவி – மக்களிடம் விடைபெற்றுக் கொண்டு, வேறொரு இடத்திற்குச் சென்றார். இதுதான் சரியான நேரம் என்றறிந்த மாயா, தன் மகன்களிடம், “சிவபெருமானை நோக்கித் தவம் செய்து, அழியா வரத்தைப் பெற்றுவருவீர்களாக” என்று ஆணையிட்டாள். மூவரும் வீட்டை விட்டுச் சென்று, கடுந்தவம் இயற்றினர். பல காலம் ஆகியும் சிவபெருமான் வராத காரணத்தால், மூத்தவன் சூரபத்மன், தீயை மூட்டி, அதற்குள் குதித்து, உயிரை மாய்த்துக்கொள்ள தீர்மாணித்தான். தீக்குள் குதித்த அடுத்த கணத்தில், சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, அவர்களைக் காத்தார். தவத்தில் மெச்சியதாகவும் வேண்டும் வரங்களைக் கேட்கவும் பணித்தார்.
சூரபத்மன், தனக்கு அழியா வரம் வேண்டும் என்று சிவபிரானிடம் கேட்க, பெருமானோ, “உலகில் வாழும் உயிர்கள் இறத்தல் என்பது நியதி; ஆதலால் நீ பல்லாண்டு காலம் வாழ அருளுகிறோம்; என்னுடைய சக்தியைத் தவிர வேறெதுவும் உன்னை அழிக்காது” என்று கூறி மறைந்தார்.
சகோதரர்கள் மூவரும் மகிழ்ச்சியுற்றனர். தாய் மாயா தேவியிடம் சென்று, நடந்தனவற்றைக் கூறினர். மனமகிழ்ந்த மாயா தேவி, அவர்களை ஆசிர்வதித்தார்.
மூன்று அசுரர்களும், தங்கள் பகைவர்களான தேவர்கள் வாழும் அமராவதி பட்டினத்தை நோக்கிச் சென்றனர். பெரும் போர் மூண்டது, போரின் முடிவில், தேவர்கள் அசுரர்களிடம் தோல்வியுற்றனர். அவர்களை அடிமைகளாக்கி, மூவுலகையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர் அசுரர்கள். உலகோர் யாவரும் துன்புற்றனர். தேவர்களின் தலைவனான இந்திரனின் மகன் ஜெயந்தன் மற்றும் பலர் சூரபத்மனின் நகரமான வீரமகேந்திரபுரியில் சிறைவைக்கப்பட்டனர்.
இந்திரனும் சசிதேவியும் பூவுலகை அடைந்தனர். ஒரு காட்டில் சசிதேவியை விட்டுவிட்டு, தவம் செய்ய சென்றான் இந்திரன்.
சசிதேவிக்குக் காவலாக ஐயனார் இருந்தார் என்று கூறுவர் பெரியோர். மூங்கில் வடிவில் இந்திரன் தவம் செய்த பதியே வேணுபுரம் எனப்படும் சீகாழி (சீர்காழி).
இந்திரன் மூங்கில் வடிவெடுத்துத் தவம் செய்தது, சிவபெருமான் அவன் தவத்தில் மகிழ்ந்து, “அஞ்சேல்” என்று அருளியது, முருகன் திருவவதாரம், தேவியிடம் வேல் பெறுதல், சூர சம்ஹாரம், தெய்வயானை – வள்ளி திருமணம் போன்ற நிகழ்வுகளை, அருணகிரிநாதர் திருப்புகழ் முதலிய நவமணி நூல்களில் எப்படிப் பாடியிருக்கிறார் என்று அனுபவித்து, கந்தனின் இன்னருளுக்குப் பாத்திரம் ஆவோம்.
“பூமாது உரமே அணி” எனத் தொடங்கும் சீகாழித் திருப்புகழில், அசுரர்கள் தந்த ஆச்சுறுத்தலால் பயந்து, திருமால், பிரமன், இந்திரன், முனிவர் பலர் யாவரும் ஒன்றுகூடி, சிவபெருமானிடம் சென்று, “பகைவர்களை அழிக்கவல்ல ஒரு வீரனைத் தந்தருள்வாயாக” என்று வேண்டியதைப் பாடுகிறார் அருணகிரிநாதர்.
“பூமாது உரமே அணி மால், மறை
வாய் நாலுடையோன், மலி வானவர்
கோமான், முனிவோர் முதல்யாரும் இயம்பு வேதம்
பூராயமதாய் மொழி நூல்களும்
ஆராய்வதிலாது அடல் அசுரர்
போரால் மறைவாயுறு பீதியின் வந்து கூடி
‘நீ மாறு அருளாய்’ என ஈசனை
பாமாலைகளால் தொழுதே….”
என்று பாடுகிறார்.
இதனைக் கேட்ட ஈசனார், தத்புருஷம், ஈசானம், சத்யோஜாதம், வாமதேவம், அகோரம் மற்றும் யாரும் அறிந்திராத அதோ முகம் எனும் உள் முகத்தினின்றும் ஆறு பொறிகளை, ஆறு நெற்றிக்கண்ணிலிருந்து தோற்றுவித்தார்.
அந்தப் பொறிகளை அக்னியிடம் கொடுத்தார். அக்னி தேவானால், அந்த வெப்பத்தைப் பொறுக்கமுடியவில்லை.
“லகு கரம் பொறுப்பன் என திருக்கண் தீ ராகம் அலமறவே கருகச் சிவந்தவனே” என்று கந்தர் அந்தாதியில் பாடுகிறார்.
‘இந்தத் தீப்பொறிகள் மிகவும் அற்பமானவை. நான் எளிதில் தாங்கிச் செல்வேன்’ என்று கர்வத்தோடு சொன்ன, அக்னி தேவனை, அவன் நிறமும் காந்தியும் வருந்துமாறு, கருகிப் போகும்படி, கண்களால் பார்த்துக் கோபித்தவனே என்று முருகனைப் பாடுகிறார்.
அக்னியின் தவிப்பைப் பார்த்த சிவபெருமான், வாயுவின் துணைகொண்டு, கங்கையில் இப்பொறிகளை விடுமாறு பணித்தார். “செங்கை வெம் தீ செச்சைய வாவி விடுகு எனும்…” என்று மற்றொரு கந்தர் அந்தாதியில் பாடுகிறார்.
வாயுவும் அக்னியும் அந்தப் பொறிகளை கங்கையிடம் விட, கங்காதேவி, அவற்றை “சரவணப் பொய்கை”யில் சேர்ப்பித்தாள். அங்கு மலர்ந்திருந்த ஆறு தாமரை மலர்களை அவை அடைந்தன. ஆறு குழந்தைகளாக அவை மாறின.
தொடரும்....