நாலாயிர திவ்ய ப்ரபந்தம் என்பது வைணவத்தின் தமிழ் வேதம் ஆகும். வைணவர்கள் மட்டுமில்லாமல், அனைவரும் பக்தியுடன் பாராயணம் செய்ய வேண்டிய ஒரு உயர்ந்த தமிழ்ப் பாடல் தொகுப்பு இதுவாகும். பக்தி, அன்பு, சமரசம் என்று பலவும் ஒன்றாக அமைந்துள்ள சாரம் இந்த திவ்ய ப்ரபந்தம். இந்தத் தொகுப்பை அருளியவர்கள் பன்னிரண்டு ஆழ்வார்கள். இவர்கள் இறைவன் மேல் பக்தியில் ஆழ்ந்து திளைப்பவர்கள். இந்த அரிய பாடல்களைத் தொகுத்து அளித்தவர் நாதமுனி அடிகள் ஆவார். இராமானுஜர் இவற்றைத் தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும் பரப்பிய அரிய தொண்டினைச் செய்தார்.
ஆழ்வார்களின் அவதார மாதம், நக்ஷத்ரம், இடம், அவர்கள் அருளிய பாடல்கள், அவற்றின் எண்ணிக்கை ஆகியவை:
பொய்கை ஆழ்வார் - பாஞ்சசன்னியம் (சங்கு) அம்சம்
ஐப்பசி - திருவோணம் -திருக்கச்சி (காஞ்சிபுரம்)
முதல் திருவந்தாதி (100 பாடல்கள்)
பூதத்தாழ்வார் - கௌமோதகம் (கதை) அம்சம்
ஐப்பசி - அவிட்டம் – திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்)
இரண்டாம் திருவந்தாதி (100)
பேயாழ்வார் - நாந்தகம்(வாள்) அம்சம்
ஐப்பசி – சதயம் -திருமயிலை (மைலாப்பூர்)
மூன்றாம் திருவந்தாதி (100)
திருமழிசை ஆழ்வார் - ஆழி (சக்கரத்தாழ்வார்) அம்சம்
தை - மகம் - திருமழிசை
நான்முகன் திருவந்தாதி (96) , திருச்சந்தவிருத்தம் (120)
நம்மாழ்வார் - சேனை முதலியார் அம்சம்
வைகாசி - விசாகம் -திருக்குருகூர்
திருவிருத்தம் (100), திருவாசிரியம் (7), பெரிய திருவந்தாதி (87), திருவாய்மொழி (1102)
குலசேகர ஆழ்வார் - கௌஸ்துபம் அம்சம்
மாசி - புனர்பூசம் -திருவஞ்சிக்களம் (கேரளமாநிலம்)
பெருமாள் திருமொழி (105)
பெரியாழ்வார் - கருடாழ்வார் அம்சம்
ஆனி - சுவாதி -ஸ்ரீவில்லிபுத்தூர்
திருப்பல்லாண்டு (12), பெரியாழ்வார் திருமொழி (461)
தொண்டரடிப்பொடி ஆழ்வார் - வைஜயந்தி (வனமாலை) அம்சம்
மார்கழி – கேட்டை -திருமண்டங்குடி
திருமாலை (45), திருப்பள்ளியெழுச்சி (10)
திருப்பாணாழ்வார் - ஸ்ரீவத்ஸம் அம்சம்
கார்த்திகை – ரோகிணி -திரு உறையூர்
அமலனாதிபிரான் (10)
திருமங்கை ஆழ்வார் - சார்ங்கம் (வில்) அம்சம்
கார்த்திகை - கார்த்திகை (கிருத்திகை) -திருக்குறையலூர்
பெரிய திருமொழி (1084), திருக்குறுந்தாண்டகம் (20), திருநெடுந்தாண்டகம் (30), திருவெழு கூற்றிருக்கை (1),
சிறிய திருமடல் (1), பெரிய திருமடல் (1).
ஸ்ரீ ஆண்டாள் - பூமாதேவி அம்சம்
ஆடி - பூரம் -ஸ்ரீவில்லிபுத்தூர்
திருப்பாவை (30), நாச்சியார் திருமொழி (143)
மதுரகவி ஆழ்வார் - நித்யஸூரி குமுதர் அம்சம்
சித்திரை - சித்திரை -திருக்கோளூர்
கண்ணிநுண் சிறுத்தாம்பு (11)