மதுரையில் வாழ்ந்த சிதம்பரம் பிள்ளை – அன்னத்தாச்சி தம்பதியர்களின் புதல்வர் மகவித்துவான். சிதம்பரம் பிள்ளை மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் முத்திரையிடும் பணி செய்பவர். கோயில் நிர்வாகத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், திருச்சிக்கு அருகில் உள்ள எண்ணெய் மாகாணம் என்னும் ஊரில் தங்கினார். ஸ்ரீபவ ஆண்டு பங்குனித் திங்கள் 26-ம் நாள் (06.04.1815), வியாழக்கிழமை, பூரட்டாதி நட்சத்தி நன்னாளில், அன்னத்தாச்சி ஓர் ஆண் மகவை ஈன்றெடுத்தார். ஆலவாய் அண்ணலின் பெயரையே குழந்தைக்குச் சூட்டினர். பிறகு சோமரசம்பேட்டைக்குக் குடிபெயர்ந்தனர்.

தந்தையே முதல் குருவாக ஆனார். மீனாட்சிசுந்தரம், நெடுங்கணக்கு, ஆத்திச்சூடி, அந்தாதிகள், கலம்பகங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள், சதகங்கள், நிகண்டுகள், கணிதம், நன்னூல் போன்ற பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். நன்னூல் முழுவதும் அவருக்கு மனப்பாடம்.

யாப்பிலக்கணப்படி, செய்யுள் புனையும் ஆற்றல் அவரிடம் இருந்தது பிறகு மலைக்கோட்டை மெளனமடம் வேலாயுத முனிவரிடம் பாடம் கற்றார். திருவாவடுதுறை ஆதீனம் 14-வது பட்டம் வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் மடத்தின் தலைவராக பிற்காலத்தில் ஆனவரான அம்பலவாண முனிவர், கீழ்வேளூர் சுப்பிரமணிய பண்டாரம், காஞ்சிபுரம் சபாபதி முதலியார்,  ‘தண்டியலங்கார’  பரதேசியார் ஆகியோரிடம் பல்வேறு காலகட்டங்களில் பாடம் பயின்றார். திருவம்பலம் தின்னமுதம் பிள்ளை, மழவை மகாலிங்கையர் போன்ற தமிழ்ப் புலவர்களிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டார்.

இவரது 15-வது வயதில் தந்தை காலமானார். அதன் பிறகு உறவினர்கள், காவேரியாச்சி என்ற பெண்ணை இவருக்கு மணமுடித்து வைத்தனர். இவர்களது மகன் பெயர் சிதம்பரம் பிள்ளை.

தமிழ்ப் புலவர்களிடம் உரையாடுவதற்கும், ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கும் வாய்ப்பாகத் திரிசிரபுரம் (தற்போதைய திருச்சி) சென்று, மலைக்கோட்டை கீழவீதியில் குடியேறினார். அங்கு, முத்துவீரியம் என்னும் இலக்கண நூலைச் செய்த முத்துவீர வாத்தியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார் முதலான புலவர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்திலக்கணங்களையும் தக்கவரிடம் பாடங்கேட்ட அவர், தமிழ் கற்பிப்பதையே தனது தொழிலாகக் கொண்டார். பலருக்குக் கற்பித்த காலத்திலும் கற்றோரிடம் பாடம் கேட்பதை அவர் தொடர்ந்தார்.

தனது 21-வது வயதில், திரிசிரபுரம் செட்டி பண்டாரத்தையா என்னும் அடியாரிடம் சிவ தீட்சையும் க்ஷணிகலிங்க தாரணமும் பெற்றார். அன்று முதல் வெண்ணீறு வேந்தராகவே திகழ்ந்தார்.

பிள்ளையவர்கள், மாணவர்களுக்கு உண்ணும் நேரமும், உறங்கும் வேளையும் தவிர, நாளின் எல்லா நேரங்களிலும் பாடம் சொல்வதையே குறிக்கோளாகக் கொண்டு, குருகுல முறையில், மாணவர்களிடமிருந்து கட்டணம் ஏதும் பெறாமல் அவர்களுக்கு உணவும், உறையுளும் வழங்கி தமிழ் கற்றுக் கொடுத்துப் பெரிய தொண்டு செய்தார்.

அக்காலத்தில் புகழ் பெற்ற கோயில்களுக்கு தல புராணம் எழுதும் வழக்கம் இருந்தது. பிள்ளையவர்களும், பலரது வேண்டுகோளுக்கு இணங்கிப் பல திருக்கோயில்களுக்குத் தல புராணங்களை இயற்றினார். சிற்றிலக்கியம் எனப்படும் பிரபந்தங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றவர் பிள்ளையவர்கள். பல சிவத்திருத்தலங்களுக்குச் சென்று, அத்தலங்களைப் பற்றித் தலபுராணங்களும், பதிகங்களும், அந்தாதிகளும், அங்குள்ள இறைவன்- இறைவி மீது பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா, தூது, குறவஞ்சி முதலான நூல்களும் இயற்றினார்.

‘குசேலோபாக்கியானம்’ என்ற காப்பியமும்,  ‘சேக்கிழார் பிள்ளைத் தமிழ்’ என்ற பிரபந்தமும், ‘ஆதி குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்’ என்ற வாழ்க்கை வரலாறும் பிரதானமானவை.

பிறகு ஆசிரியத் தொழில் நிமித்தமாக, 1860 முதல் மாயூரம் எனப்படும் மயிலாடுதுறையில் வசிக்கத் தொடங்கினார்; அங்கிருந்து அடிக்கடி திருவாவடுதுறை மடத்துக்குச் சென்று வந்தார். திருவாவடுதிறை ஆதீனத்தால் அங்கு வித்துவானாக நியமிக்கப்பட்டார். ஆதீனகர்த்தர் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு  ‘மகாவித்துவான்’ என்ற பட்டத்தை வழங்கினார்; அன்றுமுதல்  ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை’ என்று அழைக்கப்பட்டார்.

1871-ல் உ.வே.சாமிநாதையர் மகாவித்துவானின் மாணாக்கர் ஆனார். ஆசானோடிருந்து பல்வேறு நூல்களைப் பாடங்கேட்டார். வேதநாயகம் பிள்ளையும் பிள்ளையவர்களின் பாடம் கற்றவர். பிள்ளையவர்கள் 1876-ல் நோய்வாய்ப்பட்டார். மாணாக்கர் புதுச்சேரி சவேரிநாத பிள்ளை மார்பில் சாய்ந்த வண்ணம், திருவாசத்தின் அடைக்கலப்பத்தை உ.வே.சா பாட,  தை மாதம் 20-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை, 01.02.1876-ல் தம் 61-ஆம் வயதில் சிவனடி சேர்ந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கம்பன், இணையிலாப் புலவன், புலவர்களின் புலவன், மெய்ஞானக் கடல், நாற்கவிக்கிறை, சிரமலைவாழ் சைவசிகாமணி முதலிய முப்பதுக்கு மேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர் பிள்ளையவர்கள்.

தமிழுக்கு இவரால் மரியாதையும் அபிமானமும் பெருகியது. அவர் செல்வத்தை நாடாதவராக இருந்ததால், அவரது குடும்பம் வறுமையில் இருந்தது. அதைப் பிள்ளையவர்கள் பொருட்படுத்தியதில்லை. தனது குடும்பம் வறுமையில் தவித்த போதும் நாடி வந்த மாணாக்கர்களுக்கு உணவு, உறைவிடத்துடன் தமிழ் போதித்த மகான்.

மகாவித்துவான் இயற்றிய நூல்கள்.

தலபுராணங்கள்- 22
சரித்திரம்- 3
மான்மியம்- 1
காப்பியங்கள்- 2
பதிகம்- 4
பதிற்றுப்பத்தந்தாதி- 6
யமக அந்தாதி- 3
மாலை- 7
பிள்ளைத்தமிழ்- 10
கலம்பகம்- 2
கோவை- 3
உலா- 1
தூது- 2
குறவஞ்சி- 1
பிறநூல்கள்- 7
- மொத்த நூல்கள் ஏறத்தாழ 80.


பிள்ளையவர்கள் பாடிய பல பாடல்கள் அச்சேறாமல் மறைந்து போய் விட்டன. அவரது முதன்மைச் சீடரான தமிழ்த் தாத்தா உ.வே.சா., பிள்ளையவர்களின் 5,021 பாடல்களைப் பாதுகாத்து வழங்கி உள்ளார்.

Posted 
May 31, 2021
 in 
பாடல்கள்
 category

More from 

பாடல்கள்

 category

View All

Join Our Newsletter and Get the Latest
Posts to Your Inbox

No spam ever. Read our Privacy Policy
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.