தமிழ் நாட்டில் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருளாளர் அருணகிரிநாதர். இவர் திருவண்ணாமலையில் பிறந்தார். இவர் தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவர். திருப்புகழில் 1000க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன. திருப்புகழ் பாடல்கள் சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பிரசித்தி பெற்றவை. அருணகிரிநாதர், தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2,000 பாடல்கள் மட்டுமே இன்று கிடைத்துள்ளன. முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றன.
திருப்புகழ் பாடல்கள் பல ஆண்டுகளாக பல இடங்களில் ஓலைச் சுவடிகளில் இருந்தன. திருப்புகழ்ப் பாடல்கள் பாடுவாரின்றிக் கிடந்தன. வி.டி. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், அவரது மகன் வி.எஸ். செங்கல்வராய பிள்ளை அவர்கள் போன்றோர் அவற்றின் பெருமையை உணர்ந்து அவற்றை வெளியிட்டார்கள்.
1871 இல் வி.டி. சுப்ரமணிய பிள்ளை, ஒரு மாவட்ட அதிகாரியாக இருந்தார். அவர் சிதம்பரம் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்டார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர், திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொண்டு, தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை, கையெழுத்துப் பிரதிகளைச் சேகரித்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார், முதலாவது பதிப்பு, 1894; இரண்டாவது பதிப்பு 1901.
அருணகிரியாரின் பாடல்கள்
கந்தர் அந்தாதி - 102 பாடல்கள்
கந்தர் அலங்காரம் - 108 பாடல்கள்
கந்தரனுபூதி - 52 பாடல்கள்
திருப்புகழ் - 1325 பாடல்கள்
திருவகுப்பு - 25 பாடல்கள்
சேவல் விருத்தம் - 11 பாடல்கள்
மயில் விருத்தம் - 11 பாடல்கள்
வேல் விருத்தம் - 11 பாடல்கள்
திருவெழுகூற்றிருக்கை - 1
அருணகிரியாரின் பாடல்கள், பொருள் விளக்கம், இசைப்பதிவு, ஆய்வுக்கட்டுரைகள் போன்றவற்றை https://kaumaram.com/ தளத்தில் அருமையாக வெளியிட்டுள்ளார்கள்.
முருகா சரணம்.