ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவருடைய இயற்பெயர் மகாதேவ சுப்ரமணியன். இவர் காஞ்சி மடத்தினுடைய 69-வது பீடாதிபதி ஆவார். இவர் 1935-ம் வருடம் ஜூலை மாதம் 18-ம் நாள், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இருள்நீக்கியில் பிறந்தார். திருவிடைமருதூர் பாடசாலையிலே வேத அத்தியயனம் செய்தார்.
சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலத்திலும் வல்லமை மிக்கவர். திருவிடைமருதூர் பாடசாலையிலே ரிக்வேத ஆசிரியரான பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகளிடம் ரிக்வேதத்தையும், தர்ம சாஸ்த்திரத்தையும் பயின்றார்.
1948-ம் வருடம் ஸ்ரீ பரமாச்சாரியார் மகாதேவ சுப்பிரமணியன் அவர்களை அடுத்த பீடாதிபதியாக அமர்த்த விரும்புவதாகத் தெரிவித்தார். பெற்றோர்களும் சம்மதித்தார்கள். ஆசாரியார் ஆவதற்கு உண்டான பாடங்களைக் கற்பதற்காக, திருவானைக்காவல் வேத பாட சாலைக்குச் சென்றார். 1954-ம் வருடம், மார்ச் மாதம் 22-ம் தேதி சன்னியாச தீக்ஷை பெற்று, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். பிறகு திக்விஜயம் மேற்கொண்டார்.
16 ஆண்டுகள் ஸ்ரீ பரமாச்சாரியாருடன் இருந்து, நன்கு கற்று, திருவானைக்கா கோவில் மஹாகும்பாபிஷேகத்தை நடத்தி வைக்க, முதல் யாத்திரையைத் தனியாகத் துவக்கினார். பாரத தேசத்தில் நிறைய இடங்களுக்கு நடைப்பயணமாகவேச் சென்றுள்ளார். 1988-ல் நேபாள நாட்டிற்கு வருகை புரிந்தார்.
பாரத தேசத்தினுடைய மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்றார். காஞ்சி மடத்தை விரிவு படுத்தினார். ஆன்மீகம் மட்டுமன்றி, கல்வி, சுகாதாரம், கோவில்கள் திருப்பணி ஆகியவற்றிலும் மிகுந்த அக்கறை காட்டினார். சுவாமிகளினுடைய அயராத முயற்சியால், காமகோடி பீடம் இன்று நாட்டினுடைய பல இடங்களிலும் அமைந்துள்ளது.
2000-ம் ஆண்டில் வங்காள தேசத்திற்கும் சென்றார். அதை முன்னிட்டு அவரைக் கவுரவிக்கும் வகையில், ஸ்ரீ தாரகேஸ்வரி கோவிலின் வாயிலுக்கு சங்கராச்சாரியார் நுழைவுவாயில் என்று பெயர் சூட்டி உள்ளனர். 1993-ம் ஆண்டு காஞ்சியிலே ஏனாத்தூர் பல்கலைக்கழகத்தைத் துவக்கி வைத்து, ஸ்ரீ சந்திரசேகரந்திர சரஸ்வதி விச்வ மகா வித்யாலயா என்று பெயரிட்டார்.
பக்த கோடிகள், வேதவிற்பனர்கள், சாஸ்திரம் படித்தவர்கள், ஏழைகள், வயதானவர்கள், ஆதரவற்றவர்கள் போன்ற பலகோடி மக்களுக்கு உதவி புரிய பல தர்ம ஸ்தாபனங்களை அமைத்துச் சேவை செய்து அருளினார்.
இந்தியா முழுவதும் சென்று ஒற்றுமைக்காக பாடுப்பட்டவர். ஜன கல்யாண் என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். குருவுக்காக ஓரிக்கையில் மகாமண்டபம் எழுப்பியுள்ளார். ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 2018-ம் ஆண்டு 28, பிப்ரவரி மாசி மாதம் சுக்ல த்ரயோதசியிலே, மகாஸித்தி அடைந்தார்.
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர.