ஸ்ரீ ஸர்வஞ்யாத்மேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள். இவர் பொது ஆண்டிற்கு 400 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உலகிலே அவதரித்தவர். இவருடைய தந்தையின் பெயர் ஸ்ரீவர்த்தனர். இவரது இயற்பெயர் மகாதேவர்.
ஆதிசங்கரர் சர்வஞ்ய பீடம் ஏறிய பிறகு நெல்லை மாவட்டத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான வேதவிற்பனர்கள் அவருடன் வாதிட்டார்கள். அவர்கள் வாதத்தில் சங்கரரை வெல்ல முடியவில்லை.
ஏழே வயதான ஒருவர் 3 நாட்கள் வாதிட்டார். அவர்தான் மகாதேவர். 4-ம் நாள் பகவத்பாதரினுடைய கருத்தை ஏற்றுச் சரணடைந்தார். இந்த இளம் வயதிலேயே அவருடைய ஆழமான ஞானத்தைக் கண்டு, அவரைத் தன்னுடைய சிஷ்யராக ஆதிசங்கரர் ஏற்றுக்கொண்டார்.
பெற்றோரை வரவழைத்துத் தன்னுடைய விருப்பத்தைச் சொன்னவுடன் அவர்களும் சம்மதித்தார்கள்.
ஆதிசங்கரர் அவருக்கு சன்னியாச தீக்ஷை அளித்து அவருக்கு சர்வஞ்யாத்மர் என்றப் பட்டத்தைச் சூட்டினார். பால சன்னியாசியான இவர் சுரேஶ்வராசாரியார் பொறுப்பில் விடப்பட்டு, சகல சாஸ்த்திர பண்டிதராகவும் ஆனார். இந்திர சரஸ்வதி என்ற பட்டம் இவரிலிருந்து தான் தொடங்கியது. சுரேஶ்வரர் இவரைக் குறிப்பிடும்போது தேவேஶ்வரர் என்கிறார். இவர் ஸ்ரீ சங்கர சூத்ரபாஷ்யத்திற்கு உரை எழுதினார். இந்த உரையிலே1267 ஶ்லோகங்கள் உள்ளன.
கவிதை வடிவில் சர்வஞ்ய விலாசம் என்ற நூலையும் இயற்றியுள்ளார். துவாரகா மடத்து பிரம்ம ஸ்வரூபருக்கு இவர் குருவாக இருந்தார். இவர் காலத்துச் சோழமன்னன் மனுகுலாதித்த சோழனைப் பற்றி இவருடைய நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். இவர் காஞ்சியிலே பொது வருடத்திற்கு 364 ஆண்டுகளுக்கு முன்பு நள ஆண்டு வைகாசி மாதம் கிருஷ்ணபக்ஷ பஞ்சமியிலே சித்தியடையந்தார்.
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர.