திருக்கச்சி நம்பி. பூவிருந்தவல்லி என்பது சென்னைக்கு அருகில் உள்ள ஊர். இந்த ஊரிலே வைசிய குலத்திலே வீரராகவருக்கும், கமலை என்பவருக்கும் 4-வது திருமகனாய்ப் பிறந்தவர் திருக்கச்சி நம்பி. இவருடைய இயற்பெயர் கஜேந்திரதாசர் என்பதாகும்.
இவர் பார்கவரான திருமழிசை ஆழ்வாருடைய அருளாலே பிறந்ததால், இவருக்கு பார்கவப்பிரியர் என்ற பெயரும் உண்டு. ஆளவந்தாருடைய சீடர்களுள் ஒருவர். அவர் அளித்த திருநாமம் பேரருளாளதாசர் என்பதாகும். காஞ்சிபுரத்தில் வாழ்ந்தமையால் திருக்கச்சி நம்பி என்றும், காஞ்சிமுனி என்றும் அழைக்கப்பட்டார்.
இவர் வரதராஜப் பெருமாளுக்குத் திருவாலவட்டத் தொண்டு செய்து கொண்டிருந்தார். ஒருவருக்கும் தெரியாமல் வரதராஜப் பெருமாள் இவருடன் பேசிக் கொண்டிருப்பார். ஒருநாள் அந்திமக் காலத்தில் மோட்சம் விரும்பிய நம்பிக்கு, “நீர் வீசினீர், நான் பேசினேன் இரண்டும் சரியாயிற்று, ஒரு பரம பாகவதருடைய அபிமானத்தை நீங்கள் பெறவேண்டும். அப்போது மோட்சம் கிடைக்கும்” என்று பெருமாள் கூறினார்.
அதற்குப் பிறகு மாறுவேடத்திலே, திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடு மேய்க்கும் பணி செய்து வந்தார். அப்போது இவரை “நம் பையல்” என்று அவர் அழைத்தார். அவருடைய அபிமானத்தைப் பெற்று, நம்பையல் என்று அழைத்ததால், அவருக்கு மோட்சம் கிட்டியது.
இவரிடம் சீடராக இருந்து தொண்டு செய்யவேண்டும் என்று இராமானுஜர் ஆசைப்பட்டார். நம்பி சாப்பிட்ட பாத்திரத்திலே தானும் சாப்பிடவேண்டும் என்று இராமானுஜர் ஆசைப்பட்டார். ஆனால் நம்பி மறுத்துவிட்டார். அப்படி, தான் பிறருக்கு அடியவன் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவர்.
ஓம் நமோ நாராயணாய.