மணவாளமாமுனிகள். பெரிய ஜீயர். இவர் ஆழ்வார் திருநகரியில் ஐப்பசி திருமூலத்தில் 1370-ம் ஆண்டு அவதரித்தார். இவர் ஆதிசேஷ அவதாரமாகக் கருதப்படுகிறார். திருமலையாழ்வார் என்பவரிடம் சாஸ்திரங்களைக் கற்றார். இல்லற வாழ்க்கையை ஏற்றார்.
பிறகு ஸ்ரீரங்கம் அடைந்தார். அங்கு பல வருடங்கள் காலஷேபங்கள் மூலம் உபதேசித்து வந்தார். பிறகு துறவறம் மேற்கொண்டு மணவாள மாமுனிகள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார். அகோபிலமட ஸ்தாபகரான ஆதி வண்சடகோப சுவாமி இவருக்கு சன்னியாசம் அளித்தார்.
இவருடைய காலஷேபம் செய்யும் முறையைக் கண்டு நம்பெருமாள் திருவாய்மொழியினுடைய வியாக்யானமாகிய, ஈடு முப்பதாயிரப் படியை சொற்பொழிவு செய்யவேண்டும் என்று கட்டளை இட்டார். ஒரு ஆண்டு காலம் சொற்பொழிவு செய்தார். இவருடைய திறமையைக் கண்டு பலர் சீடர்களானார்கள்.
வானமாமலை ஜீயர், திருமலை பெரிய ஜீயர், பட்டர்பிரான் ஜீயர், கோயில் கந்தாடை அண்ணன், எறும்பியப்பா, அப்பிள்ளை, அப்பிள்ளான் மற்றும் பிரதிவாதி பயங்கரம் அண்ணா என்னும் 8 பேர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள்.
இவர் உபதேச ரத்தினமாலா, திருவாய்மொழி நூற்றந்தாதி, எதிராஜவிம்சதி, ஆர்த்தி பிரபந்தம் போன்ற பல நூல்களையும் அருளியுள்ளார். பெரிய ஜீயர் அவர்கள் இந்தப் பூவுலகத்திலே 70 ஆண்டுகள் வாழ்ந்திருந்தார்.
ஓம் நமோ நாராயணாய.