தவத்திரு வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் திருநெல்வேலியில் 1839-ஆம் ஆண்டில் அவதரித்தார். இளமை முதல், வேல் பூசையில் ஆர்வம் கொண்டு முருகனருள் சிறப்பால் புதிய கவிகள் இயற்றினார். கௌமார சாஸ்திர, ஸ்தோத்திர, கீர்த்தனை, நாடக, சரித்திர நூல்களை அருளினார். பல தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்து, ஆங்காங்குள்ள இறைவன் மீது துதிப்பாடல்கள் இயற்றினார். ஜீவ கருணை நெறியை வளர்த்து இறுதியிலே விழுப்புரத்தை அடுத்த திருஆமாத்தூரில், 1898-ஆம் ஆண்டில் திருவருள் பேறு பெற்றார்.
வண்ணச்சரபம் ஸ்வாமிகள் எழுதிய நூல்கள் மற்றும் பாடல்கள் மொத்தம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவை. அவற்றிலே நமக்குக் கிடைக்கப் பெற்றவை 50,000 ஏறத்தாழ. அவற்றை 18 தொகுதிகளாகச் சிரவை கௌமார மடத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார்கள். 2000 பாடல்களுக்கு மேற்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் இடம்பெற்றிருக்கும்.
ஸ்வாமிகள் எழுதிய ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பாடல்களில், முருகன் பிரத்யக்ஷமாகாத காரணத்தினாலே, ஸ்வாமிகளே பாதியை நீரிலிட்டும், நெருப்பிலிட்டும் அழித்து விட்டார். முருகன் காட்சியளித்த பிறகுதான் சமாதானமாகி, எஞ்சிய பாடல்களை உலகிற்கு அளித்தார்.
அந்தத் தொகை நூல்களினுடைய பட்டியல் இதோ.
முதலாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2562.
இதில் சூரியன் பிரபந்தங்கள், ஞாயிறு ஆயிரம், விநாயகர் பிரபந்தங்கள், கணபதி ஆயிரம் ஆகியவை அடங்கும்.
இரண்டாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2976.
இதில் சிவன் பிரபந்தங்கள், சிவன் ஆயிரம், சக்திப் பிரபந்தங்கள், அம்பிகை ஆயிரம் ஆகியவை அடங்கும்.
மூன்றாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2868.
இதிலே படைவீட்டுத் திருப்புகழ், படைவீட்டுத் திருப்பதிகம், தலைமலைக்காரன் பதிகம், கௌமாரர் பன்னிய பதிகம், திருச்செந்தூர், முருகன் ஆயிரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நான்காம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 3035.
திருப்பரங்குன்றம் முதல் நட்சத்திர மலை வரை உள்ள பதிகங்கள், முருகன் பதிக வருஷம் இவை அடங்கும்.
ஐந்தாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2700.
அருணாசலம் முதல் கந்தமாதனகிரி வரை உள்ள பதிகங்கள், அருணகிரி நாதர் புராணம், முருகன் துதி நூல்கள் ஆகியவை அடங்கும்.
ஆறாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2642.
சமயாதீதப் பிரபந்தங்கள், சமயாதீத ஆயிரம், திருவருள் நாட்டம், வண்ணத்து இயல்பு ஆகியவை அடங்கும்.
ஏழாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2546.
இதில் திருமால் பிரபந்தங்கள், திருமால் ஆயிரம், திருவரங்கத் திருவாயிரம் ஆகியவை அடங்கும்.
எட்டாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2427.
இதிலே தொண்டைநாட்டுத் திருத்தலங்கள், சமரச நூல் பதிகங்கள், 22 முருகன் பதிகங்கள், 11 முருகன் துதிப்பாக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஒன்பதாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2700.
நடுநாட்டுத் திருத்தலங்கள் பற்றிய பாடல்கள், சத்த சதகம் ஆகியவை அடங்கும்.
பத்தாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 3761.
இதில் கௌமார தத்துவ நூல்கள் 14, நீதி நூல்கள் 10, ஏழாம் இலக்கணம் ஆகியவை அடங்கும்.
பதினொராம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2697.
இதில் சோழநாட்டுத் திருத்தலங்கள், தெய்வத் திருவாயிரம், நந்தனப் பாமாலை ஆகியவை அடங்கும்.
பன்னிரெண்டாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 3003.
இத்தொகுதி புலவர் புராணம் என்று தனியாக அழைக்கப்படுகிறது.
பதின்மூன்றாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2754.
சிதம்பரம், பலவகைப் பதிகங்கள் 61, சிறுவகை நூல்கள் 13 ஆகியவை அடங்கும்.
பதினான்காம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2868.
இதில் கொங்கு நாட்டுத் திருத்தலங்கள், 18 அந்தாதி அலங்கார நூல்கள், 17 குரு ஸ்தோத்திரங்கள் அடங்கும்.
பதினைந்தாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2494.
இதில் பாண்டி நாட்டுத் திருத்தலங்கள், திருநெல்வேலி, கேரளா, இலங்கையிலே உள்ள தலங்களின் பதிகங்கள், பல்வகைத் துதிப்பாக்கள் அடங்கும்.
பதினாறாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2474.
திருவாமாத்தூர் பற்றிய சதகப்பத்து, பதிகச்சதகம் ஆகியவை அடங்கும்.
பதினேழாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 3043.
திருவாமாத்தூர் தலபுராணம், குருபர தத்துவக் காவியம், அறுவகை இலக்கணம் ஆகியவை அடங்கும்.
பதினெட்டாம் தொகுதி – மொத்தப்பாடல்கள் 2866.
இதில் ஐயாயிரம் பிரபந்தம், 82 முருகன் பதிகங்கள், தனிப்பாடல்கள் திரட்டு, இன்னும் ஆய்வு செய்ய வேண்டிய திருத்தலங்கள் பற்றிய 526 பாடல்கள் ஆகியவை அடங்கும்.
வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகளின் பாதங்களைப் போற்றி வணங்குவோம்.
முருகா சரணம்.