ஆளவந்தாருக்குப் பிறகு ராமானுஜர் ஸ்ரீரங்கம் வந்து கோயில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றார். கோயில் நடைமுறைகளில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்தார். இதனால் தங்களுடைய நிர்வாக உரிமையில் அவர் குறுக்கிடுவதாகப் பலர் கருதினர். பலர் ராமானுஜருக்கு இடையூறும் செய்தனர்.
கோயிலின் நடைமுறைகளில் பழகியிருந்த பெரிய கோயில் நம்பி என்பவர் தடையாக இருப்பதாகப் பலர் ராமானுஜரிடம் சொன்னார்கள். அவரைக் கோயில் நிர்வாகத்திலிருந்து வெளியேற்றாவிட்டால், ராமானுஜரின் எண்ணம் நடக்காது என்றனர். எம்பெருமானாரும், கோயிலை நிர்வாகம் செய்து வந்த கோவில் பிள்ளையை வெளியேற்ற நினைத்தார்.
ராமானுஜர் ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காகக் காத்திருக்கும் போது, சற்று கண் அயர்ந்தார். அரைத்தூக்கத்தில், பெருமாள் தோன்றி "கோயில் நம்பி என்னையே நம்பி என்னுடன் இருக்கிறார். அவரை வெளியேற்றாதே' என்று சொல்லி மறைந்தார். கூரத்தாழ்வானிடம் இதுபற்றி சொன்னார் ராமானுஜர். கூரத்தாழ்வானும், பெரிய கோயில் நம்பியிடம் உடையவரின் பெருமை பண்புகளைச் சொல்லவும், கோயில் நம்பிக்கு உடையவராகிய ராமானுஜர் மீது பிடிப்பு வந்து அதுவே பக்தியாக மாறியது.
ஒருநாள், ராமானுஜர் அவரது இலக்கிய அறிவைப் பாராட்டி"அமுதன்' என்ற திருநாமத்தைச் சூட்டினார். அதனால் திருவரங்கத்தமுதனார் என்ற பெயர் நிலைத்தது. ராமானுஜர் மீது கொண்ட பற்றால் கூரத்தாழ்வானின் அறிவுரையின்படி "ராமானுஜ நூற்றந்தாதி'யை அமுதனார் அருளினார்.
எல்லாப் பாசுரத்திலும் இராமானுசர் என்ற திருப்பெயர் வருவதால், இதைப் பாராயணம் செய்தாலே மாபெரும் புண்ணியம் கிட்டும்.
பெருமாள் உலாவில் உடன் செல்லும் பழக்கம் உடையவராகிய ராமானுஜருக்கு உண்டு. சித்திரை மாதம் 11
ஆம் திருநாளில், ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி, இன்று தாள வாத்தியங்கள் வேண்டாம் என்று சொல்லி மறைந்தார். அன்று பெருமாள் புறப்பாட்டின் போது தீப்பந்தங்கள் மட்டும் இருந்தன; ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவித்ததைப் பெருமாள் கேட்டுக்கொண்டு மகிழ்வுடன் சென்றார். ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் தன்னையும் ஒருவராக ஆக்கிக் கொள்கிறார் என்பது நம்பிக்கை. இன்றும் திருவரங்கம் கோயில் ரங்கநாதர் சந்நிதியில் இயற்பா சாற்றி முடித்த பின், அதனுடன் ராமானுஜ நூற்றந்தாதியும் சேவிக்கிறார்கள்.
திருவரங்கத்தமுதனார் ராமானுஜரைக் காட்டிலும் மூத்தவர் என்ற கருத்தும், 108 ஆண்டு காலம் வாழ்ந்தார் என்றும் சொல்லப்படுகிறது. திருவரங்கத்தில் மட்டும் ஸ்ரீ சுதர்சனர் சந்நிதியில் இந்த ராமானுஜதாசராகிய திருவரங்கத்து அமுதனார், சிலை உருவில் இருக்கிறார்.
நாராயண நாராயண.
SEO tags: srirangam, udaiyavar, thiruvarangathamudhanar, ramanujar, amudhan, kovil nambi