திருவிசைப்பாவை அருளிய ஆசிரியர்களில் ஏழாமவர் திருவாலி அமுதனார். இவர் திருமயிலையில் வைணவ அந்தணர் குலத்தில் தோன்றிய பெருமான். சீகாழிக்கு அருகில் உள்ளது திருவாலிநாடு. அதன் தலைநகர் திருவாலி. இந்த நகரின் திருமாலுக்குப் பெயர் அமுதன் என்பது ஆகும். இவருடைய பெற்றோர்கள் திருவாலி அமுதனாரிடத்து அளவில்லாத பக்தி கொண்டிருந்த காரணத்தால், மகனுக்குத் திருவாலியமுதன் என்று பெயரிட்டனர். வைணவர் குடியில் தோன்றிய இவர், சிவபிரானிடத்துப் பேரன்பு கொண்டு சிவனடியாராக விளங்கினார்.
தில்லை நடராசப் பெருமானையே தம் குலதெய்வமாகக் கொண்டு, சிவபக்தியில் திளைத்தார். சிவபெருமான் எழுந்தருளிய தலங்களுக்குச் சென்று திருப்பதிகம் பாடி வந்தார்.
திருவாலியமுதனார் தம்மை `மயிலையர் மன்னன்` என்றும், தாம் பாடிய திருவிசைப்பாவில், ``வரைசெய்மாமதில் மயிலையர் மன்னவன் மறைவல திருவாலி`` எனவும் பாடி உள்ளதால், இவர் மயிலையில் பிறந்தவர் என்பது புலனாகின்றது. நான்காம் பதிகத்தில் ``அறை செந்நெல் வான்கரும்பின் அணியானைகள் சூழ் மயிலை `` என்று பாடி உள்ளதால் மருதவளம் சூழ்ந்த மயிலை, அதாவது மயிலாடுதுறையாக இருக்கலாம் என்றும் கூறுவார்கள். திருவாலியமுதர் பாடிய திருவிசைப்பாப் பதிகங்கள் நான்கு; இவையனைத்தும் சிதம்பரத்தைப் பற்றி பதிகங்கள்.
திருவாலியமுதனார் காலம், முதல் இராஜராஜ சோழனுடைய கி.பி, 985-1014 ஆம் காலத்திற்கு முற்பட்டது ஆகும்.