திருப்பாணாழ்வார். இவர் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருநட்சத்திரம் கார்த்திகை - ரோகிணி. இவர் அமலன் ஆதிபிரான் என்று 10 பாசுரங்கள் அருளியுள்ளார். இவரால் பாடப்பெற்ற திவ்யதேசங்கள் மூன்று.
திருமாலினுடைய மார்பிலே வாழ்கின்ற ஸ்ரீவத்ஸத்தினுடைய அம்சமாக அவதரித்தார் திருப்பாணாழ்வார். உறையூரில், ஒரு வயலில் நெற்கதிரில், பாணர் குலத்தைச் சேர்ந்த ஒருவரால் கண்டெடுக்கப்பட்டார். பாணர் குல தம்பதிகள் திருமாலின் கருணை என்று மனம் மகிழ்ந்து, அந்தக் குழந்தையை வளர்த்தனர். திருப்பாணாழ்வார் யாழ் மீட்டி வாசிப்பதில் வல்லவர்.
காவிரித் தென்கரையிலே நின்றுக்கொண்டு திருவரங்கப் பெருமானை நோக்கித் தொழுதவாறு, கேட்பவர்களுடைய ஊனும், உயிரும் உள்ளமும் உருக, மிக நேர்த்தியாக யாழ் இசைத்து, பாடல்களைப் பாடி அருளினார்.
ஒருநாள் திருமாலுடைய புகழிலே தன்னை மறந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அந்த சமயத்திலே அங்கு நீராட வந்த, லோகசாரங்க முனிவர் என்பவர் அவரை விலகிப் போகச்சொல்லி, அவர் மீது கல்லை எறிந்தார்.
பாணரினுடைய நெற்றியிலே பட்டு, குருதி (இரத்தம்) வழிந்தது, வழிந்தது. உடனே திருவரங்கப் பெருமாளின் நெற்றியிலும் அவ்வாறே இரத்தம் வருவதைக் கண்டு சாரங்க முனிவர் துயருற்றார்.
லோகசாரங்க முனிவரின் கனவிலே திருமால் தோன்றி ஆழ்வாரைத் தோளிலே சுமந்துக்கொண்டு, என் சன்னதிக்கு வா! என்று கட்டளையிட்டார். அவ்வாறே, லோகசாரங்க முனிவர் பாணரைப் போய், நான் தோளில் சுமந்து செல்கிறேன், நீங்கள் என்னுடன் வாரும் என்று கூப்பிட்டால், தாம் தாழ்ந்த குலம் என்று எண்ணி பாணாழ்வார் நான் வரமாட்டேன் என்று சொன்னார்.
ஆனாலும், இது திருமாலினுடைய கட்டளை என்று சொல்லி, திருப்பாணாழ்வாருடைய காலிலே விழுந்து வணங்கி அவசியம் என்று சொல்லி, வலுக்கட்டாயமாகத் தோளில் அமர்த்திக்கொண்டு, திருக்கோவிலினுள் புகுந்தார். புகும்போதே, திருவரங்கனும், பெரிய பிராட்டியும் தம் திருக்கோலத்தை ஆழ்வாருக்குக் காட்சியளித்தார்கள். பெருமாளுடைய திருக்கோலத்தைப் பாதம் முதல் திருமுடி வரை கண்ணாரக் கண்டு சேவித்தார் திருப்பாணாழ்வார்.
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்திய விமலன் என்று தொடங்கி 10 பாசுரங்களை அருளினார். திருமேனி அழகு முழுவதையும் பாடினார். அதுவே திவ்யபிரபந்தத்தில் அமலன் ஆதிபிரான் என்று ஆயிற்று.
என் அமுதனைக் கண்டக் கண்கள் மற்றொன்றைக் காணாவே என்று முடித்தார். ஆழ்வாரினுடைய பக்தியிலே உருகித் திருமால் ஆழ்வாரை திருமேனியுடனேயே ஏற்றுக் கொண்டார்.
இதனால் உலகத்தில் குலங்களை விட, சொல்லும், மந்திரங்களை விட, அனுஷ்டானங்களை விட, உன்னதமான பக்தியே சிறந்தது என்பதைத் திருமால் உலகத்திற்கு எடுத்துக் காட்டியுள்ளார்.
திருப்பாணாழ்வாரினுடைய பாதங்களே சரணம்.