ஸ்ரீ சுரேஶ்வர ஆசார்யார். இவர் காஞ்சி மடத்திற்கும், எல்லா சங்கர மடங்களுக்கும் பொதுவான ஆசார்யார் ஆவார். இவர் பொது ஆண்டிற்கு முற்பட்ட காலம் 477-லிருந்து 407-வரை இப்பூவுலகில் இருந்தார். இவருடைய இயற்பெயர் மண்டனமிஶ்ரர். இவர் நர்மதை நதிக்கரையிலே மாகிஷ்மதி என்ற ஊரிலே இருந்தார்.
இவரது மனைவி சரஸவாணி. இவர்கள் இருவரும் பிரம்மா, சரஸ்வதியினுடைய அம்சங்கள். சரஸவாணியும், மண்டனமிஶ்ரரைப் போல வேத வேதாங்களில் மிகுந்த ஞானம் மிக்கவள்.
ஆதி சங்காராசாரியார் மண்டனமிஶ்ரரைத் தேடி இல்லத்திற்கு வந்தார். ஒருவரைத் தன்பால் ஈர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் வாதத்துக்கு அழைப்பார்கள். அவ்விதமே மண்டனமிஶ்ரரை வாதத்திற்கு ஆதிசங்கரர் அழைத்தார்.
யார் தோற்றவர், வென்றவர் என்று நிர்மாணிப்பதற்கு, ஒரு மலர் மாலையை இருவரது கழுத்திலும் சூட்டினார்கள்.
எவருடைய மாலை முதலில் வாடுகிறதோ, அவரே தோற்றவர் என்று கூறி நடுவராக இருந்தவர் மண்டனமிஶ்ரருடைய மனைவியாவார். இருவரும் சளைக்காமல் பலநாள் வாதங்கள் நடத்தினார்கள். முடிவில் மண்டனமிஶ்ரரின் கழுத்தில் இருந்த மாலை வாடத்தொடங்கியது.
கணவனிலே பாதி மனைவியாவாள் அதனால் என்னையும் நீங்கள் வாதில் வெல்ல வேண்டும் என்று சரஸவாணி தர்க்கம் செய்தாள். சரஸவாணியையும் சாஸ்த்ர நெறிப்படி ஆதிசங்கரர் வென்றார்.
நிபந்தனைப்படி மண்டனமிஶ்ரர் சந்நியாச ஆசரமத்தை ஏற்றார். ஸ்ரீ சுரேஶ்வரர் என்ற தீட்ஷா நாமத்தையும் ஆதிசங்கரர் அவருக்கு அளித்தார். ஆதிசங்கரர் சித்தியடைந்த பிறகு, ஸ்ரீ சுரேஶ்வரர் ஆதிசங்கரர் நிர்மாணித்த அனைத்துப் பீடங்களுக்கும் மேலாளராக இருந்தார். பல அத்வைத நூல்களை எழுதினார். காஞ்சியிலே இன்னமும் மண்டனமிஶ்ரர் அக்ரஹாரம் என்று ஒன்று இருக்கின்றது. இவர் பொது ஆண்டு 407-லிலே சுக்லபக்ஷ துவாதசி என்று சித்தி அடைந்தார். இன்றும் காஞ்சி மடத்திலே ஸ்ரீ சுரேஶ்வரருக்குத் தனி சன்னிதியும், திருஉருவமும் உள்ளன. இவருக்கு அடுத்து வந்த ஆசார்யார்கள் அனைவருடைய நாமத்திலே, சரஸ்வதி என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டார்கள்.
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர.