ஸ்ரீ இராமானுசர் தத்துவப் பிரிவுகளில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடி ஆவார். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரையை எழுதினார். இராமானுசர் திருவாய்மொழியின் செவிலித்தாய் எனப் போற்றப்படுபவர். தமிழ்நெறியைப் போற்றிய வைணவர்.
ஒன்பதாவது நூற்றாண்டைச் சார்ந்த நாதமுனிகள் வழி வந்த குரு பரம்பரையில், ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் இராமானுசர். ஆழ்வார்கள் பன்னிருவரும் பக்தியால் ஆட்கொள்ளப் பட்டவர்கள். ஆச்சாரியர்கள் ஆழ்வார்களின் பாடல்களைப் பரப்பி, மேலும் மக்களை நல்வழிப்படுத்த அரும்பாடு பட்டவர்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆழ்வார்களின் பிரபந்தங்களை நாதமுனி அடிகள்தான் வெளிக்கொணர்ந்து, பாசுரங்களை எல்லா இடங்களிலும் பரப்பினார். யோகசக்தி மூலம் நம்மாழ்வாரிடமிருந்து பிரபந்தங்களைப் பெற்றார் என்பது நம்பிக்கை.
யமுனாச்சாரியார்தான் இராமனுசரைக் கண்டுபிடித்து ஆச்சாரியராக வரவேண்டியவர் அவர் என்று வழிவகுத்தவர்.
யமுனாச்சாரியாரின் அழைப்பை அறிந்து, காஞ்சீபுரத்திலிருந்து வந்த இராமானுசர் யமுனாச்சாரியாரின் உயிர்பிரிந்த உடலைக் கண்டார். அவ்வுடலின் மூன்று கைவிரல்கள் மட்டும் மடியாமல் இருந்தன. யாராலும் காரணம் சொல்ல முடியவில்லை. இராமானுசர் மூன்று பிரமாணங்களை ஒவ்வொன்றாகச் சொன்னதும் மூன்று விரல்களும் ஒவ்வொன்றாக மடிந்தன. அவை:
1. பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்வைத வழியில் ஒரு உரை எழுதுவது.
2. விஷ்ணுபுராணம் இயற்றிய பராசரர், பாகவதம் இயற்றிய வேதவியாசர் ஆகியோரின் பெயரை வைத்து அழியாத புகழுக்கு வழி வகுப்பது.
3. வேதத்தைத் தமிழில் பாசுரங்களாய்த் தந்த நம்மாழ்வாரின் பெயர், உலகில் நிலைபெற்றிருக்கச் செய்வது.
இம்மூன்றையும் இராமானுசர் தன் காலத்தில் செய்து முடித்தார். பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீபாஷ்யம் என்ற உரை எழுதினார். பராசரர் மற்றும் வேதவியாசர் பெயர்களை தன் சீடனாகிய கூரத்தாழ்வானின் குழந்தைகளுக்கு இட்டார்; விஷ்ணு ஸகஸ்ர நாமத்திற்கு விரிவான உரை இன்றும் பராசர பட்டரின் உரையாகும். மூன்றாவதாகத் தன் சீடன் திருக்குருகைப்பிரான் பிள்ளான் மூலம் திருவாய்மொழிக்கு உரை கிடைக்கச் செய்தார்.
யமுனாச்சாரியாரின் வைணவத் தத்துவங்களைக் கற்பதற்காக இரண்டாண்டுகள் தவம் கிடந்தார். யமுனாச்சாரியாரின் சீடர் திருக்கோட்டியூர் நம்பியிடம் எட்டெழுத்து மந்திரத்தை "வேறு எவருக்கும் உபதேசம் செய்யக்கூடாது" என்ற நிபந்தனையின் பேரில் உபதேசம் பெற்றார். ஆனால் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி, மக்கள் அனைவருக்கும் கேட்கும்படி அதை எல்லோருக்கும் உபதேசம் செய்தார். இதனால் கோபம் அடைந்த திருக்கோட்டியூர் நம்பி, இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவுக்குத் துரோகமிழைப்பதாகும், இதனால் நரகம் செல்வீர்கள் என்றார். இராமானுசர் எல்லோரும் முக்தி பெறுவதால், நான் ஒருவன் நரகத்திற்குச் செல்வது எனது பேறு என்றார். உடனே திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையை விட இவரது கருணை மிஞ்சி விட்டது, இவர்தான் "எம்பெருமானார்" என்று மகிழ்ச்சியினால் அவரைக் கட்டிக்கொண்டார்.
இராமானுசர் பெரிய நிர்வாகியும் ஆவார். திருவரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஏற்று, அதைச் சீர்படுத்தி அன்றாடம் நடக்கவேண்டிய முறைகளை உண்டாக்கினார். இதனால் அவருக்கு எதிர்ப்புகளும் வந்து, அவரைக் கொல்லும் முயற்சிகள் கூட நடந்தன. தற்கால ஸ்ரீவைணவ நடைமுறைகளுக்கு உயிர் கொடுத்தவர் அவரே. அவர் ஒருவரே திருவரங்கம் கோயில் நிர்வாகம், ஸ்ரீவைணவ மட நிர்வாகம் ஆகிய இரண்டு பொறுப்பையும் ஏற்று நடத்தினார்.
இராமானுசர் பாரததேசம் முழுவதும் யாத்திரை செய்தார். எதிர்வாதங்கள் புரிந்தவர்களை வென்றார்; வைணவ மடங்களை நிறுவினார். திருவரங்கத்திலுள்ள தலைமை மடத்திற்கு மடாதிபதியாக வரவேண்டிய விதிகளை செவ்வழிப்படுத்தினார். முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையேயும், இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைப் பொழிந்தார்; அவர்களைத் "திருக்குலத்தார்" என்று அழைத்தார். தமிழ்ப் பிரபந்தங்களை ஓதவும், வைணவச் சின்னங்களை தரிக்கவும் எந்தத் தடைகளும் இல்லாமல் இருக்கச் செய்தார்.
நூல்கள்
வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம்.
வேதாந்த சங்கிரகம். இது உபநிடத தத்துவங்களை விவரிக்கிறது.
வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம் : இவை பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய சுருக்கமான உரைகள்.
கீதா பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைத வழியில் எழுதப்பட்ட உரை.
நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகள், பூசை முறைகள்.
கத்யத்ரயம். இவை மூன்றும் உரைநடை நூல்கள். சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட கத்யம்.
இராமானுசர் அவருடைய சொற்பொழிவுகளைத் தமிழில் செய்தார், தமிழில் அவர் எழுதியதாகத் தெரியவில்லை. வடநாட்டிலும் இராமானுசரின் விசிட்டாத்துவைதத் தத்துவங்கள் பிரபலமடைந்தன. இராமானந்தர் விசிட்டாத்துவைதத்தை ஏற்றுக் காசியில் ஜாதிவேற்றுமை பாராது கபீர்தாசர், ரவிதாசர், முதலிய பல சீடர்கள் மூலம் வைணவத்தைப் பரப்பினார்.
நாராயண நாராயண.