சேரமான் பெருமான் - அடியார் சைவ சமய நாயன்மார்.
இவருக்கு இன்னொரு பெயர் கழறிற்றுஅறிவார். இவர் மலைநாடு என்று சொல்லப்படுகின்ற சேர நாட்டிலே, அதனுடைய தலைநகரமாகிய கொடுங்கோளூரில் (இப்பொழுது கொடுங்களூர்) இருந்தவர். இந்த ஊருக்கு மாகோதை என்றும் ஒரு பெயரும் உண்டு.
இந்த ஊரிலே இருக்கின்ற கோவிலுக்குப் பெயர் திருஅஞ்சைக்களம். இறைவன் பெயர் அஞ்சைக்களத்து ஈஸ்வரன். இந்த ஊரிலே சேரர் குலத்தினுடைய அரசப் பரம்பரையிலே உதித்தவர் சேரமான் பெருமான் நாயனார். ஆனால் சிவ அருளினாலே, அரச குலத்து வேலையை ஏற்றுக் கொள்ளாமல், சமய நூல்களை அறிந்து, அரச போகத்தைத் துறந்து, சிவ பூஜையிலேயே ஈடுபட்டார். தினமும் சிவ பூஜையிலேயே திளைத்திருந்தார்.
ஒரு நாள் அரசன் அரச பதவியைத் துறந்த பிறகு, அமைச்சர்கள் எல்லாம் சேரமான் பெருமானிடம் வந்து நீங்கள்தான் அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன், ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றார். சிவனுடைய அருளினாலே ஏற்றுக்கொள்கிறேன். ஆனாலும் என்னுடைய சிவபூஜைக்கு எந்தவிதமான தடையூறும் வரக்கூடாது. செங்கோலைத் தொடவேண்டும் என்றாலும், நான் சிவனாகத்தான் அதைப் பார்ப்பேன் என்றார். மகுடத்தை என்னாலே சூடிக்கொள்ள முடியாது. உத்திராட்சத்தைத்தான் சூட்டிக் கொள்வேன் என்றார். எல்லாரும் சம்மதித்தார்கள்.
அரசராக ஆனாலும் சிவத் தொண்டிலேயே இருந்தார்.
அப்பொழுது சிவன் அவருக்கு ஒரு வரம் கொடுத்தார். மற்ற எந்தப் பிராணிகளுடைய பேச்சும் உனக்குக் கேட்கும், அதை நீ புரிந்து கொள்ள முடியும். அதனால்தான் கழறிற்று அறிவார். கழறுதல் என்றால் பேசுதல். மற்ற உயிர்கள் பேசுதலையும் இவரால் புரிந்துக்கொள்ள முடியும்.
ஒருநாள் அவர் வந்து கொண்டிருக்கும்போது, எதிரே ஒரு வண்ணான் வந்தான். அந்த வண்ணானினுடைய உடம்பிலே காய்ந்து போன மண்ணானது வெள்ளை வெளேரென்று இருந்தது. அவனைப் பார்த்து, ஆஹா! இவன் மிகப்பெரிய சிவபக்தன் என்று, தனது பட்டத்து யானையில் இருந்து இறங்கி, வண்ணானினுடைய காலிலே விழுந்து வணங்கி, ஆஹா! இப்படியொரு அடியாரைப் பார்த்தேனே என்றார். வண்ணானுக்கு பயம் வந்துவிட்டது. அரசன் தன்னுடைய காலிலே விழுகிறான்! ஏனென்றால், அப்பேர்ப்பட்ட சிவபக்தியிலே சேரமான் பெருமான் சிறந்து விளங்கினார்.
ஒருபொழுது மதுரையிலிருந்து பாணபத்திரர் என்ற புலவர் (மதுரையில் இறைவன் திருவிளையாடல் நிகழ்த்திய ஒரு முக்கியமான புலவர்) வந்தார். பாணபத்திரருக்குப் பரிசுகள் வழங்குக என்று சிவபெருமானே கைப்பட எழுதிக்கொடுத்திருந்த ஒரு கடிதத்துடன் பாணபத்திரர் வந்திருந்தபோது, தனது எல்லாப் பொருள்களையும் பாணபத்திரருக்கு கொடுத்துவிட்டார். அரச பதவியையும் நீங்களே வைத்துக் கொள்க என்று பாணபத்திரரிடம் சொன்னாலும், பாணபத்திரர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அரச பதவியை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தப் பொருள் போதுமானது என்று யானை, குதிரை, ரத்தினங்கள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு மதுரை நகர் வந்து, சைவ சமயத்தை வளர்த்தார்.
எப்போதுமே, சேரமான் பெருமானுக்குப் பூஜையினுடைய முடிவிலே, சிவபெருமானுடைய கால்களில் இருக்கின்ற சிலம்பின் ஓசை ஜல் ஜல், கலீர் கலீர் என்று கேட்கும். ஒருநாள், அந்த ஒலி கேட்கவில்லை. சிலம்பினுடைய ஒலி ஏன் கேட்கவில்லை என்று வருத்தமடைந்தபோது, சிவபெருமானிடம் கேட்டார். சிவபெருமான் சொன்னார்; தன்னுடைய பக்தனாகிய சுந்தரப்பெருமான் திருவாரூரிலே என்னைப் பாடிக்கொண்டிருந்தான். அதிலே மயங்கிவிட்டேன். அதனால் வருவதற்கு தாமதமாகி விட்டது என்று. ஆஹா! இப்பேர்ப்பட்ட ஒரு சிவனடியாரை நாம் தரிசிக்க வேண்டுமே, சுந்தரமூர்த்தி நாயனாரைப் பார்க்க வேண்டுமே, என்று நினைத்து, கொடுங்கோலூரை விட்டு நேராகத் திருவாரூர் வந்தடைந்தார். திருவாரூர் வந்தடைந்து, சுந்தரரைக் கண்டு வணங்கினார்.
சுந்தரமூர்த்தி நாயனாரும், சேரமான் பெருமானும் மிகச்சிறந்த நண்பர்களாக ஆனார்கள். சிவபக்தியிலே திளைத்தார். பல சிவத் தலங்களுக்கும் சென்று தரிசித்தார்.
பாண்டி நாட்டிற்கு அவர்கள் வந்து தரிசித்த போது சோழ மன்னன், சேர மன்னன், பாண்டிய மன்னன் ஆகிய மூவரும் அவர்களுடன் சேர்ந்து வழிபட்டார்கள்.
ஒருநாள் சுந்தரமூர்த்தி நாயனார் தாம் இனி திருக்கைலாயம் திரும்ப வேண்டும் என்று நினைத்து, இறைவனை நினைத்துப் பாடினார். சிவபெருமான் ஒரு வெள்ளை யானையை அனுப்பி சுந்தரமூர்த்தி நாயனாரை அழைத்து வரச் சொன்னார். சுந்தரமூர்த்தி நாயனார் கைலாயத்திற்குச் செல்கிறார் என்று மனத்தாலே அறிந்த சேரமான் பெருமான்ம, தன்னுடைய மனோபலத்தினாலும், யோகபலத்தினாலும் அவருக்கு முன்னாலேயே கைலாயத்தினுடைய வாசலை அடைந்தார்.
சிவதூதர்கள் சேரமான் பெருமானை உள்ளே அனுமதிக்கவில்லை. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானிடம் சென்றபோது, சிவன் அவரிடம் கேட்டார் “யார் இவன்?” என்றார். என்னுடைய நண்பன் சிவனடியார். சிவபெருமான் சேரமான் என்றார் சுந்தரர். சேரமான் பெருமானிடம் “உன்னை அழைக்காமலேயே நீ ஏன் வந்தாய்?” என்று சிவன் கேட்டார்.
சுந்தரமூர்த்தி நாயனாரைப் பிரிந்து நான் இருக்க விரும்பவில்லை. அதேபோல், வெளியிலேயே நின்றுகொண்டு ஒரு திருஉலாப் பாடினேன். அதை சிவபெருமான் செவி சாய்த்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது சேரமான் பெருமான் சிவபெருமானுக்கு முன்னால் திருக்கைலாய ஞான உலா என்ற அற்புதமான பாடலைப் பாடினார்.
சிவபெருமான் சேரமான் பெருமானையும், சுந்தரமூர்த்தி நாயனாரையும் தன்னுடனேயே வைத்துக் கொண்டார்.
திருச்சிற்றம்பலம்.