சத்குரு சாந்தானந்த சுவாமிகள். மதுரைக்கு அருகிலே ஒரு சிற்றூரிலே இராமசாமி என்பவர் வசித்து வந்தார். அவர்களுக்கு 10-வது குழந்தையாக சாந்தானந்த சுவாமிகள் அவதரித்தார். சாந்தானந்த சுவாமிகளினுடைய தாயார் கருவுற்றிருந்த நேரத்திலே சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் என்பவர் வந்தார். அவர்களுடைய வீட்டிற்கு வந்து உணவு அருந்தினார்.
தம்பதிகளிடம் 10-வதாக உங்களுக்குப் பிறக்கப்போகிற குழந்தை சாமனியன் இல்லை. வேதங்களை இரட்சிக்க வந்தவன், உலக நலத்தை விரும்புவன், புவனேஸ்வரியின் அருள் உடையவன், அவனுக்கு சுப்பிரமணியன் என்று பெயர் வையுங்கள். கொஞ்சக் காலம்தான் அவன் உங்களுக்கு சொந்தம், பின்னர் இந்த உலகத்திற்கே சொந்தம் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.'
குழந்தையும் பிறந்தது, சுப்பிரமணியன் என்று பெயர் வைத்தார்கள். பள்ளிக்குச் சென்ற சுப்ரமணியம், மிகத் துல்லியமாக எல்லா விடைகளையும் சொல்வார். பள்ளி நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களிலே, மீனாட்சி அம்மனுடைய சன்னிதியிலே வந்து தியானத்திலே இருப்பார்.
இந்த சமயத்திலே ஒருநாள் மாயாண்டி சுவாமிகளே, நேரடியாக அவருடைய வீட்டிற்கு வந்து சுப்பிரமணியனிடம், இனி உனக்குப் படிப்பு கிடையாது. பாடசாலைக்குச் செல் என்று சொல்லிவிட்டார். பிறகு காரைக்குடியிலே ஒரு பாடசாலையிலே சேர்த்தார்கள்.
சுப்பிரமணியனும் மிக அருமையாக வேதங்களைப் பயின்று, காந்தியடிகளினுடைய தேசபக்திப் பேச்சால் கவரப்பட்டார். விடுதலைக்காக முழங்கினார். இதற்காக அவரை அலிப்பூர் சிறையிலே அடைத்தார்கள். அலிப்பூர் சிறையிலும் சென்று தவமிருந்தார்.
பிறகு மாயாண்டி சுவாமிகளை மனத்தால் வேண்டியவுடன் அவரே அவருக்கு புவனேஸ்வரி மூல மந்திரத்தை உபதேசம் செய்தார். அதிலிருந்து அவருடைய தவம் மிகவும் அதிகமாயிற்று.
பிறகு பொதிகை மலை, திருப்பதி, பழனி, கொல்லிமலை, வெள்ளியங்கிரி என்று பல மலைகளிலும் சுற்றித் திரிந்தார். தேசத்தில் கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ், நேபாளம் என்று பல இடங்களுக்கும் பயணம் செய்தார். குஜராத் வந்தபோது அங்கு கிர்னார் தரிசனம் செய்தபோது அங்கு ஒரு யோகியைச் சந்தித்தார். அந்த யோகி, ஏ! மதராசியே இங்கே வா! உன்னுடைய குருநாதர் இங்கு இல்லை, சேந்தமங்கலத்திலே இருக்கிறார் என்று சொல்லிவிட்டார்.
சேந்தமங்கலம் வரும் வழியிலே கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு எதித்தாற்போல் அமர்ந்து கொண்டு, தியானத்தில் அமர்ந்தார். அம்மனைத் தரிசிக்காமல் சாப்பிடமாட்டேன் என்று சங்கல்பத்துடன் தியானமிருந்தபோது, ஒரு பஜனைக்கூட்டம் வந்து நீங்கள் சாப்பிடாவிட்டால் நாங்களும் சாப்பிடமாட்டோம் என்று அடம் பிடித்ததால், சுப்பிரமணியரும் உணவை உட்கொண்டார். பிறகு சேந்தமங்கலம் வந்தார்.
சேந்தமங்கலம் வந்தபிறகு, அங்கே ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சுவாமிகள் இருந்தார். அவரிடம் உபதேசத்தைப் பெற்றுச் சீடராக ஆனார். அப்போதுதான் அவருக்கு ஸ்ரீ சாந்தானந்தர் என்ற தீக்ஷாநாமம் கிட்டியது.
குருநாதருடைய அறிவுரைப்படி புதுக்கோட்டைக்குச் சென்றார். ஸ்வயம்பிரகாசருடைய குருவாகிய ஜட்ஜ் சுவாமிகளுடைய அதிஷ்டானத்தைப் புதுப்பித்தார். 1956-ல் அதற்குக் கும்பாபிஷேகமும் நடத்தினார்.
பிறகு சேலத்திற்கு அருகில் உடையாப்பட்டி குன்றிலே ஸ்கந்தகிரி என்ற மிகப்பெரிய ஷேத்திரத்தை நிறுவினார். ஒரு பக்தர் அளித்த முருகப்பெருமானுடைய விக்ரஹமே இங்கு மூலமூர்த்தமாக இருக்கின்றது. இந்த ஸ்கந்தகிரியிலே இடைவிடாது உலக அமைதிக்காக 108 நாட்கள் சுதர்சன மகாயாகத்தைச் சுவாமிகள் நடத்தினார். தியானம் செய்து கொண்டிருந்தபோது தனது அவதாரம் பூர்த்தியாகி விட்டது என்பதை உணர்ந்த ஸ்ரீ சாந்தானந்தர், ஸ்கந்தாஸ்ரமம் சென்று 2002-ஆம் ஆண்டிலே சித்தியானார்.
82 ஆண்டுகள் இந்த பூலோகத்திலே வாசமிருந்த மகான், ஸ்கந்தமூர்த்தியை என்றென்றும் தரிசித்த வண்ணமே, ஜீவசமாதி அடைந்தார். சாந்தானந்த சுவாமிகளுடைய ஜீவசமாதி சேலத்திலிருந்து ஆத்தூர் செல்லும் சாலையிலே உடையாப்பட்டியிலிருந்து 2 கி.மீ தொலைவிலே இருக்கிறது. ஸ்கந்தகிரியிலே இன்றைக்கும் ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளினுடைய ஜீவசமாதியை நாம் தரிசிக்கலாம்.
சிவ! சிவ!