திருச்சங்கமங்கை என்னும் நகரத்தில் வேளாண் மரபில் உதித்தவர் சாக்கிய நாயனார். சிவன் மேலும் சிவனது அடியார்களிடத்திலும் அன்பு மிக்கவராக இருந்தார். நன்னெறி நூல்களைக் கற்பதற்காகக் காஞ்சிபுரத்திலுள்ள சாக்கியர்களைக் (புத்தர்களை) சந்தித்தார். சாக்கியர்களுடன் பழகினார். பல நூல்களைக் கற்று ஆராய்ந்தார். ஆனால் அவரால் நல்ல நெறியைக் காண முடியவில்லை. மேலும் பல சமய நூல்களைக் கற்றார். சைவ சமய நூல்களையும் கற்றார். பிறவிப் பெருங்கடலைக் கடக்க சிவநெறியே சிறந்த வழி என்று தெளிந்தார்.
சாக்கியர் (புத்த மத) கோலத்திலே இருந்ததால், பிறர் அறியாத வகையில் சிவநாமத்தை மனத்திலேயே எண்ணி, பிறர் அறியாமல் சிவலிங்க பூசையும் செய்து வந்தார். தினமும் சிவலிங்க தரிசனம் செய்து வழிபடுவதையும், அதற்குப் பிறகே உணவு உண்பது என்ற பழக்கத்தையும் விரதமாக மேற்கொண்டிருந்தார். ஒருநாள் நாயனார் ஒரு வெட்ட வெளியான நிலம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். சிவலிங்கம் ஒன்று வழிபாடு ஏதும் இன்றிக் கிடப்பதைக் கண்டார். பூசை செய்ய விரும்பினார். ஆனால் பூ, நீர் எதுவும் அங்கே இல்லை. சாக்கிய நாயனார் அன்புடன் அருகே கிடந்த சிறு கல்லை எடுத்து, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினார். அந்தக் கல்லைச் சிவலிங்கத்தின் மீது போட்டார்.
சாக்கிய நாயனாரின் அன்பைக் கண்டு சிவன் ஆனந்தம் கொண்டார். மறுநாளும் அந்தச் சிவலிங்கத்தை வழிபட அந்த இடத்துக்கு நாயனார் வந்தார். சாக்கியர் வேடத்தில் இருக்கின்ற தன்னைப் பிறர் சிவ வழிபாட்டில் கண்டால் திட்டுவர். ஆனால் கல்லால் எறிவதைக் கண்டால் வெறுப்பின் மிகுதியால்தான் இவ்வாறு செய்கிறார் என்று நினைப்பார்கள். அதனால் ஈசனைக் கல்லெறிந்து வழிபட்டு, அதன் பின் உணவு உண்பதைச் செய்ய ஆரம்பித்தார். இவ்வாறு சிவலிங்க வழிபாட்டைத் தவறாமல் தினமும் செய்து வந்தார். ஒருநாள் சாக்கிய நாயனார் பக்திப் பெருக்கினால் சிவலிங்க வழிபாட்டைச் சற்று மறந்தார்; சாப்பிட அமர்ந்து விட்டார். அதனால் உள்ளம் பதறினார். பரந்த நிலவெளியை அடைந்து சிவலிங்கப் பெருமான் மீது, கல் ஒன்றை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதிச் சிவலிங்க்ம் மேல் எறிந்தார். அப்பொழுது சிவபெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது எழுந்தருளினார். இறைவன் சாக்கிய நாயனாருக்குப் பிறவாப் பேரின்பத்தை அளித்தார்.
சாக்கிய நாயனாரின் குருபூஜை மார்கழி மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் என்று திருத்தொண்டத் தொகை இவரைப் புகழ்கிறது.