பொய்கையாழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் என்று போற்றப் படுகிறார். காஞ்சிபுரத்தில் திருவெஃகா என்றுமிடத்தில் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் உள்ள பொய்கையில் (குளத்தில்) தோன்றியதால் பொய்கையாழ்வார் என்று பெயர்பெற்றார். திருமாலின் பத்து அவதாரங்களையும் முதலில் சிறப்பித்துப் பாடியவர். திருமாலின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான, பாஞ்சஜன்யம் என்னும் சங்கின் அம்சமாகத் தோன்றியவர். ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் உதித்தவர். கவிஞர் தலைவன் என்று வைணவர்களால் சிறப்புடன் போற்றப்படுகிறார். இவர் அந்தாதியாகப் பாடிய 100 பாடல்களும் முதல் திருவந்தாதி என அழைக்கப்படுகிறது. இப்பாடல்கள் வெண்பாக்களால் ஆனது.
ஒரு சமயம் பொய்கையாழ்வார் மழை பெய்யும் போது திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்குச் சென்று ஒதுங்கி நின்றார். பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் அதே இடத்துக்கு வந்தனர். மூன்று பேரும் நெருக்கியடித்துக் கொண்டு அங்கே நிற்கும் போது, திருமால் மூவருக்கும் காட்சியளித்தார். இவர் 108 திவ்ய தேசங்களில் மொத்தம் 6 கோயில்களைப் பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மங்களாசனம் செய்துள்ளார். (கோவிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடல்கள் இயற்றுவது).
கிரக முனி, தமிழ்த் தலைவன் ஆகிய வேறு பெயர்களும் இவருக்கு உண்டு. முழுமுதல் தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் திருமாலையே பாடிய போதும், சிவ விஷ்ணு பேதம் பார்க்காமல், இருபெரும் தெய்வமும் ஒன்றே என்று உணர்ந்து பாடிய மகான்.