தொண்டை மண்டலத்தில், திருநின்றவூரில், பூசலார் நாயனார் என்ற அந்தணர் இருந்தார். அவர் சிவனடியார்களுக்குத் தேவையானவற்றைக் கொடுத்து, சிவத்தொண்டு புரிந்தார். சிவனுக்கு ஒரு கோவில் கட்டுவதற்கு விரும்பி, அதற்காகப் பொருள் தேடினார். எதுவும் கிடைக்காமல் மனம் வருந்தினார். பிறகு மனத்தாலேயே ஒரு கோவில் கட்ட எண்ணினார். ஒரு நல்ல நாளிலே அஸ்திவாரம் போட்டு, ஒரு சிற்பியையும் வேலைக்கு அமர்த்தி, கல், மரம், வண்ணம் என்று எல்லாவற்றையும் மனத்தாலேயே கொண்டுவந்தார். மண்டபம், குளம், விமானம் என்று எல்லாவற்றையும் மனத்தாலேயே கட்டினார். குடமுழுக்கு நடத்த ஒரு நல்ல நாளும் குறித்தார்.
காடவர்கோன் என்னும் பல்லவ ராஜா காஞ்சீபுரத்திலே ஒரு சிவாலயம் கட்டினார் அதிலே பிரதிட்டை செய்ய நிச்சயம் செய்த நாளுக்கு முதல் நாள், பரமசிவன் அவ்வரசருக்குக் கனவிலே தோன்றி, 'நின்றவூரில் இருக்கின்ற பூசல் என்பவன் நமக்கு ஒரு கோயில் கட்டி உள்ளான். அதிலே நாளைக்கு நாம் எழுந்தருள வேண்டும். உன் கோயிலில் பிரதிட்டையை அதற்குப் பிறகு வைத்துக் கொள்வாய்" என்று சொல்லி மறைந்தார்.
காடவராஜா திடுக்கிட்டு வியப்புடன் விழித்து எழுந்து, அந்தப் பூசலாரைக் காண, திருநின்றவூரை அடைந்து, அங்கு வந்தார் . ஊர் மக்கள் சிலரிடம், "பூசலார் நாயனார் கட்டி உள்ள கோயில் எங்கு உள்ளது" என்று கேட்டார். அவர்களும் "அவர் இங்கே கோயில் எதுவும் கட்டவில்லையே" என்றார்கள். உடனே காடவராஜா "பூசலார் நாயனார் என்பவர் யார், அவர் எங்கு உள்ளார்?" என்று கேட்டார். அவர்களும் அரசரை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். காடவராஜா அவர்கள் இல்லாமல், தாமே அவரிடத்தில் சென்று, அவரை வணங்கி, "தாங்கள் ஒருசிவாலயம் கட்டி இருக்கின்றீர் என்றும், குடமுழுக்கு செய்யும் நாள் இன்று என்றும், சிவபெருமானால் அறிந்தேன்; உங்களை வணங்குவதற்கு வந்தேன்; அந்தக் கோவில் எங்கே" என்று கேட்டார்.
பூசலார்நாயனார் அதிசயத்துடன் நோக்கி, "சிவபெருமான் என்னையும் ஒருபொருளாகக் கருதி, அருளிச் செய்தது, நான் மனத்தில் கட்டிய கோயிலையே" என்று நினைந்து, நடந்த எல்லாவாற்றையும் சொன்னார். காடவராஜா அதைக் கேட்டு, அவரை வணங்கினார்; போற்றினார்; பிறகு அநுமதி பெற்றுக்கொண்டு, தமது ஊருக்குத் திரும்பினார். பூசலார் நாயனார் தாம் மனத்தினாலே கட்டிய திருக்கோயிலிலே பரமசிவனைப் பிரதிட்டை செய்து, நெடுங்காலம் பூசை செய்து, சிவபதம் அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.