நஞ்சீயர். இவர் பிறந்த இடம் திருநாராயணபுரம் ஆகும். இவருக்கு வேதாந்தி, நிகமாந்தயோகி, ஸ்ரீ மாதவர் என்றும் பெயர்கள் உண்டு. இவர் கோவிலிலேயே இருப்பவர். இவருடைய ஆச்சார்யர் பராசர பட்டர். இவர் கிருஷ்ண விக்ரஹத்தை வழிபட்டவர். இவரின் சீடர் நம்பிள்ளை.
இவர் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் அவதரித்தார்.
முதலிலே அத்வைதியாக இருந்தார். மாதவாச்சாரியார் என்பது இவரது திருப்பெயர். அப்பொழுது. இவரையும் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று கடவுளின் திருஉள்ளம் ஏற்பட்டது.
பராசர பட்டரிடம் வேதாந்திகளைத் திருத்திப் பணிகொள்வீர் என்ற கட்டளை கடவுளிடமிருந்து வந்தது. ஒரு அந்தண யாத்திரிகர் பட்டரிடம் வந்து, உம்மை போலவே சகல ஞானங்களும் அறிந்த ஒருத்தர் இருக்கின்றார். அவர் ஊருக்குச் சென்றுவிட்டார். உம்மை விட அவரே பெரியவர் என்று சொன்னார்கள்.
உடனே பட்டரும் சிறுபுத்தூர் என்ற இடத்திற்கு அருகில் போய்க்கொண்டிருக்கும்போது, அனந்தாழ்வான் என்ற அவருடைய சீடர் அவரை வணங்கினான். அனந்தாழ்வான் திருநாராயணபுரத்திற்கு அழைத்துச் சென்றார்.
வேதாந்தியாகிய மாதவாச்சாரியார் இருக்கும் இடத்திற்கும் சென்றனர். பட்டரும், மாதவாச்சாரியாரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் 9 நாள் வாதங்கள் செய்தார்கள்.
பிறகு மாதவாச்சாரியார் மிகவும் மகிழ்ந்து, பட்டரிடம், உம்மை மனிதராக எண்ணியிருந்தேன். உமக்கும் நம்பெருமாளுக்கும் வேறில்லை என்று கேட்டுக்கொண்டார். பராசர பட்டரும் திருவரங்கம் திரும்பினார். பிறகு மாதவாச்சாரியார் திருமாலினுடைய அடியவர்களைப் பூசித்து வந்தார். ஒரு நாள் சம்சாரத்தில் வெறுப்பு ஏற்பட்டது. பராசர பட்டரினுடைய திருவடிகளைச் சரணடைய விரும்பினார். பராசர பட்டரினுடைய இருப்பிடம் சென்றார்.
அதைக்கண்ட பட்டர் மிகவும் மகிழ்ந்து, நம்முடைய ஜீயர் என்று சொல்லி வரவேற்றார். அன்றுமுதல் நஞ்சீயர் என்ற பட்டம் இவருக்கு ஏற்பட்டது.
பட்டர் ஒருநாள் பகலெல்லாம் வழியில் நடந்து, களைப்பால் நஞ்சீயருடைய மடியில் தலையைச் சாய்த்து உறங்கினார். நஞ்சீயரும் இரவு முழுவதும் அசையாமல் இருந்தார். இதிலிருந்து அவருடைய குருபக்தியை நாம் அறியமுடிகிறது. நஞ்சீயர் இந்த பூவுலகத்திலே 100 ஆண்டு காலம் வாழ்ந்து பரமபதத்தை அடைந்தார்.
ஓம் நமோ நாராயணாய.