திருநாரையூரில் ஆதி சைவக் குடும்பத்தில் தோன்றிய பெருமான் இவர். வேத சிவாகமங்களையும் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தவர். ஒருநாள் இவருடைய தந்தையார் வெளியூருக்குச் செல்ல நேரிட்டதால், இவரை அழைத்துப் பிள்ளையாருக்குப் பூசை, நிவேதனம் செய்து விட்டுப், பிறகு பள்ளிக்குச் செல்லுமாறு சொன்னார். அதன்படி நம்பிகள் தாயார் கொடுத்த நிவேதனத்துடன் கோவிலுக்குச் சென்றார். நிவேதனத்தை வைத்துப் பிள்ளையாரை அமுது செய்தருளுக என்று பலமுறை வேண்டினார். தந்தையார் படைக்கும் நிவேதனத்தைப் பிள்ளையார் சாபிடுவதாகவே உண்மையாக எண்ணிய நம்பிகள், தன் பூசையில் ஏதோ தவறு ஏற்பட்டு விட்டது என்று வருந்தினார். பிழையிருந்தால் மன்னித்து அருளி, திருஅமுதை உண்பீராக என்று வேண்டினார். அதற்கும் பிள்ளையார் ஒன்றும் செய்யவில்லை. உடனே தன் தலையைக் கோயில் சுவரில் மோதிக் கொண்டார். உள்ளம் இரங்கிய பிள்ளையார் `குழந்தையே, பொறு` என்று தடுத்து, நிவேதனத்தை உண்டருளினார்.
நம்பிகள் பள்ளி செல்லக் காலம் தாழ்ந்து விட்டதே, இனிமேல் சென்றால் ஆசிரியர் தண்டிப்பார் என்றும் சொன்னார். பிள்ளையார் தாமே நம்பிகளுக்குத் தமிழைக் கற்பித்தார். நம்பிகள் கலை ஞானங்கள் அனைத்தும் பெற்றார். விநாயகர் மீது திரு இரட்டை மணிமாலை என்னும் பிரபந்தம் பாடினார்.
இந்த அற்புதச் செய்தி எங்கும் பரவியது. அதனைக் கேட்ட அபயகுலசேகரன் என்கிற இராசராச மன்னன், பொல்லாப் பிள்ளையாரை வழிபடுவதற்காக திருநாரையூர் வந்தான். நம்பிகளை வணங்கி, தான் கொண்டு வந்த பழங்களைப் பிள்ளையார் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டினான். அடிகள் வேண்டிய அளவில் பிள்ளையார் அவற்றை ஏற்றுக்கொண்டார்.
மூவர் அருளிய தேவாரத் திருமுறைகளும், திருத்தொண்டர் வரலாறும் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று மன்னன் அடிகளிடம் வேண்டினான். நம்பிகள் வேண்டுகோளைப் பிள்ளையாருக்குச் சொன்னார். பொல்லாப் பிள்ளையாரும் `தில்லையில் தேவாரமூவர் கையடையாளத்துடன் ஒரு அறையில் தேவாரத் திருமுறைகள் வைக்கப்பட்டுள்ளன` என்று கூறி, திருத்தொண்டர் வரலாறுகளையும் நம்பிகளுக்கு ஞான திருஷ்டியால் உணர்த்தினார்.
நம்பிகளும் சோழ மன்னனும் தில்லையை அடைந்தனர். அந்த அறையைத் திறக்குமாறு தில்லைவாழ் அந்தணர்களைக் கேட்டுக் கொண்டனர். தில்லைவாழ் அந்தணர்கள் தேவாரமூவர்களின் கையடையாளம் உள்ளதால், அவர்களே நேரில் வந்தால்தான் கதவைத் திறக்க முடியும் என்றனர். மூவர் திருவுருவங்களுக்கும் அபிடேகம் ஆராதனை செய்தபின், மூவரும் வந்துவிட்டனர். தில்லைவாழ் அந்தணர்கள் கதவைத் திறந்தனர். அங்குப் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த ஏடுகளைக் கரையான் புற்று மூடியிருந்தது. புற்றை அகற்றிப் பார்த்த போது, ஏடுகளில் பல கரையானால் அரிக்கப்பட்டு இருந்தன. அப்போது `தேவார ஏடுகளில் இக்காலத்துக்கு வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்து விட்டு, எஞ்சியவற்றைச் செல்லரிக்கச்செய்தோம், கவலற்க` என்றொரு அசரீரி கேட்டது. மன்னன் அந்த ஏடுகளைச் சிதையாமல் எடுத்து, அவற்றைத் தொகுத்துத் தருமாறு நம்பியாண்டார் நம்பிகளை வேண்டினான்.
நம்பியாண்டார் நம்பிகள் திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் அருளிய திருப்பதிகங்களை நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகவும், சுந்தரர் தேவாரத்தை ஏழாந் திருமுறையாகவும் தொகுத்தார். மாணிக்கவாசகரின் திருவாசகம், திருக்கோவையார் ஆகியவற்றை எட்டாம் திருமுறையாகவும், சேந்தனார், திருமாளிகைத்தேவர் முதலானவர்கள் அருளிய திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றை ஒன்பதாம் திருமுறையாகவும், திருமூலர் திருமந்திரத்தைப் பத்தாம் திருமுறையாகவும், காரைக்கால் அம்மையார், பட்டினத்தார் முதலியோர் பிரபந்தங்களைப் பதினொன்றாம் திருமுறையாகவும் வகுத்தார்.
பொல்லாப்பிள்ளையார் உணர்த்திய நாயன்மார்களின் வரலாற்றுச் செய்திகளைத் திருத்தொண்டர் திருவந்தாதியாகப் பாடினார். திருஞானசம்பந்தர் மீது திருஏகாதசமாலையைப் பாடினார்.
உமாபதி சிவாசாரியார் திருமுறைகண்ட புராணத்தில் அபயகுலசேகரன் இராசராசன் என்கிறார். பன்னிரு திருமுறைகளில் பதினொரு திருமுறைகளை நம்பியாண்டார் நம்பிகளே தொகுத்தருளினார்; அவரால் தொகுக்கப் பட்ட ஒன்பதாம் திருமுறையில் இராசராசசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலும் கங்கை கொண்ட சோழபுரத்தில் இராசேந்திர சோழன் கட்டிய கோயிலும் இடம் பெற்றுள்ளன; இதனால் இந்த இரு மன்னர் காலங்களிலும் நம்பிகள் வாழ்ந்தவர் என்று கொள்வதே பொருத்தம். நம்பிகள் காலம் கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டுகட்கு இடைப்பட்ட காலம் என்று தெரிகிறது.