நக்கீரதேவ நாயனார். இவர் சங்ககாலப் புலவர். 11-ம் திருமுறை எழுதியவர்களுள் ப்ரபந்தங்கள் பலவற்றைத் தந்தவர் நக்கீரதேவ நாயனார். இவர் சங்ககாலப் புலவர்களான கபிலர், பரணர், கல்லாடர் ஆகியோர்களுடன் சேர்த்துச் சொல்லப்படுகிறார்.
இந்த 11-ம் திருமுறையில் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, திருஈங்கோய் மலை 70, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருவெழுக்கூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப்பிரசாதம், கார் எட்டு, போற்றித் திருக்கலி வெண்பா, திருமுருகாற்றுப்படை, திருக்கண்ணப்பதேவர் திருமறம் ஆகிய 10 பிரபந்தங்கள், நக்கீரதேவர் அருளியனவாகக் காணப்படுகின்றன.
திருமுருகாற்றுப்படை சங்க நூலாகிய பத்துப்பாட்டில் முதலானது. இதனைப் பாடியவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார். காலம் 2-ம் நூற்றாண்டாகக் குறிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரபந்தங்களில் உள்ள சொற்களும், வடமொழிக் கலப்புகளும் பார்த்தால், அவை பின்னர் வாழ்ந்த நக்கீரர் என்ற பெயரால், ஒருவரால் இயற்றப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள். அவருடைய காலத்தை 8-ம் நூற்றாண்டு அல்லது 9-ம் நூற்றாண்டு என்று சொல்வார்கள். நல்கீரன், கீரன் என்பது இயற்பெயர் ‘ந’ ‘நல்’ என்பது அடைமொழியாக சொல்லப்பட்டது.
பாண்டிய மன்னன் அகப்பொருள் நூலாகிய, தலைவனும், தலைவியும் பற்றிய நூலாகிய ஒன்று கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டபோது, மதுரை சொக்கநாதப் பெருமான், அன்பின் ஐந்தினை என்றுத் தொடங்கி, அகப்பொருள் நூல் ஒன்றனை அம்மன்னன் கையிலே சேர்த்தருளினார். நக்கீரர் மட்டும் அந்த நூலைக் குறை கூறினார்.
சண்பகமாறன் என்ற அந்த பாண்டிய மன்னன் தன் தேவியினுடைய கூந்தலிலே மணம் உள்ளதா, இல்லையா என்று, இயற்கை மணமா, செயற்கை மணமா என்ற சந்தேகத்தைத் தெளிவிக்க, பாட்டு கேட்டபோது தருமி என்ற புலவர் ஒரு பாடலைக் கொண்டுவந்தார். அந்தப் பாடலைக் கொடுத்தது இறைவன். அந்தப் பாடலிலே குறை இருக்கிறது என்று நக்கீரர் சொன்னவுடன், சிவபெருமானே நேரே வந்து “கீர் கீர் என்று அறுக்கும் கீரனோ” என்றுக் கேட்டார். அதற்கும் நக்கீரர் பதில் சொல்ல, பிறகு சிவபெருமான் தன்னுடைய நெற்றிக் கண்ணினைக் காட்டினார்.
“நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே” என்று நக்கீரர் சொன்னவுடன், சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணிலிருந்து எழுந்த வெப்பத்தினாலே நக்கீரர் பொற்றாமரைக் குளத்திலே போய் விழுந்து விட்டார். இதற்குப் பிறகு நக்கீரதேவர் தன்னுடையக் குற்றத்தை உணர்ந்து, கயிலைபாதி காளத்தி பாதி என்ற அந்தாதியால் இறைவனைப் போற்றினார்.
அதனைக் கேட்டு மகிழ்ந்த இறைவன், அகத்தியரைக் கொண்டு நக்கீரருக்குப் பல தமிழ் நுட்பங்களையும் உணர்த்தினார். அதற்குப் பிறகுதான் நக்கீரர் கோபப்பிரசாதம், பெருந்தேவபாணி போன்றவற்றை இயற்றியதாகக் கருதுகிறார்கள்.
நக்கீரர் ஒருமுறை கைலாசம் செல்லவேண்டும் என்று யாத்திரை மேற்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது குளத்திலே நீரைப் பருகினார். மரத்து நிழலிலே இளைப்பாறியிருந்தார். மரத்திலிருந்து இலை ஒன்று கீழே விழுந்தது. அந்த இலையிலே ஒரு பாதி நீரிலும், ஒரு பாதி நிலத்திலும் விழுந்தபோது, ஒரு பாதி மீனாகவும், ஒரு பாதி பறவையாகவும் உருமாறின. ஒன்றையொன்று இழுத்ததைக் கண்டு அதிசயத்துப் போனார் நக்கீரர். அப்போது அவரைப் பூதம் ஒன்று சிறையிலே வைத்துவிட்டது. இதற்கு முன்பு 999 பேர் அந்த சிறையிலே இருந்தார்கள். நக்கீரர் சேர்ந்தவுடனே 1000 பேர். 1000 பேர் சேர்ந்தவுடன் தின்று விடலாம் என்று அந்த பூதம் நினைத்திருந்தது.
அப்போது நக்கீரர் தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை வேண்டித் திருமுருகாற்றுப் படை பாடினார். முருகன் காட்சியளித்து, அவரைச் சிறையிலிருந்து விடுதலையளித்தார்.
திருக்கைலாச தரிசனத்தையும் முருகன் அளித்தார். இது திருப்பரங்குன்றத்தில் நிகழ்ந்தாகப் பரங்கிரி புராணம் கூறுகிறது. சிவப்பிரகாச சுவாமிகள், முருகப் பெருமான் நக்கீரரைப் பொய்கை ஒன்றிலே மூழ்கச் செய்து, திருக்காளத்தியில் எழச் செய்து, கைலாசத்தினுடைய காட்சியினைக் காட்டினார் என்று கூறுகிறார். கல்வெட்டுகளிலும் நிறைய சான்றுகள் காணப்படுகின்றன.
சில இடங்களிலே நக்கீரருடைய திருவுருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடலில் பெருந்தேவபாணியிலே நக்கீரர் கூடல் ஆலவாய் குழகன் ஆவது அறியாது அருந்தமிழ் பழிச்சினன் அடியேன் என்று கூறி உள்ளார். அது பழித்தேன் என்று சொல்லிவிட்டதனாலே, சிலபேர் பழிச்சினன் என்பதற்குப் போற்றுதல் என்ற பொருளைக் கொள்ளாமல், பழித்தனர் என்றப் பொருளைக் கொள்வதால், நக்கீரர் மேல் பல கதைகள் உருவாக்கப்பட்டன என்பதும் செவி வழக்கிலே இருக்கிறது. நக்கீரதேவருடைய திருமுருகாற்றுப்படை மிகக் கடினமான தமிழாகவும், ஏனைய பாடல்கள் சற்றே சுலபமான தமிழாகவும் இருப்பதை நாம் காணலாம்.
திருச்சிற்றம்பலம்.