ஸ்ரீமந் நாதமுனிகள். இவர் 822-ம் ஆண்டு ஆனி மாதம் அனுஷ நட்சத்திரத்திலே பிறந்தார். பிறந்த இடம் சோழநாடு வீரநாராயணபுரம். சொட்டைக்குலத்திலே பிறந்த இவருக்கு இயற்பெயர் ரங்கநாதன்.
யோகாப்யாஸத்தில் கைதேர்ந்தவர். இவரை ரங்கநாத முனிகள் என்று அழைத்தனர். இவருக்கு நாதமுனிகள் என்ற பெயரே நிலைத்து விட்டது.
இவருடைய முக்கிய சீடர்கள் உய்யக்கொண்டாரும், புதுகைக்காவல் அப்பனும் ஆவார்கள். அவர்கள் மூலமாக திவ்யப் பிரபந்தத்தைp பரப்பியவர், உலகிற்கு அளித்தவர் நாதமுனி அடிகள்.
ஆழ்வார்கள் பன்னிருவரும் பரமபதத்தை அடைந்த பிறகு பிரபந்தப் பாடல்கள் போற்றப்படாமல் அநேகமாக மறைந்துவிட்டன.
ஸ்ரீகோவர்த்தனபுரம் என்ற இடத்திலே நாதமுனி அடிகள் வசித்து வந்தார். அப்போது சுவாமி மன்னனார் நாதமுனிகளினுடைய கனவிலே தோன்றி வீரநாராயண புரத்திற்கு வருக என்று கூறினார்.
அதேபோல் வீரநாராயண புரத்திற்கே வந்து கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். சில வைணவர்கள் ஒருநாள் வந்து ஆரா அமுதே என்று தொடங்கும் திருவாய்மொழிப் பாடல்களைப் பாடினார்கள். அதைக் கேட்டு மனமகிழ்ந்த நாதமுனி அடிகள் இந்தப் பிரபந்தம் உங்களுக்கு முழுவதும் தெரியுமா என்று கேட்டார். எங்களுக்கு 10 பாட்டு மட்டுமே தெரியும், சடகோபனார் அவதரித்த திருகுருகூர் சென்று மதுரகவி ஆழ்வாரினுடைய சீடரான பராங்குச தாசரைச் சேவித்து நீங்கள் கேட்டால் தெரியும் என்றார்கள்.
அதேபோல் பராங்குச தாசரைச் சேவித்து வேறு யாரும் உண்டா? வேறு பாடல்கள் தெரியுமா என்று கேட்டார்கள். அவரும் திருவாய்மொழியும், ஏனைய பிரபந்தங்களும் மறைந்து போய்விட்டன. என்னுடைய ஆசார்யார் எனக்கு அருளிய கண்ணி நுண் சிறுத்தாம்பு பதிகம் மட்டுமே உள்ளது என்றார்.
நாதமுனி அடிகளோ பெரும் மனக்குறையுடன் பெருமாளைத் தொழுதபிறகு, பெரிய பெருமாளாகிய மஹாவிஷ்ணு தாயாரோடு காட்சி கொடுத்து ஞானக்கண் அளித்தார். திவ்யப் பிரபந்தங்களையும், யோக ரகசியங்களையும் நாதமுனி அடிகளுக்கு அருளினார்.
மீண்டும் வீரநாராயண புரத்திற்கே வந்து, மன்னனார் முன்பு நாதமுனி அடிகள் அந்தப் பிரபந்தங்களை ஓதினார். அதனால் இந்த திவ்ய பிரபந்தங்களை உலகிற்கு மீட்டுக் கொண்டுவந்தவர் ஸ்ரீமந் நாதமுனி அடிகள் ஆவார். நாதமுனி அடிகளும் தன் மருமகன்களான கீழை அகத்து ஆழ்வான் (கிருஷ்ணமாச்சாரியார்), மேலை அகத்து ஆழ்வான் (வரதாச்சாரியார்) அவர்களை அழைத்து அவர்களின் மூலமாக இயலும், இசையுமாக திவ்யப் பிரபந்தங்களைப் பாடுவித்து அருளினார்.
இதனாலே திவ்யப்பிரபந்தம் மீண்டும் உலகத்திலே உயிர்பெற்றது. கோவில்களில் விழாக்காலங்களில் பிரபந்தங்களை இசையுடன் அபிநயித்துப் பாடவும் வைத்தனர். அப்படி ஆரம்பித்ததே அரையர் சேவையாகும். இப்பொழுது ஸ்ரீரங்கம், திருவில்லிப்புத்தூர், ஆழ்வார் திருநகரி போன்ற வைணவத் தலங்களில் அரையர் சேவை நடைபெறுகிறது. இந்தப் பூவுலகத்திலே 102 ஆண்டுகள் வாழ்ந்து பரமபதத்தை அடைந்தார்.
ஓம் நமோ நாராயணாய.