மெய்கண்டார். சைவ சமயத்திலே, சமயக் குரவர்கள் என்று 4 பேர்களைப் போன்றே, (அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர்) , சந்தானக் குரவர்கள் 4 பேர். அவர்களில் முதல்வர் மெய்கண்டார் ஆவார். அவருடைய சீடர் அருள்நந்தி சிவம். அவருடைய சீடர் மறைஞான சம்பந்தர். அவருடைய சீடர் உமாபதி சிவம். சைவ சித்தாந்த சாஸ்திர மரபைத் தோற்றுவித்தவர் மெய்கண்டார். பெண்ணாகடம் (இன்றைய பண்ருட்டி) இவருடைய ஊர்.
13-ம் நூற்றாண்டிலே அச்சுதக்களப்பாளர் என்னும் சைவ வேளாளர் வசித்து வந்தார். அவருக்குக் குழந்தைப் பேறு இல்லை. அதனால் தன்னுடைய குலகுருவான சகலாகம பண்டிதர் என்வரிடம் சென்று பரிகாரம் கேட்டார். சகலாகம பண்டிதரும், தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்ப்போம் என்று சொல்லி, அப்படிப் பார்த்ததிலே திருவெண்காட்டுப் பதிகம் வந்தது. அதில். “பிள்ளையினோடு உள்ளம் நினைவாயினவே வரம் பெறுவர், ஐயுற வேண்டா!” என்று வந்தது. அதனால் பிள்ளை உண்டு கவலைப் படாதீர்கள் என்று சொன்னார்.
அதுபோலவே, திருவெண்காட்டுத் தலத்திற்குச் சென்று வழிபட்டார்கள். அதற்குப் பிறகு இறைவன் உனக்கு பிள்ளைவரம் இல்லையாயிருந்தாலும், திருஞான சம்பந்தரைப் போன்றதொரு தெய்வமகன் பிறப்பான் எம்முடைய அருளால், என்று சொன்னார். அதைப்போலவே, குழந்தையும் பிறந்தது. திருவெண்காட்டு ஈஸ்வரனின் பெயர் ஸ்வேதவனப் பெருமாள் என்றே பெயர் வைக்கப்பட்டது. குழந்தைக்கு 3 வயதாகி இருக்கும்போது, ஒரு நாள் வானத்து வழியே பரஞ்சோதி முனிவர் என்பவர் திருக்கைலாய மலையிலிருந்து, அகத்தியரைக் காண வேண்டி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது ஸ்வேதவனப் பெருமாளாகிய இந்தக் குழந்தையினுடைய தேஜஸைக் கீழே பார்த்து, கீழே இறங்கி வந்து, அந்தக் குழந்தையினுடைய பக்குவத்தை ஞான திருஷ்டியாலே அறிந்து கொண்டார். குழந்தையைத் தன் கையால் எடுத்துக்கொண்டு ஸ்பரிச நயன தீக்ஷைகளை அளித்தார்.
சிவஞான உபதேசமும், பரஞ்சோதி முனிவர் அந்தக் குழந்தைக்குச் செய்வித்தார்.
பரஞ்சோதி முனிவருடைய குருவின் பெயர் சத்யஞான தர்சினி, அதனுடைய தமிழ்ப் பெயராகிய மெய்கண்டார் என்பதையே திருநாமமாகவும் அருளினார்.
அன்று முதல் 3-ம் வயது முதலே திருஞானசம்பந்தர் போல், மெய்கண்டாரும் சிவபக்தியால் ஆளப்பட்டு, ஞானமயமாகத் திகழ்ந்தார்.
இவர் எழுதிய நூல் சிவஞானபோதம் என்பதாகும். பசு, பதி, பாசம் இவற்றை மையமாக வைத்துக்கொண்டு எழுதப்பட்ட நூல். சகலாகம பண்டிதருக்கும் இந்தச் செய்தி தெரிந்தது. மெய்கண்டாருக்கு நிறைய சீடர்கள் சேர்ந்து விட்டார்கள், அப்பொழுது மெய்கண்டாரைப் பார்க்கச் சென்றபோது சகாலகம பண்டிதருக்கு ஒரே ஆணவம் அதாவது கர்வம் இருந்தது.
ஆணவ மலத்தினுடைய ஸ்வரூபம் எது என்று மெய்கண்டாரிடம் கேட்டார். மெய்கண்டாரும் தன்னுடைய விரலை நீட்டி சகலாகம பண்டிதரையே காண்பித்தார்.
தமக்கு இவ்வளவு ஆணவம் இருப்பதை அறிந்து, சகலாகம பண்டிதருடைய மனம் அடங்கி, பக்குவமடைந்து, அன்றுமுதல் அந்தக் குழந்தையினிடமே தானும் சீடராக மாறிவிட்டார். மெய்கண்டாரினுடைய தலைமைச் சீடராக அருள்நந்தி சிவம் என்று அவரே விளங்கினார். மெய்கண்டார் எவ்வளவு காலம் இந்த உலகத்தில் மனித சரீரத்துடன் வாழ்ந்தார் என்பது சரியாகத் தெரியவில்லை.
ஆனால் திருவெண்ணெய் நல்லூரிலே, முக்தியடைந்ததாகத் தெரிகிறது. அவருடைய திருச்சமாதி திருவாவடுதுறை ஆதீனத்தால் நிர்வகிக்கப் படுகிறது. திருவாவடுதுறை ஆதினம், இவர் பிறந்த இடமான பெண்ணாகடத்தில் களப்பாளர்மேடு என்னும் பெயரில் வழங்கிய இடத்தைக் கண்டுபிடித்து, அங்கே மெய்கண்டாருக்கு நினைவாலயமும் கட்டி, விக்ரஹமும் நிறுவி, இன்றளவும் பூசையும் சிறப்பாகச் செய்து வருகிறார்கள்.
திருச்சிற்றம்பலம்.