மணற்கால்நம்பி. இவர் உய்யக்கொண்டாரது சீடராவார். இவருக்கு ஸ்ரீராமமிஸ்ரர் என்றப் பெயரும் உண்டு. உய்யக்கொண்டார் அவதரித்து 43 ஆண்டுகளுக்குப் பிறகு லால்குடி அருகே, இப்பொழுது மணற்கால் என்று கூறப்படுகின்ற கிராமத்திலே, அந்தணர் குலத்திலே, மாசி மாதம் மகம் நட்சத்திரத்திலே பிறந்தார்.
உய்யக்கொண்டார் நியமனப்படி, நாதமுனிகள் பேரரான ஆளவந்தாரைத் திருத்திப் பணிகொண்டார். அவருக்கு திவ்யபிரபந்தங்களையும், ரகசிய த்ரயத்தையும் கொடுத்தார். மேலும் நம்மாழ்வாரிடமிருந்து பெற்ற இராமனுஜ விக்ரகத்தையும் கொடுத்தார்.
உய்யக்கொண்டாருக்கு 5 சீடர்கள் உண்டு. அவர்களில் ஒருவரே மணற்கால்நம்பி. அவருடைய இயற்பெயர் ஸ்ரீராமன்.
ஒருநாள் உய்யக்கொண்டாரது சிறுமிகள் இருவரையும் நீராட்டி அழைத்து வந்தார். வருகின்ற வழியிலே வாய்காலில் சேறு இருப்பதைக் கண்டார். சிறுமியர்கள் திகைத்து நின்றார்கள். தாமே படியாகக் கிடந்து, அவர்களைத் தன்னுடைய முதுகிலே காலை வைத்து நடங்கள் என்று சொன்னார். அதன்படி புதல்விகள் நடந்தபோது, அவர்களுடைய கால் சுவடுகள் இவருடைய முதுகிலே பதிந்ததால், மணற்கால் இருப்பதைக் கண்ட அன்றுமுதல், இவருக்கு மணற்கால்நம்பி என்ற பெயர் ஏற்பட்டது. அதேபோல் அந்த பிறந்த ஊருக்கும் மணற்கால் என்றும் திருநாமம் சூட்டினார்.
இவருடைய சீடர்கள் ஆளவந்தார் என்ற யமுனாச்சாரியார், திருவரங்கப்பெருமாள் அரையர், தெய்வத்துக்கு அரசுநம்பி, பிள்ளை அரசுநம்பி, சிறுபுள்ளூர் உடையார் பிள்ளை, திருமாலிரும் சோலை தாசர், வங்கிபுரத்தாச்சி முதலியோர்கள். இவர் இந்த பூமியிலே 105 ஆண்டுகள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இவரையும் எம்பெருமானார் சீடர் வடுகநம்பியையும் குருபக்திக்கு உதாரணமாகக் கூறுவார்கள்.
ஓம் நமோ நாராயணாய.