பிறந்த இடம்‌: திருக்கோளூர்‌ (தூத்துக்குடி மாவட்டம்‌)

பிறந்த நாள்‌ : சித்திரை மாதம்‌ சித்திரை நட்சத்திரம்‌, வளர்பிறை சதுர்த்தசி, வெள்ளிக் கிழமை

காலம்: 9ம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதி

மதுரகவி ஆழ்வார், கருடாழ்வாரின்‌ அம்சமாகத் திருக்கோளூர்‌ என்ற இடத்தில்‌ அவதரித்தார்.‌ இனிமையான சொற்களால்‌ கவி பாடும்‌ திறமை பெற்றதால், மதுரகவி ஆழ்வார்‌ என்று புகழப்பட்டார்‌. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றவர். அயோத்தியில்‌ உள்ள ராமபிரானை வணங்கி விட்டு அங்கே சில நாட்கள்‌ தங்கினார்‌. ஒருநாள்‌ திருக்கோளூர்‌ப் பெருமானைத் தெற்கு நோக்கி வணங்கும்போது, வானத்திலே‌ ஒரு ஜோதி தெரிவதைக்‌ கண்டார்‌. தென்திசை நோக்கிப்‌ புறப்பட்டார்‌. ஆழ்வார்‌ திருநகரி (திருக்குருகூர்) என்ற இடம் வந்தவுடன்,‌ அந்த ஜோதியைக் காணவில்லை. அந்த ஊர்‌ மக்களிடம்‌ அந்த ஊரின்‌பெருமை என்ன என்று‌ கேட்டார்‌. ஊர்‌ மக்களும்‌, அந்த ஊர்‌ புளிய மரத்தினுள்‌ளே பத்மாசனத்தில்‌ அமர்ந்திருக்கும்‌ நம்மாழ்வாரைப்‌ பற்றிச் சொன்னார்கள்‌.

நம்மாழ்வாரின்‌ முன்னே‌ சென்று, மதுரகவி ஆழ்வார்‌, நம்மாழ்வாருக்குக் காது கேட்குமா என்று அறிவதற்கு,  ஒரு கல்லை த் தூக்‌கிப் போட்டார்‌. அந்த சத்தத்தால்‌ நம்மாழ்வார்‌ கண்‌ திறந்து பார்த்தார்.

பேசுவாரா என்பதை அறிவதற்கு, செத்த பின்‌ வயிற்றிலே சிறியது பிறந்தால்‌ எத்தைத்‌ தின்று எங்கே கிடக்கும்‌? (உயிரில்லாததான உடம்பிலே‌ ஆத்மா புகுந்து எதனை அனுபவித்து எங்கே இருக்கும்‌?) என்று‌ கேட்டார்‌. அதற்குப், பிறந்தது முதல்‌ பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார்‌, மதுரகவி ஆழ்வாரிடம்‌ அத்தைத்‌ தின்று அங்கேயே கிடக்கும்‌ (அந்த உடலின்‌ தொடர்பினால்‌ ஏற்படும்‌ இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்‌) என்று பதில்‌ உரைத்தார்‌.

மதுரகவி ஆழ்வார்‌, தன்னை ஆட்கொண்டு அருளுமாறு நம்மாழ்வாரிடம்‌ வேண்ட, அவரும்‌ நாம் பாடும்‌ பிரபந்தங்களை ஓலைப்படுத்துக (எழுதுக) என்று கட்டளை இட்டார்‌. நம்மாழ்வார்‌ காலத்துக்குப்‌ பின்‌ அவரது விக்ரகத்தை ஆழ்வார்‌ திருநகரியில்‌ எழுந்தருளச்‌ செய்தார்‌.

மதுரைத்‌ தமிழ்ச்‌ சங்கப்‌ புலவர்கள்‌ நம்மாழ்வாரை வாதத்திற்கு அழைத்தனர்‌. மதுரகவி ஆழ்வார்‌, முன்னூறு சங்கப்புலவர்கள்‌ ஏறிய சங்கப்பலகை மீது நம்மாழ்வார்‌, பாடிய ஓலையை வைத்தவுடன்‌ பலகை கவிழ்ந்து விட்டது. எல்லாப் புலவர்களும்‌ பொற்றாமரைக் குளத்துக்குள்ளே‌ விழுந்து விட்டார்கள்‌. நம்மாழ்வார்‌ பகவானின்‌ அம்சம்‌ என்பதை சங்கப்புலவர்கள்‌ உணர்ந்தார்கள்.

மதுரகவி, ஆழ்வார்‌ தம்‌ குருவான நம்மாழ்வாருடைய பிரபந்தங்களை‌ உலகெங்கும்‌ பரப்பினார்‌. பெருமாளின்‌ 108 திவ்ய தேசங்களில் தனியாக எந்தப் பதியையும் மங்களாசாசனம்‌ செய்யாமல்‌ , ஒரு கோயிலை மட்டும், ஆழ்வார் திரு நகரியை மட்டும்‌ மங்களாசாசனம்‌ செய்துள்ளார்‌. அந்தக்கோயிலிலும்‌ பெருமானைப் பாடாமல்‌‌ தனது‌ குருவான நம்மாழ்வாரைப்‌ போற்றி "கண்ணி நுண்‌ சிறுத்தாம்பு" என்ற பாசுரத்தைப் பாடினார்‌.


Posted 
Apr 27, 2021
 in 
அடியார்கள்
 category

More from 

அடியார்கள்

 category

View All

Join Our Newsletter and Get the Latest
Posts to Your Inbox

No spam ever. Read our Privacy Policy
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.