குலசேகர ஆழ்வார் சேர நாட்டிலே திருவஞ்சைக்களம் என்னும் ஊரில் (இது கோழிக்கோடு அருகில் உள்ளது; இதைக் கொல்லி நகர் என்று சொல்வார்கள்), எட்டாம் நூற்றாண்டில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் திருமாலின் திருமார்பிலே இருக்கின்ற கௌஸ்துபத்தின் அம்சமாக அவதரித்தவர். அரச குலத்திற்கு உடைய எல்லாப் படைப்பயிற்சிகளோடு, சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர்.
இளமை முதல் ராமபிரான் மீது இவருக்கு இணையற்ற பக்தி இருந்தது. ஒருமுறை ராமாயணச் சொற்பொழிவைக் கேட்கும்போது, அரக்கர்கள் படையெடுத்து வந்தபோது, ராமன் போர் புரிகிறான் என்பதைக் கேட்டார். தன்னை மறந்து தானே ராமனுக்குத் துணையாக செல்ல முற்பட்டு விட்டார். பிறகு, சொற்பொழிவு நடத்தியவர் அரக்கரை அழிக்க ராமர் ஒருவனே போதும்; நீ மகிழ்ச்சியாக வீட்டிற்குத் திரும்பி வா! என்று சொன்னவுடன்தான், வீட்டிற்கு வந்தார் குலசேகர ஆழ்வார்.
இவர் சோழ மன்னனும், பாண்டிய மன்னனும் படையெடுத்த போது அவர்களை வெற்றி கொண்டார்.
அதற்குப் பிறகு பாண்டிய மன்னன் தன்னுடைய மகளை இவருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
ஒருமுறை வைணவர்களுடைய சேர்க்கையினால் மன்னன் சரியாக ஆட்சி நடத்தமாட்டான் என்று அமைச்சர்கள் கலங்கி, ஒரு திட்டம் தீட்டினார்கள். பெருமாளுடைய திருவாபரணத்தினை மறைத்து வைத்து, ஒரு வைணவர்தான் திருடிவிட்டார் என்று பொய் சொன்னார்கள். ஆனால், ஒரு வைணவத் திருவடியார் திருடராய் மாறமாட்டார் என்று திருமால் பக்தியுடைய குலசேகர ஆழ்வார், அதனை நான் நிரூபிக்கிறேன் என்று சபதம் செய்தார்.
நல்ல பாம்புகள் அடைக்கப்பட்ட ஒரு குடத்திலே கையை விட்டார். குடத்திலே கைவிட்டவுடன் பாம்புகள் இவரைக் கடிக்கவில்லை. இதனால் இவருடைய பக்தியும் அடியார்கள் மீதான நம்பிக்கையும் வெளிப்பட்டது.
குற்றத்தை அமைச்சர்கள் உணர்ந்து ஆழ்வாரிடம் மன்னிப்புக் கோரினார்கள். பிறகுதான் குலசேகர ஆழ்வார் அரச பதவியையே துறந்தார்.
இதுநாள்வரை வீரம், போர், என்று அகங்காரத்துடன் இருந்த குலசேகர ஆழ்வாருடைய மனத்திலே திருமால் புகுந்து மாயையை விலக்கினார். திருமால் தன்மீது மட்டும் பக்தி உடையவனாக ஆழ்வாரை மாற்றி விட்டார். அதற்குப் பிறகு, திருமால் பக்தி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, திருவரங்கம் முதல் பல திருமாலுடைய தலங்களுக்கும் சென்று, மங்களாசாசனம் செய்தார்.
இவர் பாடிய மன்னு புகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே! என்ற பாட்டு இன்றளவும் தாலாட்டுப் பாடலாகத் தமிழ்நாட்டிலே பல இடங்களிலும் பாடப்படுகிறது. இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி என்று அழைக்கப்படுகின்றன. இவர் 105 பாடல்கள் பாடியுள்ளார். ராமாவதாரத்தை 10 பாசுரங்களிலே பாடி, தில்லைத் திருச்சித்திரக்கூடப் பெருமானுக்கு அர்ப்பணித்தார்.
ஏழுமலையான் மீது அளவு கடந்த பக்தியுடன் இருந்தார். திருமலையிலே ஒரு மரமாகவோ, பூச்சியாகவோ, புழுவாகவோ, திருக்குளத்தில் மீனாகவோ பிறக்க வேண்டும் என்று வேண்டினார்.
இவர் தன்னுடைய மகளை திருவரங்கனுக்கே மணமுடித்து வைத்தார். இதனால் பெரியாழ்வாரைப் போல, இவருக்கும் திருமாலுக்கு மாமனார் என்ற ஸ்தானம் ஏற்பட்டது. திருவரங்கத்திலே, அரங்கனும், சேரகுல வல்லியும் இணைந்து காட்சியளிக்கும் சன்னிதி இருக்கின்றது.
இவர், தனியாகச் சென்று ஒரு கோவிலையும், பிற ஆழ்வார்களுடன் சென்று ஏழு கோவில்களையும் என, 8 கோவில்களுக்கு மங்களாசாஸனம் செய்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவில் சென்று பெருமாளைத் தரிசித்து நிற்கும் போது, இறைவனுடைய பேரருளால், வைகுண்டம் சேர்ந்தார்.
குலசேகர ஆழ்வாரின் திருப்பாதங்களை வணங்குவோம்!