சோழ நாட்டில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காரைக்கால் என்னும் ஊரில், வணிகர் குலத்தில், தனதத்தன் என்பவருக்கு மகளாக அம்மையார் பிறந்தார்.
பெற்றோர் புனிதவதி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். புனிதவதியார் சிறுமியாக இருந்த காலத்திலேயே சிவபெருமான் மீது பக்தி கொண்டு, சிவன் அடியார்களைக் கண்டால் சிவன் எனவே வழிபடும் தன்மை கொண்டவராக விளங்கினார்.
நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நிதிபதி என்ற வணிகர், தன் மகன் பரமதத்தனுக்குப் புனிதவதியாரை மணம் செய்விக்க விரும்பி, உறவினர் சிலரைத் தனதத்தனிடம் அனுப்பினார். புனிதவதியார்க்கும் பரமதத்தனுக்கும் திருமணம் நடந்தது. தனதத்தன் தனக்கு ஆண் பிள்ளை இல்லாமையால் காரைக்காலிலேயே பொன் வாணிபம் புரியவும், தனியே இல்லறம் நடத்தவும் வகை செய்து கொடுத்தார்.
பரமதத்தன் வாணிபத்தைப் பன்மடங்காகப் பெருக்கி வாழ்ந்து வந்தான். புனிதவதியார் மாண்புடன் இல்லறம் நடத்தியதோடு, சிவபெருமான் மீது கொண்ட பக்தியிலும், சிவனடியார்களுக்குத் திரு அமுதளித்தல், அவர்களுக்கு வேண்டும் பொருள்களைக் கொடுத்தல் முதலான புண்ணியங்களிலும் சிறந்து விளங்கினார்.
ஒருநாள் பரமதத்தனை வாணிபம் செய்யுமிடத்தில் காண வந்த சிலர், இரண்டு சுவையான மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றனர். அவர்களை வழியனுப்பியபின் அவர்கள் தந்த மாங்கனிகள் இரண்டையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதியார் அவற்றை வாங்கித் தன் கணவன் சாப்பிட வரும்போது கொடுக்கலாம் என அடுக்களை அறையில் வைத்திருந்தார். அப்போது சிவனடியார் ஒருவர் பசியோடு புனிதவதியார் இல்லத்திற்கு வந்தார். அம்மையார் சோறு மட்டும் சமைத்திருந்த நிலையில், கறியமுது முதலியவற்றை விரைந்து செய்ய எண்ணினார். அடியவரோ மிக்க பசியோடு இருத்ததால், தன் கணவன் அனுப்பிய மாங்கனிகளுள் ஒன்றை அவருக்குப் படைத்து, திருஅமுதும் படைத்து வழியனுப்பி வைத்தார். சிறிது நேரங்கழித்துப் பரமதத்தன் வழக்கம்போல் சாப்பிடத் தன் வீட்டைஅடைந்தான். புனிதவதியார் தன் கணவனுக்குத் திருஅமுது கறியமுது முதலியவற்றைப் படைத்ததுடன், அவன் அனுப்பியிருந்த மாங்கனிகளுள் ஒன்றை இலையில் வைத்தார். அப்பழத்தைத்தின்ற பரமதத்தன் அதன் சுவையில் மயங்கி, இன்னொன்றையும் தருக என்றான்.
கணவன் சொல்லைத் தட்டாத புனிதவதியார், தான் அந்தப் பழத்தை அடியவர்க்களித்த செய்தியைக் கூறாமல், பழத்தை எடுத்து வருபவர்போல அடுக்களையினுள் வந்து, இறைவனை வேண்டினார். உடனே இறையருளால் அவர் கையில் மிக்க சுவையுடைய அதிமதுரக்கனி ஒன்று வந்தது.
அக் கனியைக் கொண்டு வந்து தன் கணவர் உண்ணும் இலையில் இட்டார். அதனை உண்ட பரமதத்தன் அக்கனியின் சுவை, அதற்கு முன்னே உண்ட கனிச் சுவையைவிட வேறுபட்டதாகவும், அருமையாகவும் இருந்ததை உணர்ந்து புனிதவதியாரை நோக்கி, இந்தக்கனியை நீ எங்குப் பெற்றாய் எனக் கேட்டான். புனிதவதியார் இறைவன் தனக்கு வழங்கிய கருணையைப் பிறர்க்குக் கூறல் கூடாதாயினும், தன் கணவன் கேட்டதால், நடந்தவற்றைக் கூறினார்.
அவற்றைக் கேட்ட பரமதத்தன், இக்கனி சிவபெருமான் உனக்குத் தந்தது உண்மையானால், இன்னொரு கனியையும் இவ்வாறே வரவழைத்து எனக்கு அளிப்பாயாக எனக் கேட்டான். புனிதவதியார் தனியே சென்று, இறையருள் எனத் தான் கூறிய வார்த்தை பொய்யாகாமல் இருக்க, இன்னொரு மாங்கனி அருள வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார். இறையருளால் இன்னொரு மாங்கனி அம்மையார் கைக்கு வந்தது. பரமதத்தன் அக்கனியைத் தன் கையில் வாங்கினான். வாங்கிய உடனே அக்கனி மாயமாய் மறைந்தது. அதனைக் கண்டு பயந்து போன பரமதத்தன் தன் மனைவியாக வந்த அம்மையாரைத் தெய்வமென மதித்து, அவரோடு சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்தபோதும் உடல்உறவுத்தொடர்பு இன்றி வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் கடல் கடந்து வாணிபம் செய்து வருவேன் என்று உறவினர்களிடம் கூறி, பல பொருள்களை மரக்கலத்தில் ஏற்றிக் கொண்டு கடல் கடந்து சென்று, பெரும் பொருள் ஈட்டிக் கொண்டு மீண்டவன், பாண்டி நாட்டு மதுரையை அடைந்தான். அங்கே இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டான். அம்மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தைக்குப் புனிதவதியாரின் பெயரையே வைத்தான்.
இதனை அறிந்த புனிதவதியாரின் உறவினர், அம்மையாரை அவர் தம் கணவர்பால் சேர்க்கும் எண்ணத்தோடு, அவரைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு, பாண்டி நாடு சென்றனர். அவர்கள் வருகையை அறிந்த பரமதத்தன், அச்சம் கொண்டு, இரண்டாவதாகத் தான் மணந்த மனைவியோடும் மகளோடும் புறப்பட்டு ஊர் எல்லையை அடைந்தான். அவன் வருகையை அறிந்த உறவினர் பல்லக்கை நிறுத்தினர். பரமதத்தன் அம்மையாருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். அதனைக் கண்ட புனிதவதியார் அச்சத்தோடு ஒதுங்கி நின்றார். சுற்றத்தினர் பரமதத்தனை நோக்கி `நீ உன் மனைவியை வணங்கக் காரணம் என்ன` எனக் கேட்க, அவன் அவர்களை நோக்கி ` இவர் நம் போன்றவர் அல்லர்; தெய்வத்தன்மை வாய்ந்தவர்; நீங்களும் இவரைப் பணிந்து வழிபடுங்கள்` என்றான்.
சுற்றத்தவர் `ஈது என்ன வியப்பு` எனத் திகைத்து நிற்கப், புனிதவதியார் சிவபிரான் திருவடிகளைச் சிந்தித்து `தன் கணவர் கருத்து இதுவானால், அவருக்காக அமைந்த எனது சதைமிக்க உடலைக் கழித்து நீக்கி, நின் திருவடிகளைப் போற்றி நிற்கும் கணங்களில் ஒன்றாகும் பேய் வடிவினை எனக்குத் தந்தருளுக` என வேண்டி நின்றார். அப்போது பெருமான் அருளால் வானுலகும் மண்ணுலகும் போற்றும் பேய் வடிவம் அவருக்குக் கிட்டியது. உறவினர் அஞ்சி அகன்றனர். புனிதவதியார் சிவனடியே சிந்திக்கும் சிவஞானம் மிக்கவராக, அற்புதத் திருஅந்தாதியால் இறைவனைப் போற்றினார்.
அம்மையே
பின்பு திருஇரட்டை மணிமாலை என்ற தொகுப்பையும் அருளி, திருக்கயிலையில் சிவபிரானது திருவோலக்கத்தைக் காணும் விருப்பத்துடன் வடதிசை நோக்கிப் புறப்பட்டு, திருக்கயிலையை அடைந்தார். கயிலைமலையைக் காலால் மிதித்தல் கூடாது எனக் கருதி, தலையால் நடந்து மேல்ஏறிச் சென்று இறைவன் சந்நிதியை அடைந்தார். சத்தியாகிய அம்பிகை, அம்மையாரின் அன்பின் பேரளவு கண்டு, வியந்து, இறைவனை நோக்கி `எம் பெருமானே? தலையினால் நடந்துவரும் இப் பெண் யார்?` எனக் கேட்கப், பெருமான் `இவர் நம்மைப் பேணும் அம்மை. பேய் வடிவம் நம்மை வேண்டிப் பெற்றாள்` எனக்கூறி `அம்மையே` என்னும் செம்மொழியால் அவரை அழைக்க, `அப்பா` என்று சொல்லி இறைவனையும் இறைவியையும் வணங்கினார்.
இறைவன் அவரை நோக்கி `நீ பெறக் கருதுவது என்ன?` எனக் கேட்க, அம்மையார், "இறைவா நீ திருநடம் புரியும்போது உன் அடி நிழற்கீழே இருக்க வேண்டும்' என வேண்டினார். பெருமான் `திருவாலங்காட்டில் யாம் ஆடி அருளும் திருக்கூத்தினைக் கண்டு எம்மைப் பாடி இருப்பாயாக` என அருளினார்.
அம்மையார் கயிலைப் பெருமானிடம் விடைபெற்று, தலையால் நடந்தே திருவாலங்காட்டினை அடைந்து, இறைவனது திருக்கோலத்தைக் கண்டு வழிபட்டு, திருப்பதிகங்களைப் பாடிப் போற்றி, பெருமானது தூக்கிய திருவடி நிழற்கீழே என்றும் நீங்காது வாழும் பெருவாழ்வினைப் பெற்றார்.
திருஞானசம்பந்தரும் சுந்தரரும் அம்மையார் தலையால் நடந்த திருவலாங்காட்டைக் காலால் மிதித்தல் கூடாது என்று எண்ணி, ஊர் எல்லையிலிருந்தே திருப்பதிகங்கள் பாடினர்.
அம்மையார் தாம் அருளிச் செய்த பிரபந்தங்களாகிய மூத்த திருப்பதிகங்களின் திருக் கடைக் காப்புக்களிலும் அற்புதத் திருவந்தாதியின் இறுதிச் செய்யுளி லும் `காரைக்கால் பேய்` எனக் கூறுவதால், இவரது ஊர் காரைக்கால் என்பதும், பேய் வடிவம் வேண்டிப் பெற்றபின் பாடியதால் தன்னைப் பேய் என உரைத்துள்ளார் என்பதும் தெரிகிறது.
காலம்
அம்மையார் காலம் ஞானசம்பந்தர் காலமாகிய கி.பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது எனவும், இவரது பாடல் அமைப்புகளைக் கொண்டு பார்க்கும்போது, இவரது காலம் கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டாகக் கொள்ளலாம் என்பதும் வல்லுனர்களின் கருத்தாகும்.
திருச்சிற்றம்பலம்.