கோவிந்தபுரம், போதேந்திர சுவாமிகள்.
கும்பகோணத்திற்கு அருகே திருவிடைமருதூரை அடுத்துள்ள ஊர் கோவிந்தபுரம். இங்குதான் போதேந்திரருடைய அதிஷ்டானம் உள்ளது. காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் 59-வது பீடாதிபதியாக விளங்கியவர் பகவன்னாம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவரது காலம் 1638 முதல் 1692 வரை. இந்துக் கோவில்கள் நாசம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த காலக்கட்டத்தில்தான், இவரது நாமஜபப் பிரசாரம் முனைப்புடன் தொடங்கியது.
நாம ஜபத்தின் மூலம் இறைவனை அடையலாம் என்பது இவரது கோட்பாட்டு. அந்த எளிய வழிபாட்டை போதேந்திரர் மேம்படுத்தினார். நாம சங்கீர்த்தனம் என்பது இசையுடன் தாளவாத்தியக் கருவிகளுடன் இறைவனுடைய திருநாமங்களையும் புகழையும் பாடுவது.
நாம ஜபம் என்றால் இறைவனுடைய ஒரு நாமத்தை, அதாவது ஒரு பெயரையோ, சில பெயர்களையோ திருப்பித் திருப்பி எந்நேரமும் உச்சரித்துக் கொண்டிருப்பதுதான். இந்த நாம ஜெபம் செய்வதற்கு யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், நேரம் காலம் இல்லாமல் சொல்லலாம்.
போதேந்திரர் தினமும் ராம நாமத்தை 1,08,000 முறை துதித்து வந்தார். ஜபத்தை வாய்விட்டோ, மனதுக்குள்ளோ சொல்லலாம்.
பகவத் கீதையிலே கிருஷ்ண பரமாத்மா, யக்யங்களிலே நான் ஜப யக்யமாக இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். கலிகாலத்தில் பகவனுடைய நாமத்தை உச்சரித்தாலே முக்தி கிடைக்கும்.
தனிப்பட்டோ, சிலரோ சேர்ந்து சிவாயநம:, ஓம் நமோ நாராயணாய, ராம ராம, கிருஷ்ண கிருஷ்ண, சிவசிவ என்று அவரவருடைய இஷ்ட தெய்வங்களுடைய பெயரைச் சொல்லலாம்.
போதேந்திரருடைய சமகாலத்தவர்கள்தான் கன்னட தேச புரந்திரதாசர், கனகதாசர். ஆந்திராவிலே ராமதாசர், க்ஷேத்ரக்யர், துக்காராம் வங்காளத்திலே கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர், காசியிலே கபீர்தாசர், துளசிதாசர் வடக்கே சுவாமி ஹரிதாஸ், ஸ்ரீவல்லபர், குருநானக், குருகோவிந்த்சிங், மீரா போன்றோர்களும்; கிட்டதட்ட சமகாலத்தவர்கள்.
இவர்கள் அனைவருமே இறைவனுடைய நாம சங்கீர்த்தனம் நாமஜெபம் என்பதை எடுத்துக்கொண்டு பாரததேசம் முழுவதும் பக்தியைப் பரப்பினர்.
காஞ்சிபுரத்திலே கேசவ பாண்டுரங்கன் என்ற ஆந்திர தேசத்தவர் அவருடைய மனைவி சுகுணாவுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு போதேந்திரர் குழந்தையாக அவதரித்தார். இவருக்கு புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார்கள். அப்போது காஞ்சி காமகோடி மடத்தின் 58 வது பீடாதிபதியாக ஆத்மபோதேந்திரர் என்கின்ற விஸ்வாதிகேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் உதவியாக இருந்து வந்தார் பாண்டுரங்கன்.
பாண்டுரங்கன் ஒரு நாள் மடத்துக்குப் புறப்படும் போது, நானும் வருவேன். என்று அடம் பிடித்து, ஐந்தே வயதான புருஷோத்தமன் குழந்தை ஸ்ரீமடத்திற்குச் சென்றது. சுவாமிகளைக் கண்டவுடன் குழந்தை பக்தியால் நமஸ்காரம் செய்தது. சுவாமிகளும் அதனுடைய தெய்வீகத் தன்மையைப் புரிந்துக் கொண்டு இந்த குழந்தை யாருடையது என்றார்.
பெரியவருடைய பரிபூரண ஆசீர்வாதத்துடன் பிறந்தது இந்த குழந்தை என்று தந்தை சொன்னார். அதனுடைய அர்த்தம் என்னவென்றால் காஞ்சி மடத்துக்குச் சொந்தமான குழந்தை இது என்பதுதான். சுவாமிகளும் இந்தக் குழந்தை இங்கேயே இருக்கட்டும். இங்கேயே எல்லாம் படிக்கட்டும் என்று சொல்லிவிட்டார்.
அன்றுமுதல் புருஷோத்தமன் காஞ்சி மடத்திலேயே வளர்ந்து, இருந்தாலும் தினமும் பெற்றோர்களை சந்தித்து நமஸ்காரம் செய்து ஆசிகளை பெற்றுக் கொண்டிருந்தார். உபநயனம், வேதம், வேதாந்தம் இவைகளை திறம்படக் கற்றல் எல்லாம் செய்த பிறகு நாராயண நாம ஜபமே சிறந்தது என்றறிந்தார். அன்று முதல் 1,08,000 நாம நாமத்தை ஜபிப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். இந்த காலக்கட்டத்திலே குருவாகிய ஆசார்யர் காஞ்சி மடாதிபதி காசிக்குச் சென்றிருந்தார். காசிக்குச் சென்ற பிறகு காசியிலே அவ்வளவு பெரிய அளவில் நாம சங்கீர்த்தனம் எல்லாம் நடந்துக் கொண்டிருந்ததைப் பார்த்து நம் ஊரிலும் நடக்க வேண்டும் என்று நினைத்தார். குருவைப் பிரிந்திருக்க முடியாத புருஷோத்தமன் காசிக்குச் சென்று விட்டார். அவருக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டு அவருக்கு அடுத்த மடாதிபதியாக பட்டமும் சூட்டப்பட்டது. அதற்குப் பிறகு காஞ்சி மடத்தில் தங்கியிருந்ததை விட, பல ஊர்களுக்கும் சென்று ராமநாம மகிமையை, நாம சங்கீர்த்தன மகிமையை போதேந்திரர் உபதேசித்தார்.
போதேந்திர சுவாமிகளுடன் சமகாலத்தவர் திருவிசநல்லூர் அய்யாவாள் என்பவர். திருவிசநல்லூர் அய்யாவாளுடன் இணைந்தே பல இடங்களுக்கும் பல கிராமங்களுக்கும் சென்று நாம ஜபம் செய்தார்கள்.
ஒரு நாள் ஒரு வீட்டிலே சாப்பிடும்பொழுது ஒரு 5 வயது பேசமுடியாத குழந்தை இருந்தான். போதேந்திரர் இலையிலே எல்லாம் பரிமாறப்பட்டன. நிறைய பதார்த்தங்களைச் சாப்பிடாமல் எழுந்து விட்டார். குழந்தை எனக்கு பசிக்கிறது என அடம்பிடித்து, போதேந்திரருடைய இலையிலிருந்து சாப்பாட்டை எடுத்து, தான் சாப்பிட்டு விட்டான். சாப்பிட்ட உடனேயே ராம ராம ராம என்று குழந்தை ராமநாமத்துடன் பேச ஆரம்பித்தது. இந்த அற்புதமான நிலையை அனைவரும் கண்டு பகவானுடைய கடாக்ஷத்திற்கு ஆளானார்கள்.
போதேந்திரருக்குக் குழந்தைகள் என்றால் அளவில்லாத மகிழ்ச்சி. கோவிந்தபுரத்திற்கு அருகிலுள்ள காவேரியில், தான் தினமும் நீச்சல் அடித்துக் காட்டி சாகசங்களைச் செய்துகாட்டிக் குழந்தைகளை மகிழ்விப்பார். ஒரு கோடைக்காலத்திலே போதேந்திரர் ஆற்று மணலிலே ஒரு குழியைத் தோண்டி அதிலே அமர்ந்து கொண்டு, சிறுவர்களைப் பார்த்து இதை மண்ணால் மூடுங்கள்; மூடிவிட்டு நாளை வந்து பாருங்கள்; தோண்டின பிறகு நான் வருவேன் என்றார். குழந்தைகளும் விபரீதம் தெரியாமல் மண்ணைப் போட்டு மூடிவிட்டர்கள்.
அதற்குப் பிறகு போதேந்திரரைக் காணவில்லை என்று ஊர் மக்கள் சொன்ன பிறகு தான் குழந்தைகள் அவர்களிடம் உள்ளதைச் சொன்னார்கள் அனைவரும் வந்து தேடிய பொழுது தோண்ட ஆரம்பித்தார்கள். ஒரு அசரீரியிலே நான் இங்குதான் மண்ணிலே ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறேன்; என்னைத் தொந்தரவு செய்ய வெண்டாம்; இதற்கு மேலே ஒரு பிருந்தாவனம் அமைத்து ஆராதனை செய்யுங்கள் என்று சொன்னவர் சதாசர்வகாலமும் ராமநாமத்திலே ஐக்கியமாகி விட்டார். இது அவருடைய ஜீவசமாதியாகும். இன்றாளவும் இந்த ஜீவசமாதிக்கு ஆராதனை நடந்து கொண்டிருக்கிறது. காவேரி வெள்ளத்தினாலே இந்த அதிஷ்டானம் ஒரு காலத்திலே தெரியாமல் போனதால், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் இந்த ஆற்று மண்ணுக்குள்தானே இருந்திருப்பார் என்று நினைத்து மஹாராஜா சத்ரபதி சிவாஜியின் வழியில் வந்த, தஞ்சையை ஆண்டு வந்த மஹாராஜா உதவியுடன், மீண்டும் அந்த சமாதியைக் கண்டுபித்து ஆராதனை செய்ய ஆரம்பித்தார்.
மருதாநல்லூர் சுவாமிகளுடைய முயற்சியாலே காவேரியின் வெள்ளம் போதேந்திர சுவாமிகளுடைய அதிஷ்டானத்தை மூடாமல், சற்றே திசைத்திருப்பி அதற்குண்டான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்த பிறகு, இன்றளவும் இந்த அதிஷ்டானம் இருக்கிறது.
கலியுகத்திலே நாமஜபத்திற்கு எந்த பேதமும் கிடையாது. அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தமான நாமத்தை எப்பொழுது வேண்டுமானாலும், நியமங்கள் இல்லாமல் ஆசாரம் இல்லாமல் அனுஷ்டானம் இல்லாமல் பூஜைஅறை இல்லாமல், எந்த சந்தர்ப்பத்திலும், எந்த நிலையிலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், சிறுவர்களாக இருந்தாலும் வயோதியர்களாக இருந்தாலும், எந்நேரமும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம். நாம ஜபமே, ஜபம் செய்பவர்களுக்குப் புனிதத்தை அளிக்கும். இந்த நாம ஜபம் கலியுகத்திலே முத்தியில் கொண்டு சேர்க்கும் என்பது உறுதி.
ஜெய ஜெய சங்கர.
ஹர ஹர சங்கர.