மழநாட்டில், மங்கலவூர் என்னும் ஊரில், ஆயர் குலத்தினில், ஆனாயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் மற்றைய இடையர்களோடு பசுநிரைகளைக் காட்டுக்குப்போய் மேய்த்துக் கொண்டு வருவார். காந்தருவ வேதமாகிய நாதவழியில் சொல்லியபடி செய்யப்பட்ட புல்லாங்குழலினால், நமசிவாய என்னும் ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்து, இசையமுதத்தை உயிர்களுடைய செவியிலே ஊட்டுவார்.
மழைக்காலத்திலே ஒருநாள், ஆனாயநாயனார் காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே பரமசிவனைப்போல சடைமிக்க பூங்கொத்துகளுடன் இருந்த ஒரு கொன்றைமரத்துக்கு அருகிலே போனார். அன்பினாலே உருகி, குழலினால் இசை நூலிலே விதித்தபடி அஞ்செழுத்து மந்திரத்தை வாசித்தார். அவர் வாசித்த இசை வெள்ளமானது எல்லா உயிர்களின் செவியிலும் அமுதம் போலப் புகுந்தது. பசுக்கூட்டங்கள் அசையாமல் மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் அவரது இசையைக் கேட்டுக் கொண்டு நின்றன; எல்லாக் காட்டுமிருகங்களும் அவர் அருகிலே வந்தன; மயிற்கூட்டங்கள் அவர் பக்கத்தில் வந்தன; மற்றைப் பறவைகளும் அவரருகிலே வந்து நின்றன.
இடையர்கள் எல்லாரும் கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்; விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து நின்றார்கள்; பாம்புகள் பயமின்றி மயில்களின் மேலே விழுந்தன; சிங்கமும் யானையும் ஒரே இடத்தில் சேர்ந்து நின்றன; மான்கள் புலிகளின் பக்கத்திலே பயமின்றி நின்றன; மரக்கிளைகள் அசையாமல் இருந்தன. இப்படி சரம் அசரம் என்னும் எல்லாம் ஆனாயநாயனாருடைய குழல் இசையைக் கேட்டு, இசைமயமாக நின்றன, அந்த இசையைப் பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் எழுந்தருளி வந்து நின்றார்.
"ஆனாயன் ஆகிய அன்பனே; நம்முடைய அடியார்கள் உன்னுடைய குழலிசையைக் கேட்க வேண்டும், நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். ஆனாயநாயனார் குழல் வாசித்துக் கொண்டு சிவனாரின் பக்கத்திலே சென்று, திருக்கைலாயத்தை அடைந்தார்.
திருச்சிற்றம்பலம்.