ஆதிசங்கரர் கேரளத்தில் காலடி என்ற கிராமத்தில் பிறந்தார். சிவகுரு, ஆர்யாம்பாள் என்ற பக்தி மிகுந்த தம்பதிகளுக்கு ஒரே மகன். திருச்சூர் சிவபிரானை நீண்ட காலம் பிரார்த்தனை செய்ததன் பயனாக அவர் பிறந்தார். வேதங்கள் முழுவதையும்எட்டு வயதிலேயே கற்றுத் தேர்ந்தார். அவர் மிகச் சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால். அவரது தாயார் அவரை மிகுந்த அன்புடன் வளர்த்து வந்தார். சங்கரரிடம் துறவு மனப்பான்மை மிகுந்திருந்தது. பல அற்புதங்கள் நிகழ்ந்தன. நதியைத் தன் வீட்டு வாசலுக்கு வரவழைத்தார். ஒரு ஏழைப்பெண்மணி பிட்சையாக அளித்த ஒரு நெல்லிக்கனிக்காகப் பொன்மழை பொழியச் செய்தார்.

காலடி  ஸ்தம்பம்

ஒருநாள் பூர்ணா நதியில் சங்கரர் நீராடிக் கொண்டிருந்தார். தாயார் கரை மேல் நின்று கொண்டிருந்தார். ஒரு முதலை சங்கரரின் காலைப்பிடித்து, தண்ணீரினுள்ளே இழுத்துச் சென்றது. சங்கரர் சந்நியாசம் ஏற்றுக் கொள்வதற்கு அன்னையின் அனுமதியைக் கேட்டார். ஆபத்தான சூழ்நிலையில், ஆபத் சந்நியாசம் ஏற்றுக் கொள்வது வழக்கம். ஆர்யாம்பாள் சம்மதத்தை அளித்தார். முதலையும் விட்டுச் சென்றுவிட்டது. கரைக்கு வந்த சங்கரர் சந்நியாசியாக முடிவு செய்தார். தாயின் இறுதிக்காலத்தில் கூடவே இருப்பதாகவும், அவரது ஈமச் சடங்குகளைச் செய்வதாகவும் வாக்களித்தார்.

தென்னிந்தியா முழுவதும் சுற்றி அலைந்து, முடிவில் குருவைத் தேடி நர்மதை நதிக்கரையை அடைந்தார். கோவிந்த பகவத் பாதரைச் சந்தித்தார். கோவிந்த பாதரும் மகிழ்ச்சியுடன் பால சந்நியாசியாகிய சங்கரரைத் தமது சீடராக ஏற்றுக்கொண்டு வேதாந்தத்தின் நுட்பமான கருத்துக்களை அவருக்குக் கற்பித்தார்.

ஏழாண்டுகளில் சங்கரர் வேதாந்தப் பாடங்களை அறிந்து, சாதனா முறைகளைப் பயின்றார். காசிக்குச் சென்று, அங்கிருந்து பகவத் கீதை,உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம் இவற்றிற்கு பாஷ்யங்கள் (விரிவுரைகள்) எழுதி, அத்வைத தத்துவக் கோட்பாடுகளைப் பரப்புவாயாக என்று அவரது குரு கூறினார். குருவின் வாக்கினை ஏற்று, சங்கரர் காசிக்குச் சென்றார். பற்பல வாதங்களில் வென்றார். சீடர்கள் அவரை நாடி வந்தனர்.
காசியில் பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதிக் கொண்டிருந்த பொழுது, அவரது மனத்தில் வேத வியாசர் தோன்றினார். அவரது கட்டளைக்குப் பணிந்து, நாடு முழுவதும் திக் விஜயம் செய்யப் புறப்பட்டார். மண்டன மிச்ரருடன் அவர் மேற்கொண்ட வாதம் மிக முக்கியமானது. மண்டனமிச்ரரின் மனைவி ஸரஸவாணி/உபயபாரதி. இவர் சிறந்த அறிவாளி; நடுநிலை தவறாதவர். அதனால், உபயபாரதியே வாதத்திற்கு நடுவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார். பல நாட்கள் வாதம் நடைபெற்றது. சங்கரர் வாதத்தில் வெற்றி பெற்றார். தோல்வியுற்றவர் வெற்றி பெற்றவரின் சீடராக வேண்டும் என்பது நிபந்தனை. மண்டன மிச்ரர் சந்நியாச ஆசிரமம் மேற்கொண்டு, சுரேச்வரர் என்ற பெயர் சூட்டப்பட்டார்.

ஆதி சங்கரர், தெற்கே சிருங்கேரி, வடக்கே பத்ரி, மேற்கே துவாரகை, கிழக்கே ஜகந்நாத் பூரி ஆக நான்கு இடங்களில் மடங்களை நிறுவினார். காஞ்சியில் காமகோடி பீடத்தை ஸ்தாபித்தார். சிருங்கேரி மடத்தில் சுரேசுவரரையும், துவாரகையில் பத்மபாதரையும், பத்ரியில் தோடகரையும், பூரியில் ஹஸ்தாமலகரையும் மடத்து அதிபதிகளாக நியமித்தார்.

தாயார் மரண வேளையை ஞானத்தால் அறிந்து, தாயினைக் காணக் காலடிக்கு வந்தார். மதச் சடங்குகளில் ஊறிய உறவினரின் எதிர்ப்பினை ஏற்காமல், வீட்டுக்குப் பின்னால் இருந்த நதிக்கரையினில் அன்னையின் உடலைத் தகனம் செய்தார்.

பல புனிதத்தலங்களில் ஸ்ரீசக்கரங்களைப் பிரதிஷ்டை செய்தார். காஞ்சியிலுள்ள காமாட்சி கோயில், பத்ரியிலுள்ள நரநாராயணர் கோயில், நேபாளத்திலுள்ள குஹ்யேஸ்வரி கோயில் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யராகிய (உலகினை வலம் வந்தவர்) சங்கரர் காஷ்மீரத்திலுள்ள பேரறிஞரையும் வென்றார். தமது திக் விஜயத்தை முடித்துக் கொண்டு, சகல கலைகளையும் கற்றுணர்ந்து, அதன் அடையாளமாக சர்வக்ஞ பீடத்தில் அமர்ந்தார்.

முப்பத்திரண்டாம் வயதில் கேதார்நாத் திருத்தலத்துக்குச் சென்றபோது அங்குள்ள கோயிலுக்கு அருகிலுள்ள இடத்தில் அவரது பூதவுடல் மறைந்ததாகவும், புனிதக் காஞ்சியில் அன்னை காமாட்சியின் திருவுருவத்தில் அவர் மறைந்ததாகவும் கூறுவர்.

நாத்திக வாதங்களை முறியடித்தார். 72 துர்மதங்களை வாதத்தில் வென்று, வேத மதத்துக்குப் புத்துயிர் ஊட்டினார். வடமொழியில் நிறைய ஸ்லோகங்களை பல்வேறு சந்தங்களில் இயற்றினார். குழந்தைகள் முதல் சன்னியாசிகள் வரை உள்ளோர் பலருக்கும் பலவிதமான பாடல்கள் இயற்றி அருளியுள்ளார். பக்தி, தத்துவம், அடக்கம், அன்பு இவற்றை எல்லோருக்கும் ஏற்றவாறு உபதேசித்தார்.

சங்கரர் எழுதிய ஸ்லோகங்களில் சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி, சுப்ரமண்ய புஜங்கம், கனகதாரா ஸ்தோத்ரம், அன்னபூர்ணா ஸ்தோத்ரம், பஜ கோவிந்தம், மீனாக்ஷி பஞ்சரத்னம், தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் போன்றவை நிதமும் பாராயணம் செய்ய உகந்தவை.

சங்கரர் பற்றிய இன்னும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள www.kamakoti.org ஐப் பார்க்கவும்.

சித்திர வரலாறு: https://www.kamakoti.org/kamakoti/details/Shankaracharya%20Charitram.html

ஜயஜய சங்கர ஹரஹர சங்கர.

Posted 
May 17, 2021
 in 
அடியார்கள்
 category

More from 

அடியார்கள்

 category

View All

Join Our Newsletter and Get the Latest
Posts to Your Inbox

No spam ever. Read our Privacy Policy
Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.