கௌமார மடாலயம் என வழங்கப்படும் சிரவை ஆதீனம் இன்றைக்கு நூற்றுமுப்பது (130) ஆண்டுகளுக்கு முன்பு தவத்திரு இராமானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டது. இதன் முதன்மையான கொள்கை “ஒன்றாக நல்லது கொல்லாமை” ஆகும்.
கௌமார ஆதீனத்தின் குருமரபு முருகப் பெருமானிலிருந்து தொடங்குகிறது. அருணகிரிநாதர் இரண்டாம் குருநாதராகவும், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மூன்றாவது குருநாதராகவும் கொண்டு, இவரிடத்தில் உபதேசம் பெற்றுச் சிரவையாதீனத்தை நிறுவிய இராமானந்த சுவாமிகளிடமிருந்து தான் இவ்வாதீனத்தின் உபதேசப் பரம்பரை தொடங்குகிறது.
தவத்திரு இராமானந்த சுவாமிகள்:
சிரவை ஆதீன நிறுவனர் ஆகிய தவத்திரு. இராமானந்த சுவாமிகள் 1890இல் சிரவை ஆதீனத்தை நிறுவினார். கௌமார மடாலயத்தில் முதன்முதலாக அருள்மிகு சித்தி மகோற்கட விநாயகர் ஆலயம், தண்டபாணிக் கடவுள் ஆலயம் ஆகிய இரண்டும் தனித்தனியாக தவத்திரு சுவாமிகளால் கட்டப்பட்டன. சுவாமிகள் சுமார் 1௦௦௦த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
சதுர்வேத சித்தாந்த சண்மத சமயாதீத அத்துவித கௌமார சபையைத் தோற்றுவித்தவர்.
கொல்லா நோன்பு, புலால் உண்ணாமை, இறையன்பு, அறவொழுக்கம் ஆகியவற்றைக் கொங்கு நாட்டில் முதலில் பரப்பிய தவசீலர் ஆவார்.
திருமடத்தின் கோவில்களில் தமிழ் அருட்பாடல்களால் திருக்குடமுழுக்குச் செய்தவர். இவர் பாடிய முதல் நூல் சண்முகமாலை ஆகும்.
தவத்திரு கந்தசாமி சுவாமிகள்:
தவத்திரு.இராமானந்த சுவாமிகளின் முதன்மைச்சீடர் 1923 இல் திருமடத்தின் இரண்டாம் பட்டமாக அருளாட்சி ஏற்றவர். கொங்கு நாட்டுக் கச்சியப்பர் எனப் போற்றப்படுபவர். சமய வேறுபாடோ, மொழி வேறுபாடோ சற்றும் இல்லாதவர். உயிர்பலியிடும் கோவில்களுக்குச் செல்லாதவர். சிறந்த சொற்பொழிவாளர்.
பக்தமாலா எனும் மலையாள உரைநடை நூலைப் பக்தமான்மியம் எனும் பெருங்காப்பியமாக தமிழில் இயற்றினார். 103 வைணவ அடியார்களின் வரலாற்றைக் கூறும் நூலாகும். 7373 பாடல்களைக் கொண்ட நூலை II தொகுதிகளாகப் பதிப்பிக்கப்பட்டு, அரங்கேற்றல் வைபவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மேலும் தலபுராணங்கள், கோவை, கலம்பகம், பல மாலைகள், அந்தாதிகள் என மொத்தம் 14,500 பாடல்களை இயற்றியுள்ளார்.கொங்கு நாட்டுப் புலவர்களிலேயே அதிகமான எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியவர்.
தவத்திரு.கஜபூசைச் சுந்தர சுவாமிகள்:
தவத்திரு.கந்தசாமி சுவாமிகளின் சீடர் சிரவை ஆதீனத்தின் மூன்றாம் பட்டமாக அருளாட்சி செய்தவர் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள். திருப்பணி வேந்தர், அலங்கார சக்கரவர்த்தி, பெரியபுராணப் பேரறிஞர் எனப் பலவாறு போற்றப்படுபவர். இவருடைய ஆட்சிக்காலம் சிரவை ஆதீனத்தின் பொற்காலம் ஆகும். தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக மலர் வழிபாட்டையும், திருநெறிய தமிழில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவையும் தொடங்கிவைத்தவர். சுவாமிகளின் தலைமையில் திருப்பெருந்துறை, வெஞ்சமாக்கூடல், அவிநாசி, அமெரிக்கா நாட்டு வெர்ஜீனியா நகரின் தாமரைக் கோயில் என ஏராளமான திருக்கோவில்களின் திருப்பணிகள் நடைபெற்றன. பெரியபுராணத்தில் பேரீடுபாடு கொண்டவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெரியபுராணத்தில் கவிநலம், சமுதாய நோக்கு எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றியவர்.
108 ஆண் யானைகளை வைத்து உலகப் பெருவேள்வி நடத்தி உலக சாதனை படைத்தவர். 30க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு 700க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். மாநில முருகபக்தர்கள் பேரவையைத் தொடங்கி சமயப் பணிகளையும், சமுதாயப் பணிகளையும் தொடங்கிவைத்தார். மடாலயத்தில் கல்வி நிறுவனங்களைத் தொடங்கி வைத்தவரும் சுவாமிகளே ஆவார்.
தவத்திரு குமரகுருபர சுவாமிகள்:
தவத்திரு.கஜபூசைச் சுந்தர சுவாமிகளின் சீடர் தவத்திரு.குமரகுருபர சுவாமிகள் சிரவை ஆதீனத்தின் நான்காம் பட்டமாக அருளாட்சி செய்து வருபவர். தவத்திரு.கந்தசாமி சுவாமிகளின் இலக்கியங்களில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். சுவாமிகளின் 25 ஆண்டுகள் அருளாட்சியில் சமயப்பணி, தமிழ் இலக்கியப் பணி, கல்விப்பணி, சமுதாயப் பணி ஆகியவற்றின் வளர்ச்சி திருவருளாலும் குருவருளாலும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.