திருக்கயிலாய மரபில் வந்த சைவசித்தாந்தத் தோன்றலாகிய மெய்கண்டார் வழியில் வந்த, ஆதி சிவப்பிரகாசரைக் குருவாக ஏற்றுப் பலருக்கு வழிகாட்டிய சிந்தனையாளர், சாந்தலிங்க அடிகளார் ஆவார். சாந்தலிங்கரின் அருள் தோற்றப் பொலிவையும் தவப் பொலிவையும் உணர்ந்ததால் அடியவர் கூட்டம் நாளும் பெருகியது.
சாந்தலிங்கப் பெருமான் பேரூரில் தங்கி அருள் ஆட்சி செய்த காலத்தில் கொலை மறுத்தல், வைராக்கியசதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் எனும் நான்கு நூல்களை படைத்தார்.
திருக்குறளின்உயர்நெறிகளின் அடிப்படையில் கொலை மறுத்தல் என்ற நூலில் உயிர்களைக் கொல்லாமை புலால் உண்ணாமையை வலியுறுத்துகின்றார். வைராக்கிய சதகம் என்ற நூலில் மெய்மை உணர்வதற்கு வேண்டிய நடைமுறைகளை 100 பாடல்கள் மூலம் விளக்கியுள்ளார். மனிதனின் அகப்பற்றறையும் புறப்பற்றயும் முற்றிலும் களைய வேண்டியதைப் பற்றி எடுத்து இயம்புகிறது வைராக்கிய சதகம். உலகில்பல்வேறு சமயங்கள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றிணைந்து முற்றுப் பெறும் இடம் இறைவனின்திருவடி என்றும். அத்தகைய சமயங்களுக்கிடையே விரோதம் கூடாது என்பதை வலியுறுத்துகின்றதுஅவிரோத உந்தியார்.
இறையருளோடும் இன்தமிழோடும் பலப்பல அடியார்களை உருவாக்கிய சாந்தலிங்கப்பெருமான் மாசித்திங்கள் முழு நிலவு நாளில் அருட் சமாதியை அடைந்தார். தொடர்ந்து வாழையடி வாழையாக வந்த அருள் மரபில் தமிழையும் சைவத்தையும் இருகண்கள் என கொண்டு திருமடத்தை உயர்நிலையில் வளர்த்து உலகெங்கும் சென்று தமிழ்த் தொண்டாற்றிய பெருந்தகை சீர்வளர்சீர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் ஆவார்.

1953ஆம் ஆண்டு தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் கல்லூரி தொடங்க வேண்டும் என்கின்ற சிறப்பில் தமிழ் அர்ச்சனை முறைமையோடு குன்றக்குடிஅடிகளார் தலைமை தாங்கத் தமிழ் கல்லூரி தொடங்கினார்.
தமிழில் திருக்கோயில் திருக்குடநீராட்டு விழா, தமிழ் வேள்விகள் , தமிழ் அர்ச்சனை முறைமை புதுமனை புகுவிழா போன்ற வாழ்வியல் அருளியல் நிகழ்வுகளை தமிழில் ஆக்கிக் தந்து செயல் படுத்திய பெருமையாளர். சென்னைப் பல்கலைக்கழகமும் அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் பேரூரடிகளாருக்கு இரண்டு முதுமுனைவர் பட்டம் வழங்கி சிறப்புப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குருமகா சன்னிதானங்கள் இறை திருவருளில் கலந்து நின்றபோது ஆதீனத்தின் அடுத்த குரு முதல்வராகத் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் அருளாட்சி ஏற்றார். தோன்றாத்துணையாக திருப்பெருந்திரு பேரூர் அடிகளாரும் தோன்றும் துணையாக திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரும் அருள் வழி காட்டிட, சமய சமுதாயத் தமிழ்ப்பணிகள் சிறப்புற நடைபெற்று வருகின்றன.

ஆன்மீக திருப்பணிகள், சமயப்பணிகள்
1954ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு சாதி இன வயது பேதமின்றி வாழ்வியல் அருளியல் சடங்குகள் நடத்துவதற்குரிய பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதுவரை 150 மகளிர் உள்பட 900 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
ஐயாயிரத்திற்கும் மேற்பட்டதிருக்கோயில்களில் தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டு பெருவிழா ஆதீனத்தால் நடைபெற்றுள்ளன.
சுமார் 1500 ஆண்டுகள்பழமை வாய்ந்த ஆறு கோவில்கள் உட்பட இயற்கை சீற்றம் மற்றும் பராமரிப்பின்மை காரணமாகச் சேதமடைந்த பத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து 45க்கும் மேற்பட்ட ஒருநாள் மற்றும் மூன்று நாள் சமயப்பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதுவரை 3000 நபர்கள் பங்கேற்றுப் பயன்பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் அடிகளாரது நாண்மங்கல விழாவின் போது 1000 பள்ளி குழந்தைகளுக்குச் சீருடைகளும் சுமார் 300 பேருக்கு ஆடைகளும் தானமாக வழங்கப்படுகிறது.
மலைவாழ் மக்களுக்கு ஆடைக் கொடை, அன்னம் பாலிப்பு மற்றும் தைப் பொங்கல் அன்று பொங்கல் வைப்பதற்குரிய பொருட்களும் 18 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
1950 ஆம் ஆண்டுதொடங்கப்பட்ட அன்பு இல்லம் மூலம் ஆதரவற்ற குழந்தைகள் 30 பேருக்குக் கல்வி, உணவு, உடை , இருப்பிடம் நன்னெறி வழிகாட்டுதல் போன்ற சேவைகள் வழங்கப்படுகிறது.
தைப்பொங்கல் அன்று வேளாண்மைத் தொழிலில் சிறந்து முன்னோடியாக விளங்குபவர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகிறது. இதுவரை 55 உழவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டு நம் பேரூராதீனத்தால் வளர்தமிழ் இயக்கமானது தொடங்கப்பெற்று மறைந்த மேனாள் குடியரசுத் தலைவர். விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஐயா அவர்களின் தலைமையில் பயிற்றுமொழி வழிபாட்டுமொழி மாநில மாநாடானது மிகச் சிறப்பாக நடத்தப்பெற்றது.
உலக சைவ மாநாடு, சித்தர்ஆய்வு மாநாடு, பெருங்கதை மாநாடு உள்ளிட்ட மாநாடுகளும் ஆதினத்தில் நடத்தப் பெற்றுள்ளன.
மருதமலை, சேவூர், முட்டம், முத்தூர் மொக்கணீசுவரம் காலகாலேசுவரர் கோயில் உள்ளிட்ட 6 கோயில்களில் நம் ஆதீனத்தால் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.
30 ஆண்டுகளாக நம் ஆதீனத்தால் வெள்ளிங்கிரி மலையில் மழை வேண்டி வேள்வியானது நடத்தப்படுகின்றது.
புலவர் பெருமக்களையும் விவசாயத்தையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் தினத்தன்று உழவுத் தொழிலில் சிறந்த உழவர்களுக்கு விருது வழங்கும் விழாவானது நம் ஆதீனத்தால் நடத்தப்பெற்று வருகிறது.
அமெரிக்கா, கனடா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் மடங்கள் நிறுவப்பட்டு அங்கு சமய பயிற்சி வகுப்புகளும் குடமுழுக்கு, புதுமனை புகுவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் தமிழில் வழிபாடு செய்வதற்கான பயிற்சிகளும் அங்கு வாழும் நம்பேரூராதீன அன்பர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நொய்யல் நதி மீட்டுருவாக்கப் பணிகளில் அடிகளார் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்க்கல்லூரி மாணவர்களும்நாட்டு நலப்பணித் திட்டத்தின் வாயிலாகச் செயல்பட்டு வருகின்றனர். 2016 ஆம் ஆண்டு கோவை ஆலாந்துறை கூடுதுறையில் “நொய்யலை நோக்கி” நிகழ்வு நடத்தப்பட்டது.
திருச்சிற்றம்பலம்.