செஞ்சி பானம்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம்
தொண்டை மண்டலம் (தற்போதைய காஞ்சிபுரம் திருவள்ளூர் திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்கள்) பல பழமையான திருக்கோயில்கள் கொண்ட பகுதியாகும். இவற்றில் பல கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் செஞ்சி பானம்பாக்கம் என்ற கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கைலாசநாதர் கோயிலும் இவற்றில் ஒன்று. சென்னை அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் கடம்பத்தூரை அடுத்த செஞ்சி பானம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி பானம்பாக்கம் கைலாசநாதர் கோயிலுக்குச் செல்லலாம்.
பானம்பாக்கம் கிராமத்தில் இந்த மாதம் முதல் (மே 2021) வீடுதோறும் திருமுறை, வீதிதோறும் திருமுறை இயக்கத்தைத் திரு. D. அசோக் குமார் என்பவர் திறம்பட நடத்தி வருகிறார். ரயில்வேஸ் பனியில் இருந்த போதும், வேலைக்குச் செல்வதற்கு முன், தினம் வீதிகளில் திருமுறை பாராயணம் செய்து வருகிறார். இங்குள்ள குழந்தைகளுக்கும் திருமுறை சொல்லிக் கொடுக்கிறார்.
செஞ்சியில் ஜனமே ஜெய ஈஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீ லட்சுமி நாராயணர் திருக்கோயில், ஏகாத்தம்மன் கோயில் ஆகியவை உள்ளன. பானம்பாக்கம் கிராமத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில், அருள்மிகு ராமர் கோயில் ஆகியவை உள்ளன. இந்த ஊருக்குப் பரம்பரம் என்ற பழைய பெயர் இருந்தது, அதுவே மருவிப் பானம் பாக்கம் என்று ஆனது.
இங்கே கி.பி. 1188 இல் சோழர்களால் கட்டப்பட்ட திருக்கோயில் உள்ளது. இரு சிவலிங்கங்கள் இந்தக் கோயிலில் அமைந்துள்ளன. அகத்தியர், வாலி பூசை செய்ததற்கு ஆதாரமாகச் சிவனை அகத்தியரும் வாலியும் பூஜை செய்யும் சிற்பங்கள் உள்ளன. இத்தல இறைவன், அகத்தீசுவரர், வாலீஸ்வரர், ஹரிஹரேஸ்வரர், கைலாசநாதர் என்ற பெயர்களால் போற்றப்படுகிறார்.
வெட்ட வெளியில் வானம்பார்த்து உள்ள லிங்கம் ஆதிகைலாசநாதர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய பாணத்துடன் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அட்டமா சித்திகள் பெற வழிபட்ட தலம்.
இத்திருக்கோயிலின் உள்ளே சங்கு சக்கர அபய ஹஸ்தத்துடன் அமர்ந்த கோலத்தில் கிழக்குத் திருமுக மண்டலமாக ஸ்ரீ புருஷோத்தமப் பெருமாள் சேவை சாதிக்கிறார். ஒரு கட்டத்தில் ஜமீன்தாரர்கள் குடும்ப பராமரிப்பில் செஞ்சி பானம்பாக்கம் திருக்கோயில்கள் இருந்துள்ளன என்று கருதப்படுகீறது. ஜமீன்தாரர்கள் பற்றிய குறிப்புகள் இன்றும் ஆவண காப்பகத்தில் உள்ளன.
அட்டமாசித்திகள் பூசித்த தலங்கள்: அனிமா - வெண்மணம்புதூர் ஸ்ரீ அகத்தீசுவரர் திருக்கோயில்; மஹிமா - புதுமாவிலங்கை ஸ்ரீ அகத்தீசுவரர்; லகிமா - அகரம் ஸ்ரீ அகத்தீசுவரர்; கரிமா - சத்தரை ஸ்ரீ வசிஷ்டேஷ்வரர்; பிராப்தி - செஞ்சி பானம்பாக்கம் ஸ்ரீ சோளீஸ்வரர்; வாசித்துவம் - செஞ்சி பானம்பாக்கம் ஸ்ரீ கைலாசநாதர்; பிராகாம்யம் - சிற்றம்பாக்கம் இஷ்ட சித்திலிங்கேஸ்வரர்; ஈசத்துவம் - பேரம்பாக்கம் ஸ்ரீ அஷ்டசித்தி லிங்கேஸ்வரர்.
செஞ்சி பானம்பாக்கம் - 631203.
சிவசிவ.