பன்னிரு திருமுறைகள் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்டு அருளப்பெற்ற பாடல்கள். வினாயகர், முருகன் பற்றிய சில பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப் பாடல்களை அருளியவர்கள் நாயன்மார்கள் ஆவார்கள்.
இவை 12 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன அந்தப் பெரும் பிரிவுகளுக்கு உள்ளே 1,254 தலைப்புகள் உள்ளன. மொத்தம் 18,246 பாடல்கள். இவற்றுள் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோர் பாடியவை தேவாரம் என்னும் தொகுப்பாகும்.
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றது. 10 ஆம் நூற்றாண்டு வாக்கில், இராஜராஜ சோழன் காலத்தில், சிதம்பரம் கோயிலிலே திருமுறைச் சுவடிகள் பூச்சிகளால் அரிக்கப்பட்டு, அழிந்தது போக மீண்டும் கிடைத்தவற்றை, நம்பியாண்டார் நம்பி என்னும் அடியவர் திருமுறைகளாகத் தொகுத்தார்.
திருமுறைப் பாடல்களைப் பண் (இசை) வாரியாகப் பிரிப்பது, தலம் வாரியாகப் பிரிப்பது, பாடியவர்கள் சென்று வந்த வரலாற்றின் படி பிரிப்பது, என்று பல வகைகளில் பிரித்து அச்சிடுவது வழக்கம். தேவார, திருமுறைப் பாடல்களைப் பண்ணுடன் (இசையுடன்) பாடுவது மரபு.
பதிகம் என்றால் 10 பாடல்கள் கொண்டது என்றும், ஒரு பதியின் (தலத்தின்) மேல் பாடப்பட்டது என்றும் பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு ஊரில் இருக்கும் இறைவன் மீதும் பாடல் பாடி, சைவம் தழைக்க நாயன்மார்கள் வழிவகுத்தார்கள். பாடல்களில் ஊரில் உள்ள ஆறு, இயற்கை வளம், மரங்கள், இசை முதலிய குறிப்புகள் நிறையக் கிடைக்கின்றன.
திருமுறைகள் 1, 2, 3 - இவை திருஞான சம்பந்தர் அருளியவை.
திருமுறைகள் 4, 5, 6 - இவை அப்பர் அருளியவை.
திருமுறை 7 - இதனைச் சுந்தரர் அருளினார்.
திருமுறை 8 - திருவாசகம், திருக்கோவையார். இவை மாணிக்கவாசகர் பாடல்கள்.
திருமுறை 9 - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. இதனைப் பாடியவர்கள்: திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த் தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர்.
திருமுறை 10 - திருமந்திரம். திருமூலர் பாடல்கள்.
திருமுறை 11 - பிரபந்தங்கள். இதனைப் பாடியவர்கள்: திரு ஆலவாய் உடையார், காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேரமான் பெருமான் நாயனார், நக்கீர தேவ நாயனார், கல்லாடதேவ நாயனார், கபிலதேவ நாயனார்,
பரணதேவ நாயனார், இளம்பெருமான் அடிகள், அதிராவடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி.
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான். இவை 63 நாயன்மார்களின் சரித்திரமும், 9 தொகை அடியார்களின் பெருமையும் கொண்ட நூல் ஆகும். அநபாய சோழன் என்ற மன்னன் சேக்கிழாரைக் கொண்டு திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை அரங்கேறச் செய்தான். அதைப் 12ஆவது திருமுறை ஆக்கினான்.
அனைவரும் திருமுறை பயின்று, பாராயணம் செய்து, சிவனருள் பெறுக.
திருச்சிற்றம்பலம்.