கிராமத்து விளையாட்டுகளும், யோகாசனங்களும். கிராம விளையாட்டுகளிலே, சில யோகாசனங்கள் இயற்கையாவே அமைந்திருக்கின்றன.
கோளி (கோலி இல்லை, கோளி என்பதே சரி – கோளமாக இருப்பதால்) என்ற ஆட்டத்திலே, குந்தி உட்கார வேண்டும். குந்தி உட்காரும்போது, அதைக் குக்குடாசனம் என்பார்கள். குக்குடம் என்றால் கோழி.
கிட்டிப்புள் (புல் இல்லை, புள் என்பதே சரி). இதிலே ஒரு கிட்டி இருக்கும். ஒரு புள் இருக்கும். புள் என்றால் பறவை. அது பறந்து போவதனால் கிட்டிப்புள் என்று பெயர். அதைத் தலைக்குழியில் இருந்து கெந்த வேண்டும்.
அந்த சமயத்திலே, இரண்டு கால்களை அகல வைத்த நிலையிலே, குனிந்து அந்த புள்ளைக் கிட்டியால் கெந்த வேண்டும். அந்த நிலை திரிகோணாசனம், முக்கோண வடிவிலே உடல் அமைந்திருக்கும்.அந்தக் கிட்டியினாலே புள்ளை அடிக்கும்போது, முழங்காலை மடக்கிக்கொண்டு பஸ்கி எடுப்பது போல Squats என்று சொல்வார்கள். அந்த நிலை, அதற்கு பெயர் உத்கடாசனம்.
பம்பரம் விளையாடும்போது, இழுப்பு, சாட்டை, குத்து என்று பலவகைகள் உண்டு. அதிலே இழுப்பு என்பதின்போது, ஒரு காலை முன்னை வைத்து, மறுகாலை மடக்கி ‘ங’ போல் வளைய வேண்டும். அது வீரபத்ராசனம் என்ற நிலை.
அடுத்ததாக, நரிபுடிச்சான் என்ற ஒரு விளையாட்டு உண்டு. இதை ஆற்றங்கரை மணலிலே விளையாடுவார்கள். பத்மாசனம் போட்டுக்கொண்டு உட்கார வேண்டும் இரண்டு கால்களையும் மடக்கி. அதைப் பிறை பிரித்துவிட வேண்டும். அதைப் பிரித்து விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதுதான் விளையாட்டு. இதில் பத்மாசனம் இயற்கையாகவே அமைந்திருக்கும்.ஆனால் அதைக் காலைப் பிடித்து இழுப்பவர்களைத் தடுப்பதற்காக, முதுகை வளைத்துத் தலையால் தரையைத் தொடும் நிலையிலே வைத்துக் கொள்வார்கள். அந்த நிலை பத்மாசனம் போட்டுக்கொண்டே முதுகால் குனிவது என்பது யோகமுத்ரா என்ற ஆசனம் ஆகும்.
அடுத்ததாக, பச்சைக்குதிரை தாண்டுவது என்று ஒன்று உண்டு. ஒருவர் குனிந்து கொள்ள வேண்டும். குனிந்து கொள்ளும்போது, முழுவதும் குனிந்து பாதத்தைக் கையால் தொட்டால் அதற்குப் பெயர் பாத-ஹஸ்தாசனம். அப்படியில்லாமல் ,முழங்காலிலே கையை Stand போல் வைத்துக்கொண்டு நிற்பார்கள்; அவர் மேலே தாண்டவேண்டும். அந்தப் பாதி நிலை, பாதி குனிகின்ற நிலை, இது அர்த்த-பாத-ஹஸ்தாசனம்.ஆனால் குதிக்கும் முன், குனிந்து கொண்டிருப்பார் ஒருவர்; அவர்மேலே இரண்டு கைகளையும் வைத்து, தாண்டுபவர் இரண்டு கால்களையும் இரண்டு பக்கத்திலே அகட்டிக் கொண்டு தாண்டுவார்கள். அந்த ஒரு கணநேரம் கையை வைத்து, இரண்டு கால்களையும் விரித்துக்கொண்டு, தாங்கி நிற்கும் நிலை தித்திபாசனம்.
தவளைத்தத்து என்று ஒரு விளையாட்டு உண்டு. பொதுவாக 1-ம், 2-ம், 3-ம் வகுப்பிலே தவளைத்தத்து போட்டியும் நடைபெறும். FROG RACE என்று சொல்வார்கள்;. இந்த FROG RACE-இலும் குக்குடாசனம் வருகிறது. காலையும், கையையும் வைத்துக் குந்திக்கொண்டு உட்கார்வது. தாண்டும்போது, கையை வைத்து ஒரு கணம், காலை அகட்டி வைத்துக்கொண்டு தாண்டவேண்டும். அந்த நிலையுமே தித்திபாசனம் என்பதாகும்.
கோழிச்சண்டை என்று சொல்வார்கள். இதிலே கோழி மாதிரி காலை மடக்கிக்கொண்டு, கோழி எப்போதுமே ஒரு காலைட்த் தூக்கிக்கொண்டே இருக்கும். அந்த நிலையிலே தூக்கிக்கொண்டு தத்தித் தத்தி செல்லவேண்டும். அதற்குப் பெயர் உத்தித-பாத-ஹஸ்தானம். தூக்கிய நிலையிலே பாதம் இருக்கின்றது. ஒரு கையால் ஒரு காலையும் பிடித்துக்கொள்ள வேண்டும். இது உத்தித-பாத-ஹஸ்தாசனம்.
பாண்டி விளையாடுவார்கள். பாண்டி விளையாடும்போது ஒருகாலை வைத்துத் தத்தித் தத்தி செல்வார்கள். இது உத்தித-பாத-ஹஸ்தானத்திலே ஒருவகையாகும்.
கபடி விளையாடும்போது, மூச்செடுக்க வேண்டும். கபடி கபடி என்று சொல்லிக்கொண்டே இருத்தல். இது மூச்சை அடக்கும் பயிற்சியான பிராணாயாமத்திலே ஒருவகை.
அடுத்தது கவை. கவைக்குச்சி என்று சொல்வார்கள். ஒரு L வடிவிலே இருக்கும் கம்பு; பொதுவாக வேலியிலிருந்து வெட்டிக்கொண்டு வருவார்கள். அதை இழுத்துக்கொண்டு ஓடவேண்டும். இழுத்துக்கொண்டு ஓடும்போது ஒருத்தரை நாம் தொட்டுவிட்டால் அவரை OUT என்று சொல்வோம். எந்த இடத்திலே பிடித்தாரோ, அந்த இடத்திலிருந்து தலைப்பு என்று சொல்வார்கள்; அந்த இடம் வரையில், அவர் மூச்சைப் பிடித்துக் கொண்டு ஓடிவர வேண்டும். இதுவும் மூச்சையடக்கும் பயிற்சியான பிராணாயாமம்.
இதுபோல ஒரு 10, 20 விளையாட்டுகள் தெரிந்து கொண்டால் 10, 20 ஆசனங்கள் வந்து விடுகின்றன.
பந்தல் கால்களிலே ஏறிக்கொண்டு கைகளையும், கால்களையும் அதனுடன் முறுக்கிக்கொள்வது. எத்தனை நேரம் அப்படியே கட்டிக்கொண்டு பந்தல் காலிலே தொங்கிக்கொண்டிருப்பது என்பது ஒரு போட்டி. கைகளையும், கால்களையும் பின்னிக் கொண்டிருக்கும் நிலை விருட்சாசனம் ஆகும்.
அதைப்போல் ஆற்றங்கரையில் குளிக்கும்போது கோட்டான் கோட்டான் என்று ஒரு விளையாட்டு. ஒருவர் தண்ணீரிலே அமுங்கிக் கொள்ளவேண்டும். தண்ணீரிலே எவ்வளவு நேரம் மூச்சை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருக்க முடியுமோ அதுவும் பிராணாயாமத்தியலே ஒரு வகை.
குழந்தைகளுக்கு இந்த பிராணாயாமத்தை ஒரு இடத்திலே உட்கார்ந்து கொண்டு செய் என்றால் அவர்கள் செய்யமாட்டார்கள். அதனால் ஒரு ஒரு விளையாட்டிலும் ஒரு சிறிய யோகாசனத்தைப் புகுத்தியிருக்கிறார்கள்.
வாழ்க பாரகம், வெல்க தமிழகம்.