குடமுழுக்கு பாகம் – 2. முதல் பகுதியிலே காப்புக்கயிறு தயார் செய்வது வரை பார்த்தோம்.
பிறகு நிலத்தேவர் வாஸ்து வழிபாட்டுக்கு உரிய பொருள்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகு வேள்விச்சாலையிலே (யாகசாலையிலே) சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.
திருச்சுற்றுக் கலசங்கள் 27 அல்லது 63 கலசங்கள் எல்லாம் சரிசெய்ய வேண்டும். பீடக் கலசங்கள் என்று சொல்வார்கள். வேதிகைகள் ஒவ்வொன்றை சுற்றிலும் 8 கலசங்கள் இருக்கும். அதற்குப் பிறகு வேள்விச்சாலையின் வடமேற்கு மூலையிலே, தனியாகச் சந்திர கலசம் என்று வைப்பார்கள். பிறகு வேதிகை மேடை, குண்டங்களை அலங்கரிக்க வேண்டும்.
வாழை இலை, அரிசி, சித்திரங்கள் எல்லாம் வைத்து அலங்கரிக்க வேண்டும். வேள்விச்சாலையிலே பிறகு வேள்வி முதன்மை வழிபாடு (பூர்வ பூஜை) தொடங்க வேண்டும்.
இதற்கு முதலாவதாக இறைஆணை பெறுதல். இந்த இறைஆணை பெறுதல் என்பது குரு வழிபாடாகும். நம்முடைய குருவையெல்லாம் நினைத்துக்கொண்டு, சைவ சமயம் என்றால் நால்வர் துதியாகவும், ஆழ்வார்கள் துதியாகவும் வேதங்களையும் மனத்தில் தியானிக்க வேண்டும். அடியார் கூட்டத்தை வணங்கவேண்டும்.
திருப்பணி நன்றாகச் செய்யவேண்டும் என்பதால், திருப்பணிக்கு உண்டான சிறப்பைச் சொல்லி மந்திரங்களை ஓத வேண்டும். அதற்குப் பிறகு தூய நீராக்கல் என்று சொல்வார்கள். இந்தத் தூயநீர், கலசங்களிலே இருக்கும் நீரிலே எல்லாவற்றிலும் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய தீர்த்தங்களை வரவழைப்பதற்காக, மந்திரங்களைச் சொல்லவேண்டும்.
பிறகு ஐவகைத் தூய்மை என்பார்கள். இதிலே முதலில் உடல் தூய்மை. ஆன்மசுத்தி. ஆன்மசுத்திக்காக மந்திரங்களையும், தோத்திரங்களையும் சொல்லவேண்டும்.
பிறகு ஸ்தான சுத்தி இடதூய்மை என்பார்கள். இடத்தைத் தூய்மையாக வைப்பதற்கு மந்திரங்களைச் சொல்லவேண்டும்.
பிறகு த்ரவ்ய சுத்தி என்பார்கள். வழிபடு பொருள்களைத் தூய்மைப்படுத்த வேண்டும். பூஜைக்குண்டான பொருள்கள், பாத்திரங்கள் எல்லாவற்றையும் தூய்மைப்படுத்த வேண்டும்.
அதற்கு பிற்கு மந்திரசுத்தி என்பார்கள். மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
பிறகு லிங்கசுத்தி. தீர்த்தமுள்ள கலசங்கள்தான் லிங்கமாகப் போற்றப்படுகின்றன. அவற்றையும் தர்பையை வைத்துக்கொண்டு சுத்தம் செய்யவேண்டும்.
இதற்குப் பிறகு திருவிளக்கு வழிபாடு. எந்த நற்செயலைத் தொடங்கும் முன்பும் திருவிளக்கு ஏற்றிய பிறகு தொடங்குவது முறை.
5 முகமுள்ள திருவிளக்கைப் பொதுவாக வாழைஇலை, பச்சரிசி மீது பரப்பிவைத்து, அந்த விளக்கை ஏற்றி, தோத்திரங்களைச் சொல்லவேண்டும். திருவிளக்குகளில் சக்திகளை எழுந்தருளச் செய்யவேண்டும். திருவிளக்கிற்கு மந்திர வழிபாடு, மலர் வழிபாடு, திருமுறை, பாசுரங்களையெல்லாம் பாடி வழிபட வேண்டும்.
அதற்கு பிறகு ஆனைந்து வழிபாடு. பசுவிலிருந்து பெறப்பட்ட பால், தயிர், நெய், கோசலம், சாணம் ஆகியவற்றைத் தனித்தனியே கிண்ணங்களில் வைத்து, மாவிலை வைத்து மந்திரங்களைச் சொல்லி வழிபடவேண்டும்.
பிறகு மத்தள வழிபாடு. இசைக்கருவி பொதுவாக மத்தளத்தையோ, தவிலையோ வைத்து, அதற்குப் பூசை செய்து, வாசிப்பவர்க்குப் புத்தாடைகள் கொடுத்து, மங்களகரமாக நிகழ்சி நடப்பதற்காக மங்கள வாத்தியங்களுக்கு வழிபாடு நடத்தவேண்டும்.
அதற்குப் பிறகு மூத்த பிள்ளையார் வழிபாடு விக்னேஶ்வர பூஜை.
எந்த ஒரு பூஜை செய்வதற்கு முன்பும் தடையேதும் ஏற்படக்கூடாது என்பதற்காக, மஞ்சளிலோ, பசுஞ்சாணத்திலோ பிடித்துவைத்த பிள்ளையாரை ஆவாகனம் செய்து, மலர் அர்ச்சனை செய்து, திருமுறைப் பாக்களைப் பாடி, வாழ்த்துச் சொல்லி, மூத்த பிள்ளையார் வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.
மூத்த பிள்ளையார் விக்னேஶ்வர பூஜை நடந்து முடிந்த பிறகுதான் சங்கல்பம் சொல்வார்கள். இது வேண்டுதல் அல்லது விண்ணப்பம். இந்த வழிபாடு எதற்காகச் செய்கிறோம், இதற்குண்டான நிகழ்சிகள் எல்லாம் தடங்கல் இல்லாமல் நடைபெற வேண்டும், எல்லோருக்கும் மங்கலம் உண்டாக வேண்டும், ஊருக்கும், உலகுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்றெல்லாம் விண்ணப்பித்துக்கொண்டு, பூஜையை ஆரம்பிக்க வேண்டும். இது சங்கல்பம் எனப்படும்.
அதற்குப் பிறகு பஞ்சபூத பூஜை. ஐம்பூத வழிபாடு என்பார்கள். முதலிலே நிலம். நிலத்திற்கு வழிபாடு செய்ய வேண்டும். பிறகு நீருக்கு வழிபாடு செய்ய வேண்டும். நெருப்புக்கு வழிபாடு செய்ய வேண்டும். பிறகு காற்று, பிறகு ஆகாயத்திற்கு வழிபாடு செய்ய வேண்டும். இவற்றையெல்லாம் பாவனையாக உரு இருந்தாலோ, அருவத்திலோ வழிபட்டு, மலர் அர்ச்சனை செய்து, ஸ்தோத்திரங்களை ஓதி வழிபாடு செய்ய வேண்டும்.
பிறகு திருமகள் வழிபாடு செய்ய வேண்டும். எல்லாவகைச் செல்வங்களும் தேடிவர வேண்டும் என்பதற்காகத் திருமகள் வழிபாடு நடத்த வேண்டும். ஒவ்வொரு வழிபாட்டிலும் தியானம், ஆவாகனம், மலர் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.
பிறகு நிலத்தேவர் வழிபாடு என்பார்கள். பிரம்மா உள்ளிட்ட 53 தேவர்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். இவர்களெல்லாம் தான் நிலத்தைப் பாதுகாத்து வருபவர்கள். நிலத்தேவர்களுக்கு வழிபாடு செய்ய வேண்டும். அதற்கு பிறகுதான் வேள்வி வழிபாடு ஆரம்பிக்கிறது.
சிவ சிவ.