ஒவ்வொருவரும் என்னென்ன தர்ப்பணம் செய்யவேண்டும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். இதை நீத்தார் கடன் என்பார்கள்.
திருக்குறளிலே கடவுள் வாழ்த்து, அடுத்ததாக வான்சிறப்பு, அடுத்து அறன் வலியுறுத்தல் (தர்மத்தைப் பற்றி சொல்லிவிட்டு), அடுத்ததாக நீத்தார் பெருமை என்று வள்ளுவர் சொல்லியிருப்பார். எதற்காக என்றால், நீத்தார் என்றால் இறந்து போன நமது முன்னோர்கள்; முன்னோர்கள் இல்லையென்றால் நாம் இல்லை.
முன்னோர்கள் பணக்காரர்களாக இருந்திருக்கலாம், ஏழையாக இருந்திருக்கலாம், படித்தவர்களாக இருந்திருக்கலாம், படிக்காதவர்களாக இருந்திருக்கலாம், நல்லவர்களாக இருந்திருக்கலாம், கெட்டவர்களாக இருந்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் பிறந்திருக்கவில்லை என்றால், இன்று நாம் பிறந்திருக்க முடியாது. அதனாலே நீத்தார் பெருமை என்பதை வள்ளுவர் அழகாகச் சொல்லியிருக்கிறார். நீத்தார் கடன் என்பது உலகத்திலே இருக்கின்ற எல்லா நாகரீகங்களிலும் இருக்கின்ற ஒரு முக்கியமான பண்பாகும்.
இந்த நீத்தார் கடனுக்காக என்னென்ன செய்யவேண்டும்? ஒருவர் காலமான பிறகு 10 நாட்கள், 16 நாட்கள் என்று காரியம் செய்வார்கள். மாதாமாதம் செய்வார்கள். ஒருவருடம் ஆனபிறகு அவர்களுக்குத் திதி கொடுப்பது என்று சொல்வார்கள். இது முதன்மையான ஒரு நீத்தார் கடன்.
இதற்குப் பிறகு தர்ப்பணம். இதற்கு எள்ளை வைத்துக்கொண்டு நீரை அவர்களுக்கு அர்க்கியம் விடவேண்டும். தர்ப்பைப் புல், எள், நீர் இவை மூன்றும் தான் இதற்குத் தேவையானவை.
ஒவ்வொரு மாதத்தினுடைய அமாவாசையிலும் நீத்தாருக்காகத் தர்ப்பணம் செய்யவேண்டும். அதைப் போல் ஒவ்வொரு மாதப்பிறப்பிலும் செய்வது வழக்கம் உண்டு. ஆனாலும் பொதுவாக, சித்திரை மாதப் பிறப்பு, ஆடி மாதப் பிறப்பு, ஐப்பசி மாதப் பிறப்பு, தை மாதப் பிறப்பு; 3 மாதங்களுக்கு ஒருமுறை நிச்சயம் தர்ப்பணம் செய்யவேண்டும்.
இதைத் தவிர ஆவணி மாதத்திலே வருகின்ற பௌர்ணமி அமாவாசைக்கு இடைப்பட்ட காலமானது மஹாளய பக்ஷம் மஹாளயம். மஹாளய அமாவாசை என்றும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒருவருடைய தந்தையார், உதாரணமாக பஞ்சமி என்கிற திதியிலே காலமாகியிருந்தால், அந்த மஹாளய பக்ஷத்திலே பஞ்சமி அன்று, அவருக்குத் தர்ப்பணம் செய்யவேண்டும். சிலபேர் மஹாளய பக்ஷம் முழுவதுமே தர்ப்பணம் செய்வார்கள். அதுவும் வழக்கத்திலே இருக்கின்றது.
கிரகண காலங்கள் சூரிய, சந்திர கிரகண காலங்களும் மிகவும் புண்ணியமானவை. கிரகண காலங்களிலும் தர்ப்பணம் செய்வது நீத்தாருக்காக, நம்முடைய முன்னோருக்காக செய்யவேண்டியது மிகவும் அவசியம்.
ஒருக்கால் செய்யமுடியவில்லை என்றாலும் என்றாவது ஒருநாள், எதாவது ஒரு அமாவாசையிலோ, எதாவது ஒரு மாதப்பிறப்பிலோ நீத்தார் கடன் அவசியம் செய்யவேண்டும். ஏனென்றால் எப்படி வரலாறு படிக்கிறோமோ, வரலாற்றிலே நம்முடைய பழைய ராஜாக்களைப் பற்றிப் படிக்கிறோம், அரசாங்கத்தைப் பற்றி தெரிந்துகொள்கிறோம், நாகரீகங்களைப் பற்றி தெரிந்து கொள்கிறோம்; அதுபோல் நம்முடைய முன்னோர்களைப் பற்றித் தெரிந்து கொண்டு, அவர்களுக்குச் செய்யும் நன்றிக் கடனே நீத்தார் கடன் ஆகும். தந்தையார் இறந்த பிறகுதான் இதைச் செய்வது வழக்கம்.
தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா -அப்பா வழியிலே இந்த 3 பேரையும் சொல்வார்கள். அதேபோல் தாயாரும் காலமாகிவிட்டால் தாயார், பாட்டி, கொள்ளுப் பாட்டி இந்த மூன்று பேருக்கும் தர்ப்பண்ம. தாயார் உயிருடன் இருந்தால் பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி என்று மூவரும் தந்தை வழியிலே.
அதேபோல் தாயார் வழிப் பாட்டனார் இறந்து விட்டால் தாயார் வழியில் இருக்கின்ற தாத்தா, கொள்ளுத் தாத்தா, எள்ளுத் தாத்தா, தாயார் வழியிலே வந்திருக்கின்ற பாட்டி, கொள்ளுப் பாட்டி, எள்ளுப் பாட்டி ஆகியோருக்கும் செய்யவேண்டும்.
ஏனென்றால் ஒருவருக்குத் தாயும் முக்கியம், தந்தையும் முக்கியம். 2 வழிகளில் இருக்கின்ற முன்னோர்களும் முக்கியம் என்பதற்காகவே, இந்த நீத்தார் கடன் என்பது ஏற்பட்டிருக்கின்றது.
இந்த நீத்தாருக்காக அமாவாசை காலங்கள், மாதப்பிறப்பு காலங்கள், கிரகண காலங்கள், மஹாளயம் இந்த 4 நாட்களும் அவசியம் தர்ப்பணம் செய்யவேண்டும். தந்தைக்குத் திதி கொடுக்கும் நாளிலும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
சிவசிவ.