தமிழிலே பூஜை செய்யும் முறை. பொதுவாகப் பூஜை என்பது சோடச உபசாரங்கள். உபசாரம் என்றால் பணிவிடை. சோடசம் என்றால் 16. பதினாறு விதமான பணிவிடைகளைச் செய்வது பூஜையினுடைய அங்கமாகும்.
வீட்டிற்கு விருந்தாளிகள் வருகிறார்கள் என்றால் அவர்களை நினைத்துக்கொண்டிருப்போம், பின்னர் அவர்களை வரவேற்று அமரச்செய்வோம். பின்னர் கால், கை கழுவுவதற்கு தண்ணீர் கொடுப்போம். குடிப்பதற்கும் தண்ணீர் கொடுப்போம். இதேபோல், பணிவிடைகள் செய்வதுபோல், இறைவனை விருந்தினராக வீட்டிற்கு அழைத்துப் பணிவிடை செய்வதன் நோக்கம்தான் பூஜை.
இவை என்னென்ன என்று பார்த்தால், முதலில் தியானம்.
தியானம் என்பது மனத்தினாலே நினைப்பது. அடுத்தது ஆவாகனம். இறைவனை எழுந்தருளச் செய்வது. மஞ்சள் பொடியில் பிள்ளையார் செய்து வைக்கிறோம். அல்லது மஞ்சள் கொத்து, இஞ்சிக்கொத்தில் சூரியநை எழுந்தருளச் செய்வோம். இதேபோல் இறைவனை ஏதாவது ஒரு உருவத்தில் ஆவாகனம் செய்வது, அதை எழுந்தருளச் செய்வது என்பார்கள்.
அடுத்தது ஆசனம். ஆசனம் என்றால் இருக்கை அமர்வதற்கு.
ஆசனத்திற்குப் பிறகு பாத்யம் என்பார்கள். கால் அலம்புவதற்கு நீர் தருதல். அர்க்கியம் என்றால் கை அலம்புவதற்கு நீர் தருதல். குடிப்பதற்கு நீர் தருதல் ஆசமனீயம் என்று பெயர்.
இதற்கு பிறகு ஸ்நானம் என்பார்கள் குளித்தல், நீராடுதல் என்று சொல்வார்கள், இறைவனை நீராடச் செய்தல். இந்த நீராடுதலில்தான் பால் அபிஷேகம், நெய் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் மாப்பொடி மஞ்சள் அபிஷேகம், சந்தன அபிஷேகம், இளநீர் அபிஷேகம் என்று பலவிதமான அபிஷேகங்களைச் செய்யலாம்.
அதற்குப் பிறகு உடை உடுத்தி கொள்ளுதல். வஸ்த்திரம் என்றால் உடை தருதல், ஆபரணம் என்றால் அணிகலன். குங்குமம், சந்தனம் இவற்றையெல்லம் இறைவனுக்குச் சாற்றுவதும் பணிவிடையினுடைய ஒரு பகுதி.
அதற்குப் பிறகு பூஜை செய்வோம். இந்த பூஜை என்பது மலராலோ, இலையாலோ செய்யலாம். வில்வம், துளசி, செம்பருத்திப் பூ, பவளமல்லிப் பூ, மல்லிகை, அரளி. இந்த மாதிரி பூக்களால் அர்ச்சனை செய்வதுதான் அர்ச்சனை. இது மலர் வழிபாடு.
அதற்குப் பிறகு தூபம் காட்டுவோம். அகில் புகை, சாம்பிராணி புகை இவையெல்லாம் தூபம். விளக்குக் காட்டுவது என்பதுதான் தீபம். நெய்தீபம் காட்டுவார்கள்.
பிறகு படைத்தல், உணவு படைத்தல், அமுது ஊட்டல் என்று சொல்வார்கள். அதுதான் நைவேத்தியம்.
அதன்பிறகு தாம்பூலம். சாப்பிட்ட பிறகு நாம் வெற்றிலைப்பாக்கு போடுவது போல் இறைவனுக்குத் தாம்பூலம்.
அதற்குப் பிறகு பேரொளிக்காட்டுதல் அதாவது பெரிய தீபாராதனை என்று சொல்வார்கள். பேரொளி காட்டிய பிறகு நாம் பிரதக்ஷிணம் செய்வோம். சாமியை வலம் வருதல்.
பிறகு நமஸ்காரம் செய்வோம், வணங்குதல். சிரந்தாழ்த்தி வணங்குதல். அதற்கு பிறகு பிரார்த்தனை செய்வோம். நமக்கு இதெல்லாம் வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
அதற்குப் பிறகு ராஜ உபச்சாரம் என்று பெயர். அரசர்களுக்கு எப்படி மரியாதை செய்வார்களோ கவரி வீசுவார்களோ, விசிறி வீசுவார்களோ, குடை பிடிப்பார்களோ, வெண்கொற்றக்குடைபிடிப்பார்களோ அதேபோல் ராஜாக்களுக்கு உண்டான மரியாதை யானைகளை வரச்சொல்வார்கள், குதிரைகளை வரச்சொல்வார்கள், பாட்டுப் பாடுவார்கள், நர்த்தனம் ஆடுவார்கள் இவையெல்லாமே ராஜஉபசாரம்.
கடைசியிலே மந்திரபுஷ்பம் என்று சொல்வார்கள். எல்லோரும் கைகளிலே பூக்களை எடுத்துக்கொண்டு இறைவனை வழிபட வேண்டும். இப்படி செய்வது பூஜையினுடைய அங்கம்.
நேரத்திற்கேற்றாற்போல நிறைய மந்திரங்களையும் சொல்லலாம், நிறைய அர்ச்சனைகள் சொல்லலாம். 16 போற்றிகள், 108 போற்றிஅர்ச்சனை, 1008 போற்றி அர்ச்சனை வழக்கம்.
இதற்கு முடியவில்லையா? 6 உபசாரங்கள் அல்லது 8 உபசாரங்கள் மட்டும் பண்ணுவோம் என்பது நேரத்திற்கு ஏற்றாற் போலவோ, வசதிக்கேற்றாற் போலவோ அல்லது இடத்திற்கேற்றாற்போலவோ கூட்டிக் கொள்ளலாம், குறைத்துக்கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் இறைவனுக்கு செய்யும் பணிவிடைகள் ஆகும்.
இந்தப் பூஜையினை தமிழிலும் செய்யலாம், வடமொழியிலும் செய்யலாம், எந்த மொழியிலும் செய்யலாம்.
ஜெய ஜெய சங்கர.