என்பது திருமூலருடைய திருமந்திர வாக்கு. அந்த அடிப்படையில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலமாக நம்முடைய நோய்கள், அல்லல்கள், இன்னல்கள் தீர்ந்து இருள்கெட்டு இன்ப ஒளி செழிப்பதாக அமையும். அத்தகைய விளக்கேற்றி வெளியினை அறியும் வகையில் நம் வேதனையாகத் திகழும் உலகெங்கும் பரவியிருக்கும் பெருந்தொற்றாகிய கொரோனாவாகிய கோவிட்-19 நுண்ணுயிர் தாக்கம் முற்றிலும் நீங்க இறைவனுடைய திருவடியே சரண் என்பது தான் நம்முடைய முன்னோர்கள் வாக்கு. இதைத்தான் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக
"அவ்வினைக்கு இவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றோ
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்"
என்று திருச்செங்கோட்டில் சுரநோயைப் போக்குவதற்காகத் திருஞானசம்பந்தர் அருளிச் செய்தார். அத்தகைய நோயைப் போக்குவதற்கு இறைவனை வேண்டும் வகையில் வரக்கூடிய திருவள்ளுவராண்டு 2052 பிலவஆண்டு சித்திரைத் திங்கள் 13-ஆம் நாள் 2021 ஏப்ரல் 26 ஆம் நாள் சித்திரை நிறைநிலா நாள் (சித்ரா பெளர்ணமி) வருகின்றது.
பெளர்ணமி எனப்படும் நிறைநிலா நமக்குச் சிறப்பான நாள். கார்த்திகைத் திங்கள் நிறைநிலா நாளான பெளர்ணமி அன்றுதான் நாம் சோதி வடிவமாக இறைவனைக் கண்டு இல்லங்கள் எங்கும் விளக்கேற்றி இறைவனை வேண்டி அருள் பெறுகின்றோம்.
அதுபோலச் சித்திரைத்திங்கள் நிறைநிலா நாளாகிய இந்த சித்ரா பெளர்ணமிக்குச் சிறப்புகள் பல இருக்கின்றன. இசைஞானியாருடைய குருபூசை, தொல்காப்பியருடைய நாள், இத்தகைய சிறப்பு வாய்ந்த நன்னாளில் மாலை 5 மணியளவிலே அன்பர்கள் எல்லாரும் இல்லங்களிலும் எல்லாத் திருக்கோயில்களிலும் கூடியிருந்து, 5 மணியளவில் விளக்கினை ஏற்றி, அந்த விளக்கு வழிபாட்டின் பயனாக, உலகெங்கும் பரவிப் பெருநோயாகத் திகழும் கொரோனா கோவிட் - 19 இன் நுண்ணுயிர்த் தாக்கம் நீங்கவும், அதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய தொண்டுள்ளம் படைத்த அனைவரும் எல்லா வளங்களும் பெறவும், நாமும் தக்க முறையிலே சுகாதாரத்தைப் பேணி, சமூக இடைவெளிகளை பேணி, அரசு சொல்லும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, நோயற்ற வாழ்வாக இருக்கக்கூடிய குறைவற்ற செல்வத்தைப் பெறவும், இந்த ஒரு முயற்சி அகில பாரத துறவியர்கள் சங்கத்தாலும் பல்வேறு ஆதீனங்கள், துறவிகள் ஆகியோருடைய முயற்சியாலும் எடுக்கப்பட்டிருக்கின்றது.
இத்தகைய நல்ல நிகழ்வைக் கடைப்டிக்க வேண்டும் என்று அகில பாரத துறவியர்கள் சங்கத்தின் புரவலர்களாகத் திகழும் சிரவையாதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள், நிறுவனர் தவத்திரு இராமனந்த அடிகளார், செயலாளர் சேலம் ஆத்மானந்த அடிகளார், பொருளாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேதாந்த ஆனந்தா அடிகளார் மற்றும் நிர்வாகக்குழுவினர், துறவியர் பெருமக்கள் அனைவரின் சார்பாக அன்போடு வேண்டிக்கொள்கின்றோம். ஆகவே அன்பர்கள் அனைவரும் வருகின்ற சித்ரா பெளர்ணமி அன்று சித்திரைத் திங்கள் 13ஆம் நாள் (26/04/2021) அன்று மாலை 5 மணியளவில் இல்லங்களில் திருக்கோயில்களிலும் விளக்கேற்றி வைத்து "இந்தப் பெருந்தொற்றை விரைவில் இல்லாமல் செய்யவேண்டும். எல்லா மக்களும் நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற வேண்டும். மக்களுக்குத் தேவையான நோய்நீக்கும் பொருட்கள் தட்டுப்பாடு இன்றிக் கிடைக்க வேண்டும். இதற்காக உழைப்பவர்கள் எல்லா வளங்களும் பெற வேண்டும்” என வேண்டி மேற்காண் பாடல்களையும் ஓதி வழிபாடுகளை மேற்கொள்வோம். அனைவரும் திரண்டு சிறப்பான முறையில் "விளக்கேற்றி விடிவினைக் காண்போம்".
திருச்சிற்றம்பலம்.